திவாலாகிறதா ஆவின்.. வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

கோவை மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால், 650 முகவர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் மாதாந்திர ஆவின் பால் அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவது நிறுத்தம் செய்யப்படுவதாகவும், அதிகபட்ச சில்லறை விலையிலேயே இனி ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து பாஜக மாநிலச் செயலாளர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில தினங்களில் மட்டும். கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ. 2 தள்ளுபடி ரத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் சுமார் 30% வரை குறைவு, சில ஆவின் நிலையங்களில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற கெடுபிடி, மே மாதத்தில் மட்டும் 10 மாவட்டங்களில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்ட 60% பால் தர விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட அடிப்படைத் தேவைக்கு பெருமளவில் நம்பியிருக்கும். ஆவின் நிறுவனத்தில் இதுபோன்ற குளறுபடிகள் தொடருமானால். மக்கள் இரட்டிப்பு விலை கொடுத்து தனியார் பால் நிறுவனங்களேயே நாட வேண்டியிருக்கும். இது தமிழக மக்களை நிதிச்சுமைக்குள் தள்ளுவதோடு, அவர்களின் ஊட்டச்சத்தையும் பலிகடாவாக்கும்.

ADVERTISEMENT

ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு முந்தைய திமுக அரசு போதிய ஊக்கத் தொகையை வழங்காததால், பால் கொள்முதல் வீழ்ச்சியடைந்து, அதிக உற்பத்திச் செலவு ஏற்பட்டுள்ள நிலையில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஆவின் பாலின் தரத்திலும், விநியோகத்திலும், பொதுமக்களுக்கு கிடைக்கும் சலுகைகளிலும் சமரசம் செய்து, நஷ்டத்தை ஈடுசெய்ய முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, இனியும் மக்களின் ஊட்டச்சத்தில் கைவைக்கும் திட்டம் ஏதும் இருந்தால், அதைக் கைவிட்டு, ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும், அமுல் போன்ற பிற மாநிலப் பால் கூட்டுறவு நிறுவனங்களைப் போல. ஆவினும் செழிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share