தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக TVK) தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைமையில் புதிய கூட்டணி அதிகாரப்பூர்வமாக இதுவரை உருவாகவில்லை.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக், மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகள் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. சிபிஐ, சிபிஎம் கட்சிகள், முதல்வர் விஜய் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகின்றன. மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்கள், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். இவர்களில் சீர்காழி செந்தில் செல்வன், தாம் திமுகவில் இணைந்துவிட்டேன் என அறிவித்தார். கடையநல்லூர் எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன், சட்டசபையில் மதிமுக எம்.எல்.ஏ.வாக செயல்படுவேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் தவெகவின் தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1-ந் தேதி கோவளம் தாஜ் பிஷர்மென் கேவ் ரிசார்ட்டில் தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு நேற்று அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 29-ந் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்த அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன்னா, தவெக தோழமை கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீனை சந்தித்த அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜூலை 1-ந் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
