வைஃபை ஆன் செய்ததும், “திக்குத் திசை தெரியலையே ராசா மனசுக்குள்ள என்ன நடக்குது ராசா”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. யார்தான் அப்படி ரொம்பவே தவியாய் தவிக்கிறது?
வேற யாருங்க ப்ரோ.. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்ச கையோடு அதிமுகவில இருந்து விலகுன விராலிமலை விஜயபாஸ்கர்தான்..
அங்கிட்டு திமுக.. இங்கிட்டு தவெகன்னு ரெண்டு பக்கமும் சேருவதற்கு முயற்சி செஞ்சாரு.. திமுகவில, ‘இப்ப சரிப்பட்டு வராது’ன்னு கதவை மூடிட்டாங்கன்னு நாம சொல்லி இருந்தோம் இல்லையா?
அதுக்கு அப்புறமா தவெகவில சேர ரொம்பவே மெனக்கெட்டு முயற்சிக்கிறாரு..
இதை பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமான சர்க்கிளில் பேசுனப்ப, “தவெகவில சேர்ந்துடனும்.. விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் மறுபடியும் போட்டியிடனும்னுதான் முயற்சிக்கிறாரு விஜய பாஸ்கர்.. ஆனா அவரை சேர்க்கவே கூடாதுன்னு தொடக்கத்திலே இருந்து சிஎம் விஜய் அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமி உறுதியா இருக்கிறார்..
இருந்தாலும் மினிஸ்டர்ஸ் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மூலமாக விடாம டிரை பண்ணினாரு.. அதனால ஜூன் 29-ந் தேதி அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில தவெகவில சேர்ந்துக்குங்கன்னு சொல்லிட்டாங்க..
ஆனாலும் சிஎம் விஜய் முன்னிலையிலதான் சேரனும்னு உறுதியா இருக்கிறார் விஜயபாஸ்கர்.
ஜூன் 29,30-ல் கலெக்டர்ஸ், எஸ்பிக்கள் மாநாடு இருக்கு.. அதனால ஜூன் 29-ந் தேதி சிஎம் விஜய் கலந்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. ஸோ ஜூன் 29-ந் தேதி புரோகிராம் கேன்சலாகிடுச்சு..
இப்ப ஜூலை 2-ந் தேதிக்கு டைம் கேட்டிருக்கிறார்.. ஆனாலும் இன்னும் சிஎம் விஜய் சைடில் இருந்து எந்த சிக்னலும் கொடுக்கலை.. அதனால விஜயபாஸ்கர் எப்ப தவெகவில சேருவாருன்னு கன்பர்மேஷன் எதுவும் இல்லை”ன்னு சொல்றாங்க ப்ரோ..
இன்னொரு பக்கம் தவெகவில தன்னோட சில மா.செ.க்களையாவது கூட்டிகிட்டு போகனும்னு விஜயபாஸ்கர் ரொம்பவே தீவிரமா முயற்சி செஞ்சுகிட்டிருக்கிறார் ப்ரோ..
விஜயபாஸ்கர் கூட தவெகவுக்கு சிவி சண்முகமும் போறாரா ப்ரோ?
அப்படித்தான் பேசுறாங்க.. அதே நேரத்துல சிவி சண்முகத்தை தவெக பக்கம் போக விடாம தடுத்துடனும்னு எடப்பாடி பழனிசாமி ரொம்பவே டிரை பண்றாருன்னும் சொல்றாங்க ப்ரோ..
இதை பத்தி அதிமுக தரப்புல விசாரிச்சப்ப, “எஸ்பி வேலுமணி அணியில இருந்து ரிட்டர்ன் ஆனவங்ககிட்ட மறுபடியும் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்கிறார்னு எடப்பாடிக்கு தகவல் வந்தது.. குறிப்பா சிவி சண்முகமும் விஜயபாஸ்கர் கூட தவெகவுக்கு போகலாம்னு ஒரு தகவல் எடப்பாடிக்கு வந்தது..
அதனால சிவி சண்முகத்தை எப்படியாவது தவெகவுக்கு போக விடாம தடுக்கனும்னு முயற்சிக்கிறார் எடப்பாடி.. சிவி சண்முகத்துகிட்ட பேசுறதுக்கும் ரொம்பவே முயற்சிக்கிறார்.. ஆனா சிவிஎஸ்தான் எடப்பாடி போனை அட்டெண்ட் செய்யமாட்டேங்குகிறார். தன்னை அடிக்க கை ஓங்கினவர்னு கூட பார்க்காம எடப்பாடி இறங்கி போய் பேசனும்னு நினைக்கிறார். சிவிஎஸ் சைடுலதான் சிக்னல் கிடைக்கலைன்னு”னு சொல்றாங்க ப்ரோ..
ஆமாங்க ப்ரோ.. எடப்பாடி போட்ட போஸ்டிங்கில எஸ்பி வேலுமணி அண்ட் கோவுக்கு ஹேப்பியா?
எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி எல்லாம், “எங்களுக்கு முன்னாடி இருந்த போஸ்டிங்தான் வேணும்”னு கேட்டுகிட்டுதான் திரும்பவும் வந்தாங்க..
ஆனா எடப்பாடி பழனிசாமியோ எதுவும் அறிவிக்காமலேயே இருந்தாரு..
இதுல எஸ்பி வேலுமணி அணிக்கு ரொம்பவே வருத்தமாம்.. அந்த கோபத்துலதான் எடப்பாடி டென்ஷன் ஆகுற மாதிரி, சட்டசபை வளாகத்துல சிஎம் விஜய்யை சந்திச்சு கை குலுக்கி , ”நல்லா பேசுனீங்க”ன்னு பாராட்டிட்டு போனாராம் எஸ்பி வேலுமணி.
இதனால ஷாக்கான எடப்பாடி பழனிசாமி, “துணை பொதுச்செயலாளர்- அமைப்புச் செயலாளர்”னு எஸ்பி வேலுமணி அணிக்கு புதுசா பதவிகளை கொடுத்திருக்கிறார்..
இதைபத்தி எஸ்பி வேலுமணி அணியில இருக்கிற சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, “கட்சியில பழைய போஸ்ட் தருவாருன்னு நம்பிதான் ரிட்டர்ன் ஆனோம்.. ஆனா வேற வேற பதவி கொடுத்திருக்கிறாரு.. இதை எப்படி ஏத்துக்கிறதுன்னு தெரியலை.. சிவி சண்முகமும் அங்கிட்டு தனியா இருக்கிறாரு.. அதனால எல்லாரும் மறுபடியும் உட்கார்ந்து பேசிதான் முடிவு செய்ய வேண்டிய நிலை வரும்”னு சொல்றாங்க ப்ரோ..
அதனால விஜயபாஸ்கர் தவெகவில கரை சேருவாருன்னும் தெரியலை.. அதிமுகவில புயல் ஓயுமா? சூறாவளி மறுபடியும் கிளம்புமான்னும் தெரியலைங்க ப்ரோன்னு என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
