Video: ஈபிஎஸ் கொடுத்த பதவியை ஏற்க போவது இல்லை – எஸ்.பி.வேலுமணி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

SP Velumani

அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கோயம்புத்தூரின் முக்கிய முகமாகப் பார்க்கப்படுபவர் எஸ்.பி. வேலுமணி. இவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.

இதன் முதற்கட்டமாக, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களில் ஒரு பகுதியினர் தனியாகச் செயல்படத் தொடங்கினர்.

ADVERTISEMENT

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தனர். கட்சியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆதரவு அளித்ததால், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நீக்கினார்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் மன்னிப்புக் கடிதம் அளித்து மீண்டும் இணைந்த எஸ்.பி. வேலுமணிக்கு, துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. புதிய பதவி வழங்கப்பட்டாலும், மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தினால் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்து அதிருப்தியிலேயே இருந்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அன்று எஸ்.பி. வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கட்சியின் கொடிகள், பேனர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் எதுவுமே இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது பேசிய எஸ்.பி. வேலுமணி, அதிமுக தலைமை மீதான தனது அதிருப்தி குறித்து ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகப் பேசினார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அந்த வீடியோவில், “எனக்கு இந்தத் துணைப் பொதுச்செயலாளர் பதவியே வேண்டாம் என்று சொல்கிறேன். என்னை நம்பி 30 மாவட்டச் செயலாளர்கள் வந்தார்கள்; அவர்களுக்குப் பதவி கொடுக்கவில்லை. அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவி வாங்கத் தயாராக இல்லை. நான் மட்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கே.பி. அன்பழகன், தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் இவர்களெல்லாம் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் ஜாம்பவான்கள்; சொந்தப் பணத்தைச் செலவு செய்து கட்சியை வளர்த்தவர்கள். அவர்கள் யாருக்குமே பதவி கொடுக்கவில்லை” என்று கொந்தளித்துப் பேசியுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share