அமலாக்கத் துறை வழக்கு : அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கம் தொடர்பான வழக்கில்,  ”தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 2001-06-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர்  மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

ADVERTISEMENT

அதாவது மே 14, 2001 சமயத்தில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 23.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்த நிலையில்,  மார்ச்  2006 சமயத்தில் அவரது சொத்து மதிப்பு  6.86கோடியாக உயர்ந்திருந்தது என்று லஞ்ச ஒழிப்புத் துறை கூறியது. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. 

இந்த வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2020 டிசம்பர் 22 அன்று அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது.  அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை 18 அசையா சொத்துக்களை முடக்கியது.

ADVERTISEMENT

இதுதொடர்பான வழக்கில் சொத்துக்களை முடக்கியது சட்டவிரோதமானது என்று   மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கூறியது. அதோடு மதுரையில் உள்ள 17 சொத்துகள் மீதான முடக்கத்தை நீக்கியும், ஒரே ஒரு சொத்து மீதான முடக்கத்தை மட்டும் உறுதிப்படுத்தியும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்  உத்தரவு பிறப்பித்தது. 

இதை எதிர்த்து அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அமலாக்கத் துறை சார்பில் சொத்துக்களின் மதிப்பு சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என்று தீர்ப்பாயம் கருதினால், தற்காலிக முடக்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவிப்பதற்குப் பதிலாக, மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும் என்றும் கூறியது. 

இதை விசாரித்த நீதிபதிகள், பணமோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான, மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அசையாச் சொத்துகளை அமலாக்கத் துறை  முடக்கிய விவகாரத்தில், தற்போதைய நிலையையே தொடருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக  அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share