சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 121-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முரசொலி நாளிதழில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குறித்து வெளியான விமர்சனக் கட்டுரைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
“முரசொலி பத்திரிகையில் மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் ஐயா குறித்து எழுதப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது; அது அநாகரிகத்தின் உச்சம். யார் பெ.சண்முகம் ஐயா? தனது வாழ்வையும் வசதிகளையும் ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்த ஒரு மாமனிதர். காவிரி கரையோரம் பிறந்து, தோளில் சிவப்புக் கொடியேந்தி அவர் நடத்திய போராட்டங்களை ஒரு புத்தகத்தில் அடக்கிவிட முடியாது. அவர் செய்ததையெல்லாம் ஒரு மனிதர் தன் ஒரு ஆயுளில் செய்துவிட முடியாது. அப்படிப்பட்ட மாமனிதரைப் பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம், அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம்.
ஆனால், முரசொலியில் என்னென்ன எழுதி வைத்துள்ளார்கள்? ‘டானிக் குடித்து வளர்ந்தவர்’ என்றெல்லாம் எழுதியுள்ளனர். அவர்களைப் போல் டாஸ்மாக் டானிக் குடித்து வளர்ந்தவரா அவர்? எவ்வளவு மோசமாக விமர்சித்துள்ளார்கள்! அரசியல் என்பது நாகரிகத்தின் எல்லையில் நிற்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதனை நிச்சயமாகக் கடுமையாகக் கண்டித்திருப்பார்.
அதிமுகவின் சி.வி.சண்முகத்தையும், தோழர் பெ.சண்முகத்தையும் ஒன்று என்று ஒப்பிட்டு முரசொலி எழுதுகிறது என்றால் அது எத்தனை பெரிய வன்மம்? சி.வி.சண்முகம் அதிமுகவில் ஒரு களத்தில் நின்று அரசியல் செய்து வருகிறார். அவரைச் சிறுமைப்படுத்த எழுதுகிறீர்கள் என்றால், சி.வி.சண்முகம் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன? அவரையும் பெ.சண்முகத்தையும் ஒப்பிடுகிறீர்கள் என்றால் பெ.சண்முகம் ஐயா குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? தமிழக வெற்றி கழகம் சார்பில் இதனை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். சிவப்புத் துண்டை இப்படிச் சிறுமைப்படுத்தினால் தவெக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அனைவரும் அரசியல் நாகரிகத்தின் எல்லை கருதி அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியது கடமை. அது படிக்கும் படியாகவா இருந்தது. வேதனையாக இருந்தது. மூத்த கம்யூனிஸ்ட் தோழரை 1, 2, 3 என்று சிந்துபாத் கதைகள் மாதிரி போட்டு வன்மத்தைக் கக்குவதற்கு இது ஒரு தொடரா? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
வாச்சாத்திப் பிரச்சினைக்காகக் களமாடி, நீதிமன்றத்தில் நின்று சட்ட ரீதியாகப் போராடி தீர்ப்பு வாங்கி நிலைநாட்டினார். அதில் அவர் பின்வாங்கவே இல்லை.
அப்படிப் பார்த்தால், தாமிரபரணி (மாஞ்சோலை) படுகொலைக்கு யார் காரணம்? கலைஞர் கருணாநிதி தான் காரணம் என்று அப்போது அப்பாவு ஐயா சொன்னாரே? இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து பெ.சண்முகம் ஐயாவை யாரும் சிறுமைப்படுத்த முடியாது. தன் மீது வீசப்படும் கற்களை வைத்தே அவர் சிவப்புக் கோட்டையைக் கட்டி, சிவப்புக் கொடியை ஏந்தித் தொடர்ந்து களமாடுவார்” இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
