தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு அமைந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் மாநாடு இன்று (ஜூன் 29) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டில் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி, அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக டிஐஜிக்கள், ஐஜிக்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த உயர் அதிகாரிகள் மாநாட்டை மூன்று முக்கிய அமர்வுகளாகப் பிரித்து நடத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்று நடைபெற்று வரும் முதல் அமர்வில், மாவட்ட ஆட்சியர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் இணைந்து பங்கேற்றுள்ளனர்.
இந்த முதல் அமர்வில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய முக்கியத் திட்டங்கள், பொது சுகாதாரம் மற்றும் ‘போதை இல்லாத தமிழ்நாடு’ திட்டம் உள்ளிட்ட 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்கு ஆவணம் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் முதற்கட்டமாக, மாநிலத்தின் ‘சட்டம் ஒழுங்கு’ என்ற தலைப்பின் கீழ் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு அரசியல் வட்டாரத்திலும், நிர்வாக ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
