அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (ஜூன் 29) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், இன்று ஆறாவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தை வழங்கி உள்ளார்.
முன்னதாக அதிமுகவில் இருந்து இசக்கி சுப்பையா, மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், சத்தியபாமா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 41 ஆகக் குறைந்துள்ளது.
எம்.ஆர்.விஜய பாஸ்கரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் வரும் வியாழனன்று நடைபெற உள்ள இணைப்பு நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் இணைந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தவெக-வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நேற்று கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்ட அதிமுக நிகழ்ச்சியில், கட்சியின் கொடிகள், பேனர்கள் மற்றும் பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ்-ஸின் படங்கள் தவிர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
