திருச்சி கிழக்கில் போட்டியா? – என்ன சொல்கிறார் ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

MKStalin DMK

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளார்.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அதே நேரத்தில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், தான் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால் அந்தத் தொகுதிக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

இந்த சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகி இல்ல விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “சட்டசபையில் முதல்வர் விஜய், ‘அப்பாவை காணோம்’ என்கிறார். அவர் வருவார்… எவ்வளவு சீக்கிரம் வர வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் மீண்டும் சட்டசபைக்குள் வருவார். இது உறுதி” என்று பேசியிருந்தார். கே.என்.நேருவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், “திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று சுருக்கமாகத் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுகவின் வியூகம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share