திமுக மறுசீரமைப்பு- மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Mathi

MK Stalin Announces Strategic DMK Reorganization

திமுக மறுசீரமைப்புக்கான ஆலோசனை குழுவை அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று ஜூன் 30-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் வளத்துக்கும் நலத்துக்கும் 75 ஆண்டுகளைக் கடந்தும் உழைத்து வரும் பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆறு முறை தமிழ்நாட்டை ஆண்டது கழகம். இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது கழகம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக இருப்பதும் கழகம் தான்.

ADVERTISEMENT

இத்தகைய அரசியல் வரலாற்றில், தேர்தல் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தபோதும், கழகம் என்றைக்கும் வலுமிக்க எஃகுக் கோட்டையாகவே கம்பீரமாக நிற்கிறது. அதற்குக் காரணம் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளும், கழகத்தின் அமைப்பு முறையும் ஆகும்.

இந்த இரண்டும், நாளுக்கு நாள் வலிமை பெற்று வரும் சூழலைக் கழகம் உருவாக்கி வைத்துள்ளது. காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளது கழகம். கொள்கையை அடிப்படையாக வைத்து, அமைப்பு முறையிலும் கட்டமைப்பிலும் புதுமைகளைச் செய்ய நாம் தவறியதில்லை. அதேபோன்ற மறுசீரமைப்பை மீண்டும் தொடங்க இருக்கிறோம் என நான் அறிவித்தேன். அதற்கான அறிவிப்பை, இந்த அறிக்கை மூலமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

ADVERTISEMENT

கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான உடனேயே கழக உடன்பிறப்புகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என நான் முடிவெடுத்தேன். இதற்கான குழுக்களை அமைத்தேன். ஒவ்வொரு தொகுதியாகச் சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேரடியாகச் சந்தித்து எனது கண்களும் காதுகளுமாக இருந்து அவர்தம் கருத்துகளைப் பெற்று வருமாறு 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு குழுவுக்கும் தலா இருவர் என 38 பேரை ஆய்வுக்குழுவினராக அனுப்பி வைத்திருந்தேன்.

தமிழ்நாடு முழுவதும் இவர்கள் சென்றார்கள். எனது எதிர்பார்ப்பு எள் முனையளவும் சிதையாமல் 38 பேரும் இரவு பகல் பாராது கழகத்தினரைச் சந்தித்து – ஆய்ந்து அறிக்கைகளைத் தயாரித்து என்னை நேரடியாகச் சந்தித்துக் கொடுத்துள்ளார்கள். அறிக்கையை வழங்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் கலந்துரையாடினர். அவர்களின் கருத்துகளையெல்லாம் கேட்டறிந்து, அவர்கள் வழங்கிய அறிக்கையை ஒவ்வொரு நாளும் நானே படித்து குறிப்பெடுத்து வருகிறேன்.

ADVERTISEMENT

கழகத்தின் மீதும், கழகத் தலைமை மீதும் நிர்வாகிகளும் தொண்டர்களும் வைத்துள்ள ஆழமான பற்றுக்கும் – உண்மையான நம்பிக்கைக்கும் நான் தலைவணங்குகிறேன். இத்தகைய உடன்பிறப்புகளுக்குத் தலைமை வகிக்கும் தகுதியை நான் பெற்றுள்ளேன் என்பதை நினைத்தும் பெருமைப்படுகிறேன்.

கள ஆய்வுக்குழுவினர் ஒவ்வொரு தொகுதியாகச் சென்று, கழகத்தினர் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்தாலும், நிர்வாகிகள் அல்லாத கழக ஆதரவாளர்களும், இணையத்தில் களமாடும் களவீரர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர வாய்ப்பிருக்குமா எனவும் ஒரு கேள்வி எழுந்தது. அதன் விளைவுதான் ஆன்லைன் வழியாகக் கருத்துகளைப் பெற, ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற இணையதளத்தை உருவாக்கச் சொல்லியிருந்தேன்.

அதில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அவற்றை மனித தலையீடின்றி ஏ.ஐ தொழில்நுட்பம் வழியாக அறிக்கையாகத் தயாரித்து வழங்கியுள்ளனர். அவற்றையும் படித்துப் பார்த்து தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.

இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த கருத்து என்பது கழகத்தின் மறுசீரமைப்பு ஆகும். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புகளைத்தான் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். அதனடிப்படையில் மறுசீரமைப்பு குறித்தும், கழகத்தின் மறுகட்டுமானம் குறித்தும் எனக்கு சில கருத்துகள் இருக்கின்றன. கழகத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கிளைக் கழகங்கள் தொடங்கி தலைமைக் கழகம் வரை செய்யப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கு இது சரியான தருணம் என நான் நினைக்கிறேன்.

நம்முடைய கடந்தகால குறைகளைக் களைந்து, மக்களிடம் புதிய வடிவில் செல்வதற்கும் மறுசீரமைப்பும் – மறுகட்டுமானமும் மிக அவசியம் என்பதை நாம் உணர்ந்து, அதற்குத் தயாராகிட வேண்டும்.

இதுவரை கழகத்தினர் மூலம் எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகளையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து கழகத்தின் கட்டமைப்பில் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரையில் ஒரே சீரான மாற்றங்களைப் பரிந்துரைத்திட கீழ்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

திரு. தங்கம் தென்னரசு

திருமதி. கீதா ஜீவன்

திரு. அர. சக்கரபாணி

திரு. எஸ்.எஸ்.சிவசங்கர்

திருமதி. தமிழரசி இரவிக்குமார்

திரு. எம்.எம்.அப்துல்லா

திரு. இ. பரந்தாமன்

திரு. ச. முரசொலி, எம்.பி.,

டாக்டர். எழிலன்

திரு. எஸ்.கே.பி. கருணா

ஆகியோர் இதில் இடம் பெறுவர்.

இக்குழுவானது, கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கழகத்தின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், தேர்தல் பணிகளைச் செய்வதற்கான நிரந்தர அமைப்பு, தலைமைக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் (Think tank) போன்றதொரு அமைப்புக்கான தேவை, அக்குழுக்களுக்கான பணிகளின் மறுவரையறை உள்ளிட்டவைக் குறித்தும் பரிந்துரைகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கிடும்.

அடுத்த நூறாண்டுகளுக்குக் கழகத்தை வழிநடத்திடும் வகையிலான இப்பரிந்துரைகள், கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆகியோருடன் முழுமையாக விவாதிக்கப்பட்டு கழகத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share