காங்கிரஸ் கட்சியை எந்த கட்சி தலைவர் விமர்சித்தாலும் பதிலடி கொடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரான மாணிக்கம் தாகூர் (Manickam Tagore) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நேற்று ஜூன் 29-ந் தேதி மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றார்.
அடிச்சா திருப்பி அடிப்போம்
இந்த நிகழ்ச்சியில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: என்னை பொறுத்தவரை, திமுக மாவட்ட செயலாளர் தளபதியோ, அனிதா ஆர். ராதாகிருஷ்ணனோ, ஆர். எஸ். பாரதியோ அல்லது இளங்கோவனோ, அவர்கள் எப்போது காங்கிரஸை விமர்சிக்கிறார்களோ, அப்போது நான் திருப்பி அடிப்பேன். யார் தவறாகப் பேசினாலும் திருப்பி அடிப்போம்.
நாங்கள் கிராம கமிட்டி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்போம்; கிராம கமிட்டி வேலை என்பது வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று கோஷம் போடுவது, சேவாதளம் சல்யூட் வாங்குவது, இதிலேயே நாங்கள் இருப்போம். நாங்கள் அமைதியான ஆட்கள். யாருடைய குடும்பத்தையும் கெடுக்க விரும்பாதவர்கள் நாங்கள். கிடைக்கிற சாப்பாட்டை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பவர்கள்.
உதயநிதியை விமர்சித்தது ஏன்?
ஆனால், எங்களை நக்கல் செய்வது, காங்கிரஸ் கட்சியைத் துரோகி என்று சொல்வது போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியைப் பற்றி நான் எப்போது பேசினேன்? எப்போது அவர் திமுக இளைஞரணி கூட்டத்தில், ராகுல் காந்தி ஒழிய வேண்டும் என்று கோஷம் போட வைத்தாரோ, எப்போது காங்கிரஸ் கட்சி துரோகி என்று சொன்னாரோ, அப்போதுதான் நான் அவரைப் பற்றிப் பேசினேன். அதுவரை நான் பேசவே இல்லை.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் ஸ்டாலினைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எங்களுடைய மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் என யாரைப் பற்றியும் நான் ஒரு வார்த்தை பேசமாட்டேன். ஏனென்றால், அவர்கள் காங்கிரஸ் பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது.
அன்புமணிக்கு மாணிக்கம் தாகூர் (Manickam Tagore) கண்டனம்
காங்கிரஸைத் தொட்டால் திருப்பி அடிப்போம். அது யாராக இருந்தாலும் சரி; திமுக, அதிமுக, பாஜக அல்லது நேத்து வந்த கட்சிகளான பாமக என யாராக இருந்தாலும் சரி.
இன்றைக்குப் பாருங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கிறார், ராகுல் காந்தி மேகதாது விவகாரத்தில் வனம் அழிவதை பற்றிப் பேசவில்லை என்று. அந்தமானில் நடக்கும் விவகாரத்தைப் போல, இதற்கு மட்டும் குரல் கொடுத்தவர் இதற்கு ஏன் கொடுக்க மாட்டார் என்கிறார். இது என்ன, ஒரு படித்த ஆள் பேசும் பேச்சா? டாக்டர் அவர்களே, அன்புமணி அவர்களே, ராகுல் காந்தி அவர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்? எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? அந்தமானில் நடப்பது சரி என்று சொல்கிறீர்கள், ரைட்டா? அந்தமானில் மிகப்பெரிய துறைமுகம் வரப்போகிறது, இயற்கை வளங்கள் அழிந்தாலும் பரவாயில்லை, துறைமுகம் வரட்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ரைட்டு. மோடி செய்கிறார் என்பதற்காக அது சரி என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், அதே லாஜிக்கை மேகதாது அணை கட்டும்போது டி. கே. சிவகுமார் செய்தால் அது சரி என்று சொல்லிவிட முடியுமா? எங்களைப் பொறுத்தவரை இரண்டுமே தவறு. அவர் செய்வதிலும் தவறு இருக்கிறது, இவர் செய்வதிலும் தவறு இருக்கிறது. இதில் எதற்கு ராகுல் காந்தியை இழுக்க வேண்டும்?

ராகுல் காந்தி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொண்டர்களின் விருப்பம் என்னவோ அதைச் செய்ய வேண்டும் என்றுதான் சொல்கிறார். நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம்; மேகதாது அணை கட்டக்கூடாது. கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக்கூட வைக்க விடமாட்டோம் என்று நம் உயர்கல்வித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அதேபோலத்தான் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். இதற்கு நடுவில், நீங்கள் எதற்கு அன்புமணி அவர்களே, மோடிக்கு ஜாலரா அடித்துக்கொண்டு ராகுல் காந்தியை இதில் இழுக்கிறீர்கள்?
அன்புமணி, சீமானுக்கும் எச்சரிக்கை
யாராக இருந்தாலும் சரி, அன்புமணி ஆகட்டும், சீமானாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் காங்கிரஸைத் தொட்டால் விடமாட்டோம். நாங்களும் மரியாதையாகவே இருந்து கொண்டிருப்போம். ஆனால் காங்கிரஸை மட்டும் எதுவும் பேசக்கூடாது; காங்கிரஸையும், என் தலைவர் ராகுல் காந்தியையும் எதுவும் சொல்லக்கூடாது. ராகுல் காந்தி தான் எங்களுடைய முகம். இங்கே இருக்கின்ற எல்லா படங்களையும் பாருங்கள், எல்லாமே ராகுல் காந்திதான். ராகுல் காந்திதான் நம்முடைய எதிர்காலம். ராகுல் காந்தியால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் எழுச்சி பெறும். இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.
உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்
2029-தான் நம்முடைய இலக்கு; நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களை வெல்ல வேண்டும். புதுச்சேரியையும் சேர்த்து இதுவே நம் உறுதி. இதற்கான ‘நேரேடிவ்’ (Narrative) உருவாக்குவதே இப்போதைய முதன்மைப் பணி.
உள்ளாட்சித் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக வேண்டும். தவெக (TVK) கூட்டணியை முழு மரியாதையுடன் முன்னெடுத்துச் செல்வோம். விருதுநகர், மதுரை பகுதிகளில் நான் சொல்வது போல, ‘யார் மரியாதையானவர்?’ என்று கேட்டால், அவர் காங்கிரஸ்காரராகத்தான் இருப்பார். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதது, ‘பொழப்பு தெரியாதது’ என பலர் ஏளனம் செய்தாலும், அந்த நேர்மைதான் நம் டி.என்.ஏ (DNA). அதை மாற்றிக்கொள்ளாதீர்கள்.
கூட்டணி குறித்து பொறுப்பாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துவிட்டார்; குழப்பத்திற்கு இடமில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுடன்தான் நமது கூட்டணி. நம் கூட்டணி பலமாக உள்ளது. இனி அமைச்சர்களின் பங்கு முக்கியமானது. வாரத்தில் ஒரு நாள், செவ்வாய், புதன் அல்லது வியாழக்கிழமைகளில், கட்சி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு மேல் அமைச்சர்கள் தங்களைச் சந்திக்க வரும் தொண்டர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். உங்களை மலைபோல நம்பியிருக்கிறோம். நீங்கள் இருவரும் இந்த இயக்கத்தின் முகம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எந்த தேர்தல் வந்தாலும் ஜெயிப்பது யார்?
இப்போது எல்லாரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: ‘இந்தத் தேர்தல், 3 மாதத்தில் வந்துவிடும்; 6 மாதத்தில் தேர்தல் வந்துவிடும்; 3 வருடத்தில் தேர்தல்’ என்று. ஆமாம், வரும்! தேர்தல் வரும் கண்ணு, தேர்தல் வரும்! 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும், சட்டமன்றத் தேர்தல் வரும், இடைத்தேர்தல் வரும். 6 மாதம் கழித்து உள்ளாட்சித் தேர்தல் வரும். ஆனால், அதில் ஜெயிக்கப் போவது யார் கண்ணு? கேள்வி அதுதானே! தேர்தல் வரும், ஜெயிக்கப் போவது யார்? ஏனென்றால், 1000 ரூபாய்க்கோ, 2000 ரூபாய்க்கோ மக்கள் இப்போது ஓட்டு போட மாட்டேங்கிறாங்களே! மக்கள் காசை வாங்கிக்கொண்டு ஓட்டு போடமாட்டேங்கிறாங்க. எங்களிடம் இப்போது ஓட்டுக்காக என்ன புதுசா சொல்வதற்கு இருக்கிறது? திராவிடக் கட்சிகளிடம் தான் என்ன புதுசா இருக்கிறது? ஒன்றுமே இல்லை. இவ்வாறு மாணிக்கம் தாகூர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டசபை குழு தலைவர் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில், 1967-க்கு பிறகு 59 ஆண்டுகாலமாக இங்கே இருக்கின்ற காங்கிரஸ் கட்சியினுடைய கடைநிலை தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ, ஒரு நாளாவது காங்கிரஸ் ஆட்சி ஆட்சிக்கு வரும் கூட்டணியில் பங்கு வகித்துவிடும் அவர்கள் நினைத்தார்கள், அவர்களுடைய கண்ணீர் இன்றைக்கு அந்த கண்ணீருக்கு அடையாளமாகத்தான், இன்றைக்கு 67-க்கு பிறகு 59 ஆண்டிற்குப் பிறகு இரண்டு பேர் அமைச்சராக ஆகியிருக்கிறார்கள் என்றார்.

மனநிறைவுடன் விடை பெறுகிறேன்..
முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், இது ஒரு மகிழ்ச்சியான தருணம். எந்தவித சிக்கலும் இல்லாமல், பிரச்சனை இல்லாமல் மனநிறைவோடு ஒரு பொறுப்பிலிருந்து விடைபெறுகிறோம் என்றால், அதைவிட மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது. பொறுப்பேற்றவுடன் தாயுள்ளத்தோடு எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். ஒரு பொறுப்பு இருக்கிறது என்றால் அதை ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். இன்னொன்றுக்கு கிடைக்கவில்லை என்றால் அது சங்கடம் தரத்தான் செய்யும். இது எதார்த்தம் என்ற நியாயத்தை நான் உணர்ந்தவன். கிராம கமிட்டியை நாம் ஆரம்பித்தோம். அப்பொழுது அஜய் குமார் என்ற பொறுப்பாளர் இருந்தார். அவரிடம் நான் இதைக் கேட்டவுடன் உடனே நீங்கள் இதைச் செய்யுங்கள் என்று அனுமதி தந்தார். மாநிலம் முழுவதும் 17,654 கிராம வார்டு கமிட்டிகளை நாம் நியமித்திருக்கிறோம். 1,64,000 பேருக்கு கியூ.ஆர் கோடோடு உலகம் தரம் வாய்ந்த ஐடி கார்டுகளை நாம் கொடுத்திருக்கிறோம். இந்த 2 வருடம் 4 மாதங்கள் 10 நாட்களில் 270 பத்திரிகையாளர் சந்திப்பு, 7 மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணம், 52 முக்கிய போராட்டங்கள், 12 முறை கைது செய்து வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இப்படித் தொடர்ந்து மக்கள் பணியை உங்களுடைய ஒத்துழைப்போடு உங்களுடைய ஆதரவோடு மேற்கொள்வதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
37 ஆண்டுகள் பிரச்சனையில் இருந்த காமராஜர் திடலை மீட்டெடுத்தோம். அதற்கு உறுதுணையாக இருந்தவர், கிரிஷ் சோடங்கர். ரூ. 5,000 கோடி சொத்து இங்கே நம்முடைய கட்சிக்குச் சொந்தமாக்கப்பட்டிருக்கிறது.
சொந்தமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இதெல்லாம் ஒரு மிகப்பெரிய மனநிறைவு. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலே 9 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தியாவிலே ஒரு மாநிலம் நூற்றுக்கு 100 சதவீதம் வெற்றி பெற்றது என்றால், அது தமிழ்நாடு மட்டும்தான். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மட்டும்தான் என்ற பெருமையை நீங்கள் எல்லோரும் சேர்ந்து பெற்றுத் தந்திருக்கிறீர்கள். கட்சியில் எல்லா கட்டமைப்பும் உங்களுக்காகத் தயாராக ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். எங்கே போனாலும் கிராம கமிட்டி இருக்கும், மாவட்ட கமிட்டி இருக்கும், வட்டாரக் கமிட்டி இருக்கும். நீங்கள் இனிமேல் 3 கோடி ரூபாய்க்கு மேல ஸ்காலர்ஷிப் கொடுக்கலாம் எல்லாருக்கும், மருத்துவ உதவி கொடுக்கலாம். மனநிறைவோடு நான் இந்த பதவியிலிருந்து என்னை விடுத்து விடுங்கள் என்று தலைமையிடம் சொன்னேன் என்றால், எப்பொழுதுமே போதுமென்ற மனம் பொன் செய் மனம் என்று சொல்லுவார்கள். இந்த பதவி என்றைக்குமே நிரந்தரம் இல்லை என்பதை நான் அறிந்தவன், ஆகையால்தான் துணிச்சலாக என்னை விடுவித்து விடுங்கள் என்னுடைய மனநிறைவோடு நான் விடைபெற நினைக்கிறேன் என்று ஹைகமாண்ட் நம்முடைய அகில இந்திய தலைமையிடம் சொன்ன பிறகு என்னை விடுவித்தார்கள் என்றார்.
