முதல்வர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் 2-வது நாள் மாநாடு!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளின் 2-வது நாள் மாநாடு இன்று (ஜூன் 30) நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதலாவது மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களின் இந்த இரண்டு நாள் மாநாடு நேற்று காலை தொடங்கியது.

ADVERTISEMENT

நேற்று நடைபெற்ற முதல் நாள் மாநாட்டில், மக்களின் அடிப்படை வசதிகளில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். குறிப்பாக ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து வசதி போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளிலும் அதிகாரிகள் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்துவதோடு, மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக இந்த மாநாடு முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் இம்மாநாட்டில், அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி, காலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து, மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடனும், மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் நிறைவில் முதல்வர் விஜய் நிறைவுரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share