நட்டாற்றில் விட்டுவிட்டாரே ராமதாஸ்.. பாமகவில் கொந்தளிப்பு!

Published On:

| By Mathi

PMK Cadres Upset Over Ramadoss-Anbumani Reunion

பாமக தலைவர் அன்புமணியுடன் சமாதனாமாகியதால் பாமக நிறுவனர் ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரோ?” என அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதலால் அக்கட்சி கடந்த 2 ஆண்டுகளாக பிளவுபட்டு இருந்தது. சட்டசபை தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது. அன்புமணியின் மனைவி சவுமியாவும் தருமபுரி தொகுதியில் வெற்று பெற்று எம்.எல்.ஏ.வானார். ஆனால் ராமதாஸ் தலைமையிலான பாமக படுதோல்வியை சந்தித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமதாஸின் திருமண நாளை முன்னிட்டு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி தமது குடும்பத்தினருடன் சென்றார். அப்போது அன்புமணியை ஆரத்தழுவிய ராமதாஸ் கண்ணீர்விட்டு குலுங்கி குலுங்கி அழுதார்.

இதனைத் தொடர்ந்து அன்புமணி, அவரது மனைவி சவுமியா, மகள்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் ராமதாஸ் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். இதனால் பாமகவில் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிளவு முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் அன்புமணியுடன் ராமதாஸ் சமாதானமானதை அவரது ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. பாமக முன்னாள் எம்.எல்.ஏ. சேலம் அருள் வீட்டில் ராமதாஸ் அணி பாமக நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் அடுத்தடுத்து நடைபெறும் என்றும் அதன் பின்னர் என்ன முடிவு எடுத்துள்ளோம் என தெரிவிப்பதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் அருள் தெரிவித்தார்.

சேலத்தில் இன்று ஜூன் 29-ந் தேதி செய்தியாளர்களிடம் அருள் கூறியதாவது: இரண்டு பேரும் (ராமதாஸ்- அன்புமணி) இணைந்ததை, சந்தித்ததை, வரவேற்கிறோம் என்பதை நாங்களும் முன்னாடியே அறிக்கை மூலம் கொடுத்திருக்கிறோம்.

ADVERTISEMENT

ஐயாவை (ராமதாஸை) நம்பி பயணித்தோம், பல கோடிகளை இழந்திருக்கிறோம். எங்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லையே என்ற ஏக்கத்தில்தான் எல்லா பொறுப்பாளர்களும் என்னை வந்து சந்திக்கின்றனர். அடுத்து என்ன செய்யலாம் என கேட்கின்றனர்.

”நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.. உங்க கருத்து என்ன?” என கேட்டு வருகிறேன். வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்தனர். அடுத்ததாக சென்னையில் அனைவரும் ஒன்று கூடி பேசி நல்ல முடிவு எடுப்போம்.

இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது? என்ன கருத்து முன்வைக்கப்பட்டது என்பதை சொல்ல முடியாது. 2 அல்லது 3 நாட்கள் போகட்டும். நாங்களே சொல்கிறோம்.

இந்த இணைப்பு (ராமதாஸ்- அன்புமணி, 2 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருந்தால் 10, 15 எம்.எல்.ஏக்கள் கிடைத்திருக்கும். துணை முதல்வராகி இருப்போம்.

எங்களுக்கான வாக்கு சதவீதம் 5.8 என்பது 2 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதுதான் வலி, வருத்தம், வேதனை.

என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் பல கோடி ரூபாய் இழந்திருக்கிறோம். சொத்துகளை அடமானம் வைத்திருக்கிறோம். அப்பவே இணைப்பு நடந்திருந்தால் என்னை கொலை செய்ய முயற்சித்திருக்க மாட்டார்கள்.

நாங்கள் ஐயாவை மட்டுமே நம்பி வந்தவர்கள். எங்களை ஐயா நட்டாற்றில் விட்டுவிட்டு போய்விட்டாரோ? என்கிற பயம், வேதனை இருக்கிறது. இவ்வாறு சேலம் அருள் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share