மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் பொது இடத்தில் அமர்ந்து, வெள்ளை நிறப் பவுடர் போன்ற ஒரு பொருளை ஏடிஎம் கார்டு மற்றும் 500 ரூபாய் நோட்டைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்தும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலானது. அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்ட அமைச்சர் சரத்குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்றிருந்த போது, தனது குழந்தைக்கு மாத்திரையைப் பொடி செய்வதற்காகவே அவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுக போராட்டம்
இருப்பினும், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக மாணவர் அணியினர் இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
இந்நிலையில், தடையை மீறி அமைச்சர் சரத்குமாருக்கு எதிராகச் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட ஏராளமான திமுகவினரை காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்:
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!”என தெரிவித்துள்ளார்.
