Video : நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா? – அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Surya

நடிகர் சூர்யாவிற்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை என்று அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் நேற்று (ஜூன் 28) சூர்யா நற்பணி மன்றத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட முன்னாள் நிர்வாகி இரா.வீரமணி பேசுகையில், “காலமும் கடவுளும் முடிவு செய்துவிட்டால் சூர்யா மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா அரசியலுக்கு வரத் தயாராகி வருகிறாரா? என்ற விவாதங்கள் எழுந்தன.

ADVERTISEMENT

நற்பணி இயக்கத்தின் விளக்கம்:

இந்த சர்ச்சை குறித்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இரா.வீரமணி, அது தனது தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே பேசினார். ஆனால், அவரது உரையைத் தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இதனை யாரும் நம்ப வேண்டாம். கடந்த மூன்று ஆண்டுகளாக இரா.வீரமணி மன்றத்தின் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.

ADVERTISEMENT

நடிகர் சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்குச் சமூகச் சேவையாற்றுவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது. மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செயல் தலைவர் R.A.ராஜ் மற்றும் அமைப்பாளர் G.ஹரிராஜ் ஆகியோரால் மட்டுமே வெளியிடப்படும். எனவே சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திகளை நம்பாமல் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வீரமணி வருத்தம்:

சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இரா.வீரமணி புதிய வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் பேசிய நீண்ட பேச்சிலிருந்து சில நிமிட காட்சிகள் மட்டும் வெளியாகித் தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளன. அந்த உரை முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. இதற்கும் சூர்யா அண்ணனுக்கோ அல்லது நற்பணி இயக்கத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை. இதனால் யாருக்கேனும் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் எனது மனப்பூர்வமான வருத்தத்தைப் பதிவு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share