வைஃபை ஆன் செய்ததும், “கண்ணாமூச்சி ஏனடா?
கையோடு கை சேர வேண்டாமா?”ன்னு ராகமாக பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. இன்னைக்கு ஒரே ”ராகமா” இருக்கு.. என்ன ‘காரமான’ மேட்டரா?
ரைமிங்காதான் பேசுறீங்க ப்ரோ.. என்ன விஷயம்னு சொல்றேன் கேளுங்கோ..
சிஎம் விஜய் (CM Vijay) சட்டசபையில் ஜூன் 23-ந் தேதி ‘அப்பாவை காணோம்’-னு மு.க.ஸ்டாலினை கிண்டலடித்து சைகை செஞ்சு பேசுனாரு.. அதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்”-னு பதில் கொடுக்க பெரும் பிரளயமே வெடிச்சிருச்சு இல்லையா?
இந்த விவகாரத்துல ஆட்சியை ஆதரிக்கிற சிபிஐ, சிபிஎம், விசிக எல்லாமே உடனே கண்டிச்சாங்க.. நல்லா நோட் பண்ணிக்குங்க ப்ரோ, “உடனே” கண்டிச்சாங்க..

சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், “யாரையும் தாழ்வு பாராட்ட கூடாது.. யாரையும் உடல் மொழியால் கடந்து செல்லக் கூடாது.. எவ்வளவுதான் நேர் எதிர் கருத்துகள் இருந்தாலும் பண்பு தவறிய கருத்துகளை சொல்ல கூடாது.. யார் தவறு செய்தாலும் தவறு.. தந்தையை தேடுகிறேன் என முதல்வர் சொன்னதில் ஏற்புடையது அல்ல.. மறுமொழியில் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும் ஏற்புடையது அல்ல..”ன்னு சொன்னார்.
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், ”தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, “அப்பாவைக் காணோம்” என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது. இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் “கணவனைத் தேடும் மனைவி” என்று பேசியதும் தவறுதான். “ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்” என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்”னு கண்டனம் தெரிவிச்சார்..
விசிக தலைவர் திருமாவளவனும், “ மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது ‘முதலமைச்சர்’ என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்”னு கண்டிச்சு அட்வைஸ் செஞ்சிருந்தார்..
காங்கிரஸ் கட்சி உடனே கண்டிக்கலைன்னாலும் 3 நாட்களுக்கு முன்னாடி செல்வப்பெருந்தகை, “சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் அருவருப்பானது. அநாகரிகமானது. இது திரைப்பட படப்பிடிப்பு தளம் கிடையாது. மாண்புமிக்க, வரலாற்று சிறப்புமிக்க ஒரு அவை. அங்க போய் கைக்காட்டி பேசுறது. அப்பாவை காணோம் என்று பேசுவதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் பேரியக்கம் சார்பாக அவருடைய பேச்சை கண்டிக்கிறேன்”ன்னு சொல்லி இருந்தார்..
இதுக்கு நடுவே ஜூன் 26-ந் தேதி, தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்- கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணாவை நியமனம் செய்து அறிவிப்பு வந்தது..
இதுக்கு திமுக, அதிமுக, அமமுக, பாஜகன்னு எல்லா கட்சிகளும் கண்டனம் தெரிவிச்சாங்க..
ஆனா, சட்டசபையில் சிஎம் விஜய் சைகையில ஸ்டாலினை விமர்சிச்சதை ”உடனே” கண்டிச்ச, தவெக ஆதரவு கட்சிகள்கிட்ட இருந்து இந்த பிரச்சனைக்கு ”உடனே” ரியாக்சன் வரலை..
தவெக ஆட்சியை ஆதரிக்கிற சிபிஐ கட்சியின் வீரபாண்டியன் நேத்துதான் அறிக்கை வெளியிட்டாரு.. அதுல ”தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலிலும், கலை, இலக்கியம், பண்பாட்டு துறைகளிலும் போதிய புரிதலும் இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும்”ன்னு சொல்லி இருந்தார்..
சிபிஎம் கட்சி இதுவரைக்கும் இந்த பிரச்சனையில அதிகாரப்பூர்வமா எதுவும் சொல்லலை. சிபிஎம் அலுவலகத்தை நாம தொடர்பு கொண்டு கேட்டப்ப கூட, ”எதுவும் தெரியலையே”ன்னு மழுப்பலான பதில் சொன்னாங்க..
ஆனால் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவரும் அமைச்சருமான ராஜேஷ்குமார், “ ஒரு அரசு.. புதுசா வந்திருக்கு.. எது எது நல்லா இருக்கும்னு பார்த்து பார்த்துதான் பண்ணுவாங்க.. அந்த அடிப்படையில டெல்லி சிறப்பு பிரதிநிதியை நியமிச்சிருக்காங்க.. தமிழ்நாட்டை சேர்ந்த ஒருத்தருக்கு கொடுத்திருக்கலாம்னு எல்லாரும் சொல்றாங்க.. ஆனா அரசு ஒன்னை செய்யுது.. அப்படி பார்த்தா ஒவ்வொன்னா குறை கண்டுபிடிச்சுகிட்டே இருக்க வேண்டிய சூழ்நிலை வரும்.. அரசு சிறப்பா செயல்படனும்.. அதனால இதை ஆதரிக்க மாதிரி நினைக்க கூடாது.. அப்படி பார்த்தா எல்லாத்துலேயும் பழி சுமத்தலாம்.. நாம எப்பவும் தொலைநோக்கு பார்வையோடதான் பார்க்கும் சூழ்நிலை இருக்கு”ன்னு அங்கிட்டும் இங்கிட்டும் இல்லாம சொல்லி இருந்தார்.

அதே மாதிரி விசிக தலைவர் திருமாவளவன் சொல்லும் போது, “இதுபற்றி அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் கொடுத்திருக்கிறார்.. “வெங்கட நாராயணா, முதல்வருக்கு நம்பிக்கைக்குரியவர்; அதனால் அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கு.. அந்த பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய பொறுப்பு இல்லை.. ஆகவே அந்த பொறுப்பை முதலமைச்சர் நம்பிக்கைக்குரிய தோழருக்கு வழங்கி இருக்கிறார்” என விளக்கம் சொல்லி இருக்கிறார்.. இது அவங்க உட்கட்சி விவகாரம்.. இது அரசு பதவிதான் என்றாலும் கூட அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது..”ன்னு சிஎம் விஜய்க்கு முழுமையான சப்போர்ட்டா பேசியிருந்தார்.
சிபிஐ எதிர்க்குது.. சிபிஎம் மவுனமா இருக்குது.. காங்கிரஸ் மழுப்புது.. முஸ்லிம் லீக், ரெண்டு பிரச்சனையிலும் கப் சிப்தான்..
ஆனா திருமாவோட இந்த பகிரங்கமான சப்போர்ட் கருத்துதான் எல்லா கட்சிகளையும் ரொம்பவே அதிர்ச்சி அடைய வைச்சிருக்கு.. சோசியல் மீடியாவிலேயும் திருமாவளவனுக்கு எதிராக, “அரசு பதவி எப்படி உட்கட்சி பிரச்சனையாக இருக்க முடியும்? திருமா ஏன் இப்படி குழம்பி போய் பேசுறாரு”ன்னு கண்டனம் தெரிவிக்கிறாங்க..
”சட்டசபையில சிஎம் விஜய் பேசுன பேச்சுக்கு ஆட்சிக்கு ஆதரவு தந்துள்ள கட்சிகள் அத்தனையும் வரிந்து கட்டி எதிர்ப்பு தெரிவிச்சாங்க..
ஆனா 3-வது நாளில், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவை சேர்ந்த நியமிச்ச விவகாரத்துல ரொம்பவே அரசுக்கு இணக்கமாக இப்படி நடந்துக்கிறாங்களே?” ன்னும் சரமாரியா கேள்விகளை சோசியல் மீடியாவில கேட்கிறாங்க..

இதை பத்தி நாம ஆதவ் அர்ஜூனா வட்டாரத்தில் விசாரிச்சப்ப, ”சட்டசபையில சிஎம் விஜய், ஸ்டாலினை கிண்டலடிச்சு பேசுனதை எல்லா கட்சிகளையும் போல திருமாவும் கண்டிச்சார்..
அந்த அறிக்கை வெளியான உடனேயே, திருமாவளவனோட உதவியாளருக்கு மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனா போன் போட்டாரு… அப்ப பேசுன ஆதவ் அர்ஜூனா, “எங்க தலைவர் சட்டசபையில பேசுனதுக்கு, ’மாண்புக்கு உகந்தது இல்லை’ன்னு அண்ணன் திருமாவளவன் சொல்றாரு.. அப்படின்னா எங்க தலைவருக்கு என்ன மரியாதை இருக்குது?
அதனால, “ஆதரவை வாபஸ் வாங்குறதுன்னா வாங்கிக்கலாம்.. முடிவெடுக்கலாம்”னு அண்ணன்கிட்ட (திருமாவளவன்) சொல்லிடுங்க.. எங்களுக்கு ஆட்சியை தொடர்ந்து எப்படி நடத்துறதுன்னு தெரியும்”னு காட்டமாகவே சொல்லிட்டார்.



இதுக்கு பிறகு, டெல்லி சிறப்பு பிரதிநிதி விவகாரத்துல கவர்மெண்ட்டுக்கு சப்போர்ட்டா திருச்சியில காலையில நேத்து திருமா கருத்து சொன்னார்.. நேத்து மாலையிலேயே சென்னையில திருமாவை புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனாவும் சந்திச்சாங்க.. ஜூலை 1-ந் தேதி தவெக, தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு வாங்கன்னு திருமாவளவனை அழைச்சிருக்காங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ..
ஜூலை 1-ந் தேதி தவெக, “தோழமை கட்சிகள்’ கூட்டத்தை நடத்துது.. இதுல சிஎம் விஜய்யும் கலந்துக்கிறாரு.. இந்த கூட்டத்துல எந்தெந்த கட்சிகள் கலந்துக்கும்? என்ன பேசப் போறாங்க? அரசாங்கத்தை ஆதரிக்கிற கட்சிகள் தொடர்ந்து சுதந்திரமா விமர்சனத்தை முன்வைப்பாங்களா?ன்னும் ரொம்பவே எதிர்பார்ப்போடு இருக்காங்க ப்ரோன்னு சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
