முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த போது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 2.79 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த சூழலில் சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறையும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
அதுபோன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்து வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த மனு மீண்டும் இன்று (ஜூன் 24) தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
