திருச்சி கிழக்கில் போட்டியில்லை – ராகவா லாரன்ஸ்

Published On:

| By Pandeeswari Gurusamy

Actor Raghava Lawrence Compare the Public to Stray Dogs?

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட போவது இல்லை என (இன்று 30) நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடப் போவதாக பரவி வரும் செய்திகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அதில், “நான் படப்பிடிப்பிற்குச் செல்லும் இடங்களில் எல்லாம், “லாரன்ஸ் மாஸ்டர் திருச்சி கிழக்கில் நிற்கிறார், நீங்கள் வாருங்கள்” என்றும், “வாங்க எம்.எல்.ஏ சார்” என்றும் மக்கள் அன்போடு அழைக்கிறார்கள். உங்கள் அன்பிற்கு முதலில் நன்றி. ஆனால், இதில் ஒரு தர்மம் இருக்கிறது அல்லவா? என் மனதில் உள்ளதை இன்று ஓப்பனாகச் சொல்கிறேன்.

விஜய் சார் எப்போது ஹீரோ ஆனாரோ, அப்போதிருந்து அவருக்காகப் போஸ்டர் ஒட்டி, கட்சி ஆரம்பித்த பிறகு அதற்காக அடிமட்டத்திலிருந்து உழைத்த ஆரம்பகாலத் தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். விஜய் சார் வீட்டில் இன்னும் எத்தனை பேர் திருச்சி கிழக்கிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதை விஜய் சார் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் யாரை நிறுத்தினாலும் அவர்கள் ஜெயிப்பார்கள். ஏனென்றால், மக்கள் ஓட்டுப் போடுவது விஜய் சாரின் முகத்திற்காகத்தான்.

ADVERTISEMENT

அப்படிப்பட்ட இடத்தில் நான் போய் நிற்பது தர்மம் கிடையாது. யாரோ ஒருவர் விதை போட்டு, செடி முளைத்து, வேலி கட்டிப் பாதுகாத்து, அது மரமாகி கனி கொடுக்கும் போது, அந்தப் பழத்தை நான் வந்து பறித்துச் சாப்பிடலாமா? விதை போட்டவர் தானே சாப்பிட வேண்டும்?

அரசியல் தர்மம் இதுதான்:

நான் வரவேண்டும் என்றால் முதலில் கட்சியில் சென்று சேர வேண்டும் என்றால், முதலில் சாதாரண உறுப்பினராகச் சேர வேண்டும். கட்சிக்காகக் குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் உழைக்க வேண்டும். “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்பதுதான் எனது பாலிசி. முதலில் உழைப்பைப் பார்த்துவிட்டு, கட்சித் தலைமை (சி.எம்) அங்கீகரித்து ஒரு பொறுப்பைக் கொடுத்தால், அதில் இருந்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அதுதான் தர்மம்.

ADVERTISEMENT

விஜய்யிடம் கேட்கப் போகும் உதவி:

விஜய் சாரிடம் நான் ஒரே ஒரு உதவி கேட்க உள்ளேன். கலைஞர் ஐயா முதலமைச்சராக இருந்தபோது, நான் சில குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்ய உதவி கேட்டேன், அவரும் செய்தார். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் எனது அறக்கட்டளை மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் மல்லர்கம்ப வீடியோவை அனுப்பிய போது, அவர் அதை முதல்வர் ஸ்டாலின் சாருக்கு அனுப்பி, அவர்கள் முன்பே ஆட வைத்தார். அன்புமணி ராமதாஸும் பல உதவிகளைச் செய்துள்ளார்.

விஜய் சார் நீங்களே நடிகராக இருக்கும் போது, சொந்தக் காசைப் போட்டு ஒரு குழந்தையைக் காப்பாற்றினீர்கள். நடிகராக இருக்கும் போதே அத்தனை உதவிகளைச் செய்த நீங்கள், இப்போது முதல்வராக இருக்கும் போது, உங்களிடம் தைரியமாகவும் உரிமையோடும் என்னால் உதவி கேட்க முடியும். நீங்கள் நினைத்தால் இன்னும் ஆயிரம் குழந்தைகளுக்கு உதவலாம். அந்த உரிமையோடு நான் உதவி கேட்பதில் நியாயம் இருக்கிறது. அப்படி அவர் செய்யும் போது அதை நான் வெளியிலும் பெருமையாகச் சொல்வேன்.

நான் திருச்சி கிழக்கில் போட்டியிடப் போவதில்லை என்றுதான் சொன்னேனே தவிர, வேறு எங்குமே நிற்க மாட்டேன் என்று சொல்லவில்லை. தர்மத்தின்படி, பொறுமையாக அடிமேல் அடி எடுத்து வைத்து அரசியலுக்கு வருவோம்.”

இவ்வாறு ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share