அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பான வழக்கில் தமிழக சட்டமன்ற செயலாளர் சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக கொறடா உத்தரவை மீறி இவர்கள் வாக்களித்தது தொடர்பான தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ளது. இந்தசூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இவர்களது ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதே கோரிக்கையுடன் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்எல் ரவியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சட்டமன்ற செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று சட்டப்பேரவை செயலாளர் சாந்தி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை செல்லாததாகிவிடும் என்று கூறுவது தவறானது. ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூற முடியாது.
ராஜினாமா செய்தாலும் தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும்.
தகுதி நீக்க விசாரணையில் இறுதி முடிவு எட்டிய பிறகுதான் நீதிமன்றங்கள் தலையிட முடியும். காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என கோரிக்கை விடுப்பது விசாரணைக்கு ஏற்புடையது அல்ல.
நான்கு எம்எல்ஏக்களும் தாமாக முன்வந்து தங்கள் கைப்பட எழுதி ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளனர். எனவே அதன் உண்மை தன்மை குறித்து சந்தேகம் எழுப்ப எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதில் எந்த அவசரமும் உள்நோக்கமும் இல்லை. ராஜினாமாவை ஏற்பதற்கு முன் தகுதி நீக்க மனு மீது முடிவு எடுக்க வேண்டும் என எந்த விதியிலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி நீக்க மனு மீது குறித்த காலத்திற்குள் சபாநாயகர் முடிவெடுப்பார். எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இசக்கி சுப்பையா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மற்ற எம்எல்ஏக்கள் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வு ஜூலை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
