அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா ஏற்பு -சபாநாயகர்

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் ஒரு குழுவினர் செயல்பட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, சட்டமன்றத்தில் நடைபெற்ற விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உட்பட 5 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இந்த நிலையில், இன்று (ஜூன்29) காலை தலைமைச் செயலகத்திற்கு வந்த கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை நேரில் சந்தித்து தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனைப் பரிசீலித்த சபாநாயகர், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு. M.R. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.
அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41 ஆகக் குறைந்துள்ளது. இது அக்கட்சிக்கு அடுத்தடுத்து ஏற்படும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உட்பட தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share