பிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தீக்கதிர் நாளேட்டில் எழுதிய கட்டுரையை முன்வைத்து திமுகவின் நாளேடான முரசொலியில் தொடர்ந்து விமர்சன கட்டுரை வெளியாகி வருகிறது. இதற்கு சிபிஎம் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முரசொலி நாளேட்டில் இன்று ஜூன் 25-ந் தேதி “பெ.சண்முகத்தின் உண்மை முகம்” தலைப்பில் 3-வது பகுதியை மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதி உள்ளார்.
இன்றைய முரசொலியில் வெளியான கட்டுரை: ‘‘இந்த ஆட்சி மாற்றம், தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஒரு ஆட்சி வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளார்கள்’’ என்கிறார் மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம். அந்த நோக்கத்தோடு மக்கள் வாக்களித்து இருந்தால் விஜய் கட்சி 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 117 இடத்தையே பெறாதவர் தான் விஜய். 16 தொகுதிகளில் மிகக் குறைவான வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளது அவர் கட்சி. எட்டு மாவட்டங்களில் எந்தத் தொகுதியையும் கைப்பற்றவில்லை அவர் கட்சி.
1.55 கோடி வாக்குகளை தி.மு.க.கூட்டணியும், 1.34 கோடி வாக்குகளை அ.தி.மு.க. கூட்டணியும் பெற்றுள்ளன. தி.மு.க. கூட்டணியை விட 17 லட்சம் வாக்குகளை தான் கூடுதலாகப் பெற்றுள்ளார் விஜய். எனவே இதில் சண்முகம் மகிழ்ச்சி அடைய எதுவும் இல்லை.
அதே சண்முகம் தான், ‘ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கோ அணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை’ என்றும் அதே கட்டுரையில் சொல்கிறார். தனிப்பெரும்பான்மை கிடைக்காத விஜய், தி.மு.க. கூட்டணியில் வென்ற கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்தும், அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் பதவி தரப்போவதாக நடித்தும் தனக்கு பெரும்பான்மை இருப்பதைப் போல காட்டி முதலமைச்சர் நாற்காலியில் இருக்கிறார்.
ஆதரவு தந்த கட்சிகளை நம்பாமல் அ.தி.மு.க.வின் நான்கு உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார் விஜய்.இன்னும் அதே பேரங்களை நடத்தி வருகிறார் விஜய். அவர்கள் கணக்குப் படி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வைக்க வேண்டுமாம். அதில் விஜய் கட்சியே வெற்றி பெறுமாம். வெற்றி பெற்றதும் இந்த நான்கு கட்சிகளுக்கும் அல்வா தரப்படுமாம். இத்தகைய கேவலமான குதிரை பேர ஆட்சியை ஆதரிப்பது அவமானமாக இல்லையா?
தி.மு.க. ஆட்சி மீது குற்றச்சாட்டுகளை இந்தக் கட்டுரையில் அடுக்குகிறார் சண்முகம். இது எதுவும் மே 4 ம் தேதிக்கு முன்பு வரை தெரியவில்லையா? இரண்டு சீட் ஜெயிப்பதற்கு வாயை மூடிக் கொண்டு இருந்தாரா? தி.மு.க. ஆட்சியை ஆதரித்து அவர் பேசிய பேச்சுகளே அவருக்கான பதில்கள். ‘ தி.மு.க.வின் தொடர் வெற்றியை உறுதிப்படுத்தும் 20 காரணிகள்’ என்று ‘தீக்கதிரில்’ ஒரு பக்கத்துக்கு ( 19.4.2026) எழுதி இருக்கிறார்கள். அதை எடுத்து அவரே படிக்கட்டும்.
‘‘கடந்த 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு திறமையான நிர்வாகியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சியை உறுதி செய்துள்ளார். குறிப்பாக, பேரிடர் காலங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றிய விதம் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு ‘பாதுகாவலர்’ என்ற பெயரைத் தந்துள்ளது. அரசு இயந்திரத்தைச் சுணக்கமின்றி இயக்கியதுடன், கட்சித் தலைவராகவும் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் அவர் காட்டிய முதிர்ச்சி, இந்தத் தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளது” என்று தான் தொடங்கியது இந்தக் கட்டுரை.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாழ்வாதார மாற்றம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், சிதையாத மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பலம், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், மாநில சுயாட்சியும் ஒன்றிய அரசின் நிலைப்பாடும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், மக்களைத் தேடி மருத்துவம் என்பது ஒரு முன்னோடித் திட்டம், சமூகநீதி, சிறுபான்மையினரின் முழுமையான ஆதரவு, ஆன்மீகமும் கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்களும், நவீன உட்கட்டமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி – என்று தனித்தனி தலைப்புகள் போட்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விவரித்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தான். ஒரே மாதத்தில் சண்முகம் மனம் போன போக்கில் எழுதுகிறார்.
தி.மு.க. ஆட்சி நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்ததாம். இதனால் மக்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டதாம். மக்கள் கோபப்பட்டார்களாம். கேரளாவில் மார்க்சிஸ்ட் அரசாங்கம் கடைப்பிடித்ததும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை தான். அதனால் கோபம் அடைந்த இளைஞர்கள் தான் மார்க்சிஸ்ட் அரசாங்கத்தை கேரளாவில் தூக்கி வீசினார்களா?
கேரளாவில் அதானி குழுமத்தின் முதலீடுகளை மார்க்சிஸ்ட் அரசு அனுமதித்தது. விழிஞ்சம் துறைமுகம் அதானி கையில். கலமச்சேரி தளவாட பூங்கா அதானி குழுமத்தால் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடியும் – முதலமைச்சர் பினராயி விஜயனும் – அதானியும் ஒன்றாக நின்று பேசிக் கொள்ளும் படமே வெளியானது. நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மூலமாக மேம்படுத்தலாம் என்ற கேரள மார்க்சிஸ்ட் அரசின் நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ( மார்ச் 7,2005) ஆதரித்துள்ளது. ‘நவ கேரளத்துக்கான புதிய பாதைகள்’ என்பது பினராயி விஜயன் தயாரித்த ஆவணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டு விட்டது.
‘‘In a slight shift from the Communist Party of India (Marxist) [CPI(M)]’s long-held position on public sector units, the New Pathways for a Nava Keralam document presented by Chief Minister Pinarayi Vijayan, polit bureau member of the party, at the 24th State conference in Kollam, advocates restructuring of struggling PSUs under a public private partnership (PPP) model’’ ( மார்ச் 7,2025, தி இந்து)
சி.பி.எம். கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டை ஒட்டி பல்வேறு இடங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டது. கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், ‘வர்த்தக முதலீடுகளும் தொழிலாளர் உரிமைகளும்’ என்ற தலைப்பில் சென்னையில் 13.3.2025 அன்று சென்னையில் உரையாற்றினார். அவர் பேசியது சோசலிசமா? நவதாராளமயமா? என்பதை சண்முகம் பார்க்க வேண்டும். தனது உரையில் பி.ராஜீவ் ஒரு மேற்கோள் காட்டுகிறார்.
‘‘என்னுடைய மூச்சு கம்யூனிசத்தைக் கட்டமைப்பது தான். ஆனால் என்னுடைய இந்த அரசாங்கம் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டமைப்பதற்காகப் பணியாற்றவில்லை. மத்தியில் ஆளும் காங்கிரசின்கொள்கைகளில் முற்போக்கான அம்சங்களை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். கட்சியின் திட்டத்தை அமல்படுத்துவதுஇயலாது” என்று சொன்னவர் யார் தெரியுமா? கேரள முதலமைச்சர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத். ‘பெருமுதலாளிகளுக்கு எதிராக நாங்கள் முழக்கமிட்ட காலத்தில், கேரளாவில் தொழில் தொடங்குவதற்கு பிர்லாவைத் தான் அழைத்து வந்தார் ஈ.எம்.எஸ்.’ என்று தனது உரையில் குறிப்பிடுகிறார் மார்க்சிஸ்ட் அமைச்சர் பி.ராஜீவ். இந்தக் கட்டுரைகளையும் தொகுத்து ‘பாரதி புத்தகாலயம்’ தான் வெளியிட்டுள்ளது.
‘காவி மயமாகும் சிவப்பு’ – என்று ‘தினமணி’ மகிழ்ந்து அப்போதே தலையங்கம் தீட்டியதையும் மறக்க முடியாது. எனவே நவ தாராளமயம் போன்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு கொம்பு சுற்றுவதை சண்முகம் போன்றவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
தங்களது சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளுக்கு தத்துவார்த்த முலாம் பூசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். செயலும் செயல் தந்திரமும் அற்ற நிலைப்பாடுகளுக்காக ரத்தம் கக்கும் வகையில் பேசுவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முரசொலியில் ப. திருமாவேலன் எழுதி உள்ளார்.
முரசொலி புலம்பல் – திசைமாறுதா திமுக? – பதில் கட்டுரை
முன்னதாக சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சிந்தன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ப.திருமாவேலன் கட்டுரைக்கு பதில் கட்டுரை வெளியிட்டுள்ளார்.
சிந்தன் எழுதிய ”முரசொலி புலம்பல் – திசைமாறுதா திமுக?” என்ற தலைப்பிலான கட்டுரை: 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், கொள்கை அரசியலை முற்றாகக் கைவிடுவது என்ற முடிவுக்குத் திமுகவை இழுத்துச் செல்லும் வேலையில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் இப்போது முரசொலி இதழில் தொடர்கட்டுரை எழுதி, சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளரைத் தனிப்பட்டு தாக்கி வருகிறார்.
திமுக – அதிமுக கூட்டணி அமையப்போகிறது என்று தேசிய ஊடகங்கள் எழுதியபோதும், யார் வேண்டுமானாலும் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவைக் காட்டினால் போதும் என்று ஆளுநர் பேட்டி கொடுத்தபோதும் – அது திமுக மீதான அவதூறு என்று கொதித்தெழாத முரசொலி – இடதுசாரிகளின் மீது மட்டும் பாய்ந்து பிடுங்குவது ஏன்? காரணத்தைப் பார்ப்போம்
அம்பலமான குறுகிய அரசியல்: திமுக – அதிமுக கூட்டணி முடிவை எடுக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு ஆலோசனை செய்தாலே என்ன தவறு? பிரிந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே அணியில் சேரவில்லையா? என்று கேட்டார் ஆர்.எஸ்.பாரதி.
பாஜக ஆளுநரின் சித்து விளையாட்டு நடந்துகொண்டிருக்கும் பின்னணியில், சி.பி.ஐ(எம்) அவரின் தாமதத்தை அப்போதே கண்டனம் செய்திருந்தது. ஆனால் சிலர் அதைக் கண்டுகொள்ளவில்லை; திட்டமிட்ட அமைதியைக் கடைப்பிடித்தார்கள்.
தவெக என்ற புதிய கட்சியின் ஆட்சியைத் தடுக்க, வேறு எந்தவொரு கூட்டணிக் கணக்கையும் எடுக்கலாம் என்று அவர்கள் தீவிரமாகச் சிந்தித்தது காரணமாக இருக்கலாம். அதன் ஒரு பகுதியாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சியிடமும் அந்த ஆலோசனை பகிரப்பட்டது.
ஆளுநர் ஆசியில்லாமல் இப்படியான ஆலோசனைகள் சாத்தியமில்லை. ஆளுநரும் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில், தாம் எம்.எல்.ஏ எண்ணிக்கையை எந்தத் தரப்பினர் காட்டினாலும் அவர்களை ஆட்சியமைக்க அழைப்பேன் என்று கூறினார்.
அன்றைய சூழலை சி.பி.ஐ(எம்) தனது மாநிலக் குழுவில் தீர விவாதித்து – தவெக ஆட்சியை வெளியிலிருந்து ஆதரிப்பது என்ற சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்தது.
மே 8 அன்று எடுக்கப்பட்ட முடிவுதான், திமுக – அதிமுக சேர்ந்து ஆட்சி என்ற கணக்குகளை முற்றாக முடித்துவைத்தது. ஏற்கனவே, தவெக தரப்பில் 112 எம்.எல்.ஏக்கள் என்ற ஆதரவு இருந்த பின்னணியில், இடதுசாரிகளின் முடிவு அதனை 116 ஆக மாற்றியது. இனி வேறெந்த எண்ணிக்கை விளையாட்டும் சாத்தியமில்லை என்ற நிலைமை ஏற்பட்டது.
இடதுசாரிகளின் இந்த முடிவால், திமுகவில் கொள்கைப்பிடிப்போடு இயங்கும் சிலர் நிம்மதியானார்கள் என்பதும் உண்மை. ஆனால், முரசொலி கட்டுரையாளரைப்போல மற்ற பலருக்கு குறுகிய அரசியல் நோக்கம் தோற்றுப்போனது பெரும் காயமாக மாறிவிட்டது. இப்போதுவரை வேதனை தாளாமல் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் வருமா வராதா?
உடனடியாகத் தேர்தலை எதிர்கொள்ளும் அபாயத்தைத் தடுக்க சி.பி.ஐ(எம்) முடிவு செய்தது உண்மையா? அது பம்மாத்து என்கிறார் திருமாவேலன்.
மே 7 அன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ///இன்னொரு தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம்.// என்று கூறியுள்ளதே அதுவும் பம்மாத்துதானா?
அதே தீர்மானத்தின் கடைசிப் பத்தியில், //அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தைக் கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது// என முடிவு செய்தார்களே, இந்தப் புதுவகை பம்மாத்துக்கு உள்நோக்கம் என்ன?
ராமமூர்த்தி டானிக்
திராவிட கட்சிகளின் ஆட்சி என்ற இருமுனை அரசியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் தோழர் சண்முகத்தின் மகிழ்ச்சி வெளிப்பட்டுள்ளதாக முரசொலி கூறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டதே பாஜகவோடு பம்மிப்போன ஒரு துருவத்தின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்துத்தானே? அதிமுக என்ற துருவம் பலவீனமடைந்ததில் திமுகவிற்கு வருத்தமா? அந்த மகிழ்ச்சிக்குச் சண்முகம் மட்டும் சொந்தக்காரரா?
மாறிமாறி ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் திராவிட கட்சிகள் என ஒரே தட்டில் வைத்துப் பலரும் பேசும்போது, திமுகவிடம் உள்ள பல நல்ல அம்சங்கள் அதிமுகவிடம் இல்லை. அதிமுக மூடநம்பிக்கைகளில் தனது தொண்டர்களை வைத்துள்ளது என்று சொன்னாரே சண்முகம், அதைக் கட்டுரையாளர் ஏற்கிறாரா? மறுக்கிறாரா?
நீங்கள் முரசொலியில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், எங்கள் கட்சி ‘தூய்மைப்பணியாளர் தனியார்மயப் போக்கை எதிர்த்து’ தீர்மானம் எழுதிக்கொண்டிருந்தது. முரசொலி இந்தக் கட்டுரையை வெளியிட்ட நாளில் நாங்கள் ஆணவக்கொலைக்கு எதிராகச் சட்ட வரைவை முன்வைத்துப் புதிய ஆட்சி அதைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திக்கொண்டிருந்தோம். அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக துடித்துக் கொண்டிருந்தோம்.
சமூகநீதி இயக்கங்களால் மறக்கப்பட்ட மக்கள் திரளையும் உள்ளடக்கி செயல்பட, எந்த அடக்குமுறை வந்தாலும் எதிர்த்து நீதிக்கு போராட – எங்களை உயிர்ப்போடு வைத்திருப்பதுதான் ‘பி.ராமமூர்த்தியின் டானிக்’. எனவே, அந்த டானிக் முரசொலிக்கு ஏன் அலர்ஜியாகிறது? என்பதே கேள்வி.
வாச்சாத்தி நாயகர்களின் உறுதி!
வாச்சாத்தியில் நடைபெற்ற மிகப்பெரும் அரசு வன்முறைத் தாண்டவத்திற்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி நீதியை நிலைநாட்டிய இயக்கம் செங்கொடி இயக்கம்.
தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த உடனே, வாச்சாத்தியின் உறுதியான தியாக வரலாற்றை முன்வைத்து, அதைக்கொண்டே தோழர் சண்முகத்தைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் கட்டுரையாளர். இதுவெல்லாம் எத்தனை தரமற்ற செயல்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிவார்கள்.
வாச்சாத்தி கொடூரம் நடந்து, நீதிக்காகப் போராடிய 30 ஆண்டுகளில் பல்வேறு ஆட்சிகளையும் பல்வேறு கூட்டணிகளையும் தமிழ்நாடு பார்த்துள்ளது. அரசியல் சூழல் எப்படி மாறியபோதும், செங்கொடியின் உறுதியான போராட்டம்தான் அந்த வெற்றியைச் சாதித்தது.
இந்தக் கேள்விக்கு உங்கள் பாணியிலேயே ஒரு பதில் சொல்லலாம்.
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்றில்லாமல், அதிமுக ஆட்சிக்கு ஆதரவு என்ற ஆலோசனையை ஒருவேளை மார்க்சிஸ்டுகள் ஏற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக் கால முதலமைச்சருக்கு மீண்டும் அதிகாரம் கிடைத்திருக்கும்.. அதைத்தான் திமுக விரும்பியதா? வாச்சாத்தி கொடூரங்களைப் போல ஏராளமான போலீஸ் எல்லை மீறல்களை எதிர்த்த வரலாறும், வென்ற சரித்திரமும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. அதிகாரம் எங்களை ஊசலாட வைத்ததில்லை.
அருணா ஜகதீசன் அறிக்கைப்படி, போலீசார் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரினோமே, திமுகவிடம் வானளாவிய அதிகாரங்கள் இருந்தபோதும், நடவடிக்கையைத் தடுத்தது எது?. தேர்தலுக்கு பிறகாவது இந்த அம்சங்களில் திமுகவிற்குத்தான் மறு சிந்தனை தேவை.
திசைமாற்றம் நோக்கி இழுப்பது யார்?
தவெக ஆட்சியில், அமைச்சரவையில் சேரும்படி பலமுறை கோரியபோதும் – மக்கள் முடிவின்படியும், மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டின்படியும் எதிர்க்கட்சியாகத் தொடர்வோம் என்ற முடிவை சி.பி.ஐ(எம்) எடுத்துள்ளது. வெளியிலிருந்து ஆதரவு என்ற ‘சுயேட்சையான முடிவுக்கு’ யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
இப்படியான புதிய அரசியல் சூழலில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக – இடதுசாரிகள் – அதிமுக – பாஜக – பாமக ஆகிய கட்சிகள் உள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் அணுகுமுறை மாறுவது இயல்பு. புதிய நிலைமையை திமுகவில் சிலரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
தவெக ஆட்சியில் தவறு நடக்கும்போதெல்லாம் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்க வேண்டும். சி.பி.ஐ(எம்) அதில் உறுதியாக இருக்கிறது. சாம்சங் போராட்டத்திலும், வேலை நேர அதிகரிப்புப் பிரச்சனையிலும், பழைய பென்சன் திட்டம், நிரந்தரமற்ற பணியாளர்களின் வேலை நிரந்தரம், தூய்மைப் பணியாளர் போராட்டம், மாற்றுத்திறனாளிகள் உரிமை என பல பிரச்சனைகளில் – தம் ஆட்சிக் காலத்திலேயே இடதுசாரிகளின் எதிர்ப்பை அறிந்த திமுகவிற்கு இது சந்தேகமில்லாமல் தெரியும்.
ஆனாலும், சி.பி.ஐ(எம்) நோக்கிய பாய்ச்சல் ஏன்?. சில சக்திகள் திமுகவிற்குள் இருந்துகொண்டு, அதிகாரப்பூர்வ ஏட்டைப் பயன்படுத்தி சி.பி.ஐ(எம்) மீது அவதூறு செய்வது ஏன். இடதுசாரிகளிடமிருந்து விலகினால்தான், வலது பக்கம் சாய முடியும் என்ற உத்தி அதில் வெளிப்படுகிறதா? இந்தக் கேள்விதான் எழுகிறது.
