சிபிஎம் (CPM) கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிரில் ஜூன் 19-ந் தேதி அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
இந்த கட்டுரையை முன்வைத்து கடந்த 2 நாட்களாக திமுகவின் (DMK) அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன், ”பெ.சண்முகத்தின் உண்மை முகம்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளியிட்டு வருகிறார்.
இந்த கட்டுரைகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

தீக்கதிரில் ஜூன் 19-ந் தேதி பெ.சண்முகம் எழுதிய கட்டுரை:
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவைச் சார்ந்தவர்களும், திமுக ஆதரவு அறிவுஜீவிகளும் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொடுத்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் ஆளுநரின் நிலையும்
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கோ, அணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றது.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை, அந்த எண்ணிக்கைக்குரிய ஆதரவு கடிதங்களை அளித்தால்தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இதற்கு, ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம் “தவெக 108, காங்கிரஸ் 5 என 113 இடங்கள் என்று குறிப்பிட்டு கடிதம் அளித்தனர். 113 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே என்று உறுதியாக அவர்களே தெரிவித்த பிறகு எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் அவர்கள் உரிமை கோரவில்லை” என்பது. ஆனால், பெரும்பான்மையை சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் அல்ல என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு கூறியுள்ளதை நாம் அறிவோம்.
சிபிஐ(எம்) முன்னால் இருந்த மூன்று வாய்ப்புகள்
இத்தகைய சூழ்நிலையில் சிபிஐ(எம்)-க்கு முன்னால் மூன்று வாய்ப்புகள் இருந்தன.
- தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.
- திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது.
- எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும். இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது.
மேற்குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர வேறு வாய்ப்புகள் எதுவுமில்லை. மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விவாதித்தது.
குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் அனுமதிக்கக் கூடாது?
உடனடியாக மற்றொரு சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தேர்தலை அனுமதிப்பதா இல்லையா என்பதும் ஒன்றிய பாஜக அரசின் கையில்தான். ஆளுநர் மூலமாக தாங்களே நேரடியாக ஆட்சி நடத்த ஒரு வாய்ப்பு வரும்போது நிச்சயமாக அதை அவர்கள் தவற விடமாட்டார்கள்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய நோக்கமும் பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வழிவகுப்பது மேற்கண்ட அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானதாகும். பிறகு, தேர்தல் நடந்தாலும் அது ஒன்றிய பாஜக ஆட்சியின் கட்டுப்பாட்டில்தான் நடக்கும் சூழல் இருக்கும். எனவே, எக்காரணங்கொண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம்.
மக்கள் அளித்த தீர்ப்பும் இடதுசாரிகளின் முடிவும்
இந்தத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றுள்ளது. சட்டப்படியும் முதல் வாய்ப்பு இந்தக் கட்சிக்கே உள்ளது. ஏறத்தாழ 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது ‘ஆட்சி மாற்றம்’ – அதாவது திமுக-அதிமுக அல்லாத ஒரு ஆட்சி வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று இரண்டு இடதுசாரி கட்சிகளும் தீர்மானித்தன.
யார் ஆட்சி அமைத்தாலும் இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் நிலைமை. எனவே, இந்த மிக முக்கிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையுடன் கட்சி இதை அணுகியது.
“அதிமுக-திமுக கூட்டு” யோசனை நிராகரிப்பு
அதிமுக ஆட்சி அமைப்பது – திமுக ஆதரிப்பது; அதற்கு இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும். இந்தத் தேர்தலின் மையமான அம்சமே பாஜக-அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். மக்களும் தோற்கடித்திருக்கிறார்கள். அதிலும் பாஜக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குக்கும் குறைவாகப் பெற்று வாக்கு சதவிகிதமும் பெருமளவு குறைந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்துள்ளது. தோல்வியடைந்த ஒரு கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன? எனவே, அதிமுக-திமுக அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது.
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடர வேண்டும் என்ற முறையில் அந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இவர்கள்தான், அதிமுகவை திராவிட கட்சி என்ற அளவுகோலில் வைக்க முடியாது என்று பல நேரங்களில் கூறியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறோம். மேற்கண்ட கருத்தின் நோக்கமென்ன? திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த விடக்கூடாது என்பதைத் தவிர இதில் தமிழ்நாட்டின் நலன் வேறு என்ன இருக்கிறது?
இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டாலும் திமுக-அதிமுக இதே நிலைபாட்டை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததன் மூலம்,
- குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.
- திமுக ஆதரவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்திருக்கிறோம்.
இளைஞர்களின் பேராவேசமும் சமூக வலைதள விமர்சனங்களும்
இன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து “புதிய மாற்று சக்தி” ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பி வாக்களித்துள்ளனர். இங்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இடதுசாரி – வலதுசாரி இரண்டு தரப்புக்கும் வெற்றி கிடைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலேயே இளைஞர்களின் பேராவேசத்தைக் கண்டோம். எனவே, இங்கு மட்டும் மாற்றமே கூடாது என்பது சரியா?
சமூக வலைதளத்தை சரியாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி தவெகவினர் வெற்றி பெற்று விட்டனர், இது ரீல்ஸ் ஆட்சிதானே தவிர ரியல் ஆட்சி அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆம், திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்தினர். சமூக வலைதளம் மூலம் மக்களின் முன் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் என்ன? ஒன்றிய பாஜக அரசும், மாநில திமுக ஆட்சியும் கடைபிடித்த நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் உணர்ந்தனர். லஞ்சம், ஊழல், சொத்துக் குவிப்பு, கனிம வளக் கொள்ளை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள்; திமுக கொடுத்த சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும், பல வாக்குறுதிகள் காலம் கடந்து நிறைவேற்றப்பட்டதும் உள்ளிட்ட பிரச்சனைகளைத்தான் சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடம் முன்வைத்தனர். நலத்திட்டங்கள் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை திமுகவினர் உணர வேண்டும்.
தவெகவின் உறுதிமொழியும் கம்யூனிஸ்ட்டுகளின் அனுபவமும்
ஆதரவு கேட்டு தவெக அளித்த கடிதத்தில் “மதச்சார்பின்மைக் கொள்கையில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அனைவருக்குமான ஆட்சியாக எங்கள் ஆட்சி இருக்கும். நேர்மையான ஆட்சியைத் தருவோம்” என்று கூறியிருந்தனர். நேரில் சந்தித்தபோதும் இதை உறுதிப்படுத்தினர். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. வெளியிலிருந்து ஆதரவு, கூட்டணி ஆட்சி போன்ற அனுபவங்களெல்லாம் வேறு எந்தக் கட்சியையும் விட செழுமைமிக்க அனுபவம் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. புதிய அரசியல் சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த சிறப்பான முடிவு என்றுதான் பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர்.
விமர்சிப்பவர்கள் முன்வைக்கும் கருத்து: திமுக அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெகவை ஆதரிக்கலாமா? விஜய் அவர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியுமா? அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், முற்றிலும் புதியவர்கள் என்பது.
ஏற்கெனவே, திமுக ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை ஏற்க முடியாது என்பதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து இருக்கும் ஒரே வாய்ப்பு தவெக ஆட்சி அமைப்பதுதான். இல்லையென்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சிதான் அமைந்திருக்கும். இதை எவரும் ஏற்க முடியாது. எனவே, தவெகவை ஆதரிப்பது என்ற இடதுசாரிக் கட்சிகளின் முடிவு மிகச்சரியானது.
இதில் திமுகவினர் கோபம் கொள்வதில் எந்த அடிப்படையும் இல்லை.
முன் அனுபவம் குறித்த விமர்சனங்களுக்கான பதில்
இரண்டாவது, விஜய் ஒரு நடிகர் என்ற அளவுகோலை வைத்துத்தான் அவருக்கு அரசியல், ஆட்சி என்றால் தெரியுமா என்று கேட்பது. என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் ஆட்சி அமைத்தபோதும் இதுபோன்ற விமர்சனங்கள்தான் முன்வைக்கப்பட்டன. மக்களிடம் இந்த விமர்சனம் எடுபடவில்லை என்பதுதான் அனுபவம். அவர்கள் புதிது, முன் அனுபவம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மக்கள் தங்களை நம்பித் தேர்ந்தெடுத்திருக்கும் நிலையில், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மற்றவர்களை விட அவர்களுக்குக் கூடுதலாக இருக்கும். எனவே, மக்கள் நம்பிக்கையைத் தக்க வைக்க நல்ல முறையில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற அக்கறையுடன் கற்றுக் கொள்வார்கள் என்றே கருதுகிறோம்.
மூன்றாவதாக, தவெக 35 சதவிகித வாக்குகளைத்தானே பெற்றிருக்கிறது, 65 சதவிகித மக்கள் எதிராகத்தானே வாக்களித்திருக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இல்லை. மற்ற கட்சிகளை விட அதிக இடங்களைப் பெறுகிற கட்சி ஆட்சி அமைக்கும் என்பதுதான் நிலை. அகில இந்திய அளவிலும், அனைத்து மாநிலங்களிலும் இதுதான் கடைபிடிக்கப்படுகிறது. எனவேதான் தேர்தல் சீர்திருத்தம் என்பதை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மற்ற கட்சிகளால் இந்த கோரிக்கை முனைப்பாக முன்வைக்கப்படாததால் இது விவாதப் பொருளாக ஆகவில்லை. வரும் காலத்தில் வலுவாக இதை வலியுறுத்த வேண்டும்.
திமுக அல்லது அதிமுகவை தேர்ந்தெடுப்பது மட்டும்தான் மக்களுக்கு இருந்த வாய்ப்பு என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ்நாட்டில் ‘இரு துருவ ஆட்சி’ என்று நிலவிய நிலைக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது முக்கிய திருப்புமுனையாகும்.
புதிய ஆட்சியின் முன்னுள்ள சவால்களும் சிபிஐ(எம்)-ன் பார்வையும்
புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் அரசியல், பொருளாதாரக் கொள்கை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. ஒன்றிய – மாநில அரசுகள் கடைபிடித்த தாராளமய பொருளாதார கொள்கை காரணமாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது கற்பனைக்கெட்டாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் சொத்துக்களின் குவிப்பு; மற்றொரு பக்கம் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அல்லாடும் பெரும்பகுதி மக்கள்.
கௌரவமான, நிரந்தரமான வேலை, உறுதிப்படுத்தப்பட்ட ஊதியம் என்பதெல்லாம் பொய்யாய், கனவாய் போய்விடுமோ என்ற அளவுக்கு வேலையில் இருப்பவர்கள், வேலை தேடுவோர் நிலைமை பதற்றம் நிறைந்ததாக மாறியுள்ளது. இதில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம். எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நேர்மையான, ஊழலற்ற ஆட்சி என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எவையெல்லாம் தவறு, குறை என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றினார்களோ அவற்றையெல்லாம் இல்லாமல் சரி செய்ய வேண்டிய கடமை புதிய ஆட்சிக்கு உள்ளது. மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் அரசுக்கான நிதி வருவாயை எப்படிப் பெருக்குவது என்பது முக்கியமான சவால். தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் தொடர்பாக இவர்கள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறார்கள்? மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவதற்கும் முன் வர வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஒரு கால அவகாசம் தேவை என்பது சரியே.
ஏற்கெனவே, முதல்வர் விஜய் அவர்கள் கொடுத்துள்ள உறுதிமொழிகளுடன், மக்கள் நலன் சார்ந்த சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கும், ஆதரவளிக்கும். மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்த்துப் போராடுவோம் என்பதுதான் இந்த ஆட்சி குறித்த கட்சியின் நிலைப்பாடு என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
கட்சியின் சார்பில் சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண முடியும் என்ற எந்த மாயையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடையாது. அதே நேரத்தில், மக்களின் உரிமைகளைக் காக்க, கோரிக்கைகளை எடுத்துரைத்து, வலுவாகக் குரல் எழுப்ப முடியும். ஆட்சியாளர்களின் தவறுகளை அம்பலப்படுத்த முடியும்.
எனவே, அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரியான அரசியல் நிலைபாட்டையே மேற்கொண்டுள்ளது. இவ்வாறு பெ. சண்முகம் அந்த கட்டுரையில் எழுதி இருந்தார்.

முரசொலியில் ப. திருமாவேலன் எழுதி வரும் கட்டுரை
பெ.சண்முகத்தின் ‘தீக்கதிர்’ கட்டுரையை முன்வைத்து ஜூன் 23-ந் தேதி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதி வரும் தொடர் கட்டுரையின் முதல் பகுதி
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதைப் போல மே மாதம் 8 ஆம் தேதி எடுத்த முடிவுக்கு ஜூன் மாதம் 19ஆம் தேதியன்று விளக்கம் அளித்து மிக நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். ‘புதிய அரசியல் சூழலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்’ என்று பெரிய தத்துவார்த்த தலைப்பைச் சூட்டி இருக்கிறார். ஏதோ தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்து விட்ட மகிழ்ச்சியில் அந்தக் கட்டுரை தீட்டப்பட்டுள்ளது.
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு என்ற நிலைப்பாடு மார்க்சிய, லெனினிய, கம்யூனிச, சோசலிச நிலைப்பாடு என்பதாக சண்முகம் நினைத்துக் கொண்டு ஒரு பக்கத்துக்கு நீட்டி முழங்கி இருக்கத் தேவையில்லை.
- குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும்.
- தேர்தல்வந்துவிடும்
என்று சொல்வது எல்லாம் உலகப் பம்மாத்து ஆகும். சண்முகத்தின் உண்மையான நோக்கம், ‘திராவிடக் கட்சி இல்லாத ஆட்சி அமைய ஆதரவு’ என்பதுதான். அதனால்தான் த.வெ.க. ஆட்சியை விழுந்தடித்து போய் ஆதரித்துள்ளோம் என்பதை சண்முகமே கக்கி விட்டார்.
‘புதிய அரசியல் சூழல்’ என்று அவர் சொல்ல வருவது.. “ தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான் மக்களுக்கு இருந்த வாய்ப்பு என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் ‘இரு துருவ ஆட்சி’ நிலவிய நிலைக்கு இந்தத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது முக்கிய திருப்புமுனை ஆகும்’’என்று தனது உண்மையான மகிழ்ச்சியைசண்முகம் வெளிப்படுத்தி இருக்கிறார். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை, மீண்டும் மம்தா ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களே அதைப் போல!
சண்முகம் இந்தக் கட்டுரையை எழுதி வெளியிட்ட அன்று, இவருக்கு முன்னதாக செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,‘ திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க 1989 ஆம் ஆண்டில் இருந்து முயற்சித்து வருகிறோம்’ என்று சொல்லி இருக்கிறார். இவர்கள் எல்லாம் பி.ராமமூர்த்தி டானிக்கில் வளர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். திராவிட இயக்க ஒவ்வாமை ஒன்றுதான் இவர்களது இலக்கணம். அதனால்தான் விஜய்யிடம் ஆதரவுக் கடிதத்தைக் கேட்டு வாங்கி இவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
ஆதரவுக் கடிதம் இல்லாமல் காங்கிரஸ் ஆதரித்ததற்கும், ஆதரவுக் கடிதத்தை கம்யூனிஸ்ட்டுகள் கேட்டு வாங்கியதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.
திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு தேர்தலில் தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வையும், மறு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தி.மு.க. வையும் தோற்கடிக்கப் பார்ப்பதுதான்அவர்களுக்குத் தெரிந்த தேர்தல் உத்திகள்ஆகும். மக்கள் நலக் கூட்டணி வைத்து மண்ணைக் கவ்வியதையும் தமிழ்நாடு பார்த்துள்ளது. முப்பது ஆண்டுகளாக இவர்களது தேர்தல் உத்தி இது ஒன்றுதான். இவர்களுக்கு இப்போது விஜய், கலங்கரை விளக்கமாகத் தெரிகிறார். உண்மையான மாற்றம் என்பது கம்யூனிஸ்ட்டுகளுக்குத்தான் கிடைத்திருக் கிறது. புதிய பல்லக்கு!
இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஒரு கட்சிகூடுதல் இடங்களைக் கைப்பற்றியதும் உடனடியாக அதனை ஆதரிக்க சண்முகம் முடிவெடுத்துவிட்டார். மற்றபடி குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடும் என்பதெல்லாம் சண்முகத்தின் அதீத கற்பனை ஆகும்.
அமைச்சர் பதவி தருகிறோம், வாரியம் தருகிறோம், இன்னும் பல தருகிறோம் என்று ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு, குதிரை பேரம் மட்டுமல்ல, எல்லாப் பேரமும் நடத்தப்பட்டு அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 உறுப்பினர் ஆதரவை விஜய் வாங்கி விட்டார். எனவே இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆதரவு தரவில்லை என்றாலும் தனது பெரும்பான்மையை நிரூபித்திருப்பார் விஜய்.
த.வெ.க.வின் 107 என்ற எண்ணிக்கையுடன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 25 பேரின் வாக்குகளையும் சேர்த்தால் 132 வாக்குகள் வந்துவிட்டது. எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுப்பதற்காக ஆதரித்தோம் என்று சண்முகம் சொல்வதே ஊரை ஏமாற்றும் பசப்புவாதம் ஆகும்.
‘யார் ஆட்சி அமைத்தாலும் இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் நிலைமை. எனவே இந்த மிக முக்கிய மான பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையுடன் கட்சி இதை அணுகியது’’ என்று மார்தட்டிக் கொள்கிறார் சண்முகம்.
தி.மு.க. கூட்டணியில் வென்ற நான்கு கட்சிகளின் ஆதரவைப் பெற்ற பிறகு, இந்தக் கட்சிகளை உண்மையில் நம்பி இருந்தால் அ.தி.மு.க. தயவை நாடி இருக்க மாட்டார் விஜய்.
பெ.சண்முகம் போன்றவர்களை விட விஜய் அதிகம் நம்பியது சி.வி.சண்முகத்தைத்தான். அ.தி.மு.க. எதிர்ப்பை கூர்மையாகப் பேசும் பெ.சண்முகம், சி.வி.சண்முகம் வீட்டுக்கு விஜய் போனதும், ‘த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு இல்லை’ என்று அறிவித்திருந்தால் அவரைப் பாராட்டலாம்.
144 உறுப்பினர் ஆதரவுடன் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்து உள்ளார். இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 உறுப்பினர் ஆதரவும் இருக்கிறது. அ.தி.மு.க. தயவுடன் அமைந்துள்ள ஆட்சியை ஆதரிப்பது சண்முகத்துக்கு கேவலமாகத் தெரியவில்லையா? சி.வி.சண்முகமும் பெ.சண்முகமும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கிறார்கள். கொள்கைப் புடலங்காய் ஏதுமில்லை.

இன்று ஜூன் 24-ந் தேதி வெளியான பகுதி- 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழுதி இருக்கும் கட்டுரையில் சகிக்க முடியாதது, ‘சி.பி.எம். முன்னால் இருந்த மூன்று வாய்ப்புகள்’ என்ற பகுதி ஆகும்.
- த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவுகடிதம் கொடுத்த நிலையில் ஆதரிப்பது.
- தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க.ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது.
- யாரும் ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் நிலை.
- இதுதான் அவர் முன்னால் இருக்கும் வாய்ப்புகளாம்.
ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாரை ஆதரிப்பது என்பதற்கு இப்படி மொன்னையான அளவுகோல்கள் மட்டும் தான் உண்டா? சிவப்புத் துண்டு போட்டிருப்பதால் கொள்கைப்பூர்வமாகவே கேட்போம்.
- ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எந்த வர்க்கத்தை ஆதரிப்பது?
- ஆட்சி அதிகாரத்தைப் பெறப்போகும் அரசியல் சக்தியை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார்?
- நாம் எடுக்கும் நிலைப்பாட்டின் மூலமாக பலனடையப் போகும் சக்தி யார்?
- இது தானே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாக இருக்க முடியும் என்று அப்பாவி மார்க்சிஸ்ட் நினைப்பார்! ஆனால் சண்முகத்துக்கு அப்படி எந்தச் சிந்தனையும் இல்லை.
- ஆதரவுக் கடிதம் யார் அனுப்பினாலும் ஆதரித்து விடுவார்களா?
- த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை தயக்கம் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட்கட்சி எப்படி எடுக்க முடியும்? அவர்கள் யார் என்று சண்முகத்துக்கு தெரியாதா? யாரால், எத்தகைய சக்திகளால்சூழப்பட்டவர் விஜய் என்பது சி.பி.எம்.க்குத் தெரியாதா?
எத்தகைய ஆட்சியை ஆதரித்துள்ளீர்கள்? கடந்த ஏப்ரல் மாதம் முழுக்க வெளியான ‘தீக்கதிர்’ நாளிதழை திருப்பிப் பார்த்தாலே தெரியுமே விஜய் யார் என்று?
- ஏலம் போடும் ஜனநாயகம் – லாட்டரிமாஃபியாவும் கார்ப்பரேட் நிழலில் ஆடும் கட்சிகளும்’ என்ற கட்டுரையில் மார்ட்டின் குடும்பத்தின் ஊடுருவல் ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும், லாட்டரி பணத்தை அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கப் பயன்படுத்துவது வரலாற்று முரண் என்றும் எழுதியது ‘தீக்கதிர்’.( ஏப்ரல் 1) த.வெ.க.வின் அடித்தளமே வரி ஏய்ப்பு புகார்கள் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆடிக் கொண்டிருக்கிறது என்று எழுதி இருக்கிறது ‘தீக்கதிர்’.
- தூய சக்தி வேட்பாளர்களின் தீய பின்னணிகள் ( 3.4.2026)
- விஜய்யின் லாஜிக் இல்லாத மேஜிக் ஷோ ( 4.4.2026)
- ‘நெல்லையில் விஜய்யின் சாரமில்லா பிரச்சாரம்’ கட்டுரையில் அவரது மதச்சார்பு முகம் கிழித்தெறியப்பட்டது.( 9.4.2026)
- மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காகவே இத்தகைய கட்சிகள் களமிறக்கப்படுகின்றன என்று விஜய் கட்சி மீது பாய்ந்தார் பெ. சண்முகம் ( 9.4.2026)
- ‘இது மக்களுக்கான இயக்கமோ மாற்று அரசியலோ அல்ல. சிறுபான்மையினரின் வாக்குகளை சிதைப்பதற்காக பின்னப்பட்டநுணுக்கமான சூழ்ச்சி வலை’என்று ஏ.ஆர்.பாஷாவின் விரிவானபேட்டியை, ‘தவெகவின் போலி முகத்திரை’ என்ற தலைப்பிட்டு தீக்கதிர் வெளியிட்டுள்ளது. 15.4.2026)
- துப்பாக்கி, பீட்ஸ், ஜனநாயகன் – இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விஜய்யின்சந்தர்ப்பவாதங்கள் (15.4.2026)
- காகிதப் பூக்களில் நிதர்சன அரசியலும் ( 17.4.2026)
- இது திரைப்படமல்ல மிஸ்டர் விஜய் ( 18.4.2026)
- வெள்ளி பர்தாவும் வெற்று வாக்குறுதிகளும் ( 20.4.2026)
- இப்படி எத்தனையோ செய்திகள் ‘தீக்கதிரி’ல் இருக்கிறது. இத்தகைய ஆட்சியைத் தான் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்துள்ளார் சண்முகம்.
கடந்த காலத்தை மறந்திருக்க மாட்டார் பெ. சண்முகம். வாச்சாத்தி மக்களுக்காக உண்மையாக உழைத்த மாபெரும் தியாகம் அவருடையது. அவர் அன்று அந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்கவில்லை என்றால் அந்த அப்பாவி மக்களுக்கு இன்று நீதி கிடைத்திருக்காது என்பது யாராலும் மறைக்க முடியாத மாபெரும் உண்மை ஆகும்.
34 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சித்தேரி மலையில் சிதைக்கப்பட்டார்கள் பெண்கள். இது பற்றி மார்க்சிஸ்ட் தலைவர் நல்லசிவன் அவர்கள் சட்டமன்றத்தில் கேட்டபோது, ‘வயதானநீங்கள் அந்த மலைக்கு எப்படி போய் பார்த்தீர்கள்?’ என்று கேட்டவர்தான் இன்று சண்முகம் ஆதரிக்கும் ஆட்சியின் மையப்புள்ளியான செங்கோட்டையன். ‘அது மலைக்கிராமம் அல்ல, மலையடிவாரத்தில் இருக்கும் கிராமம் ‘ என்று செங்கோட்டையன் மண்டையில் அன்றே கொட்டினார் நல்லசிவன்.
பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு அடையாள அணிவகுப்புக்காக வந்த போது அவர்களை மிரட்ட பயணிகள் விடுதியில் தங்கிஇருந்தவர் தான் செங்கோட்டையன்.
‘என்னையும் அரூர் அண்ணாமலையையும் ஆக்சிடெண்ட் ஆக்கி கதையை முடிங்கப்பா என்று செங்கோட்டையன் சொன்னார்’என்று பெ.சண்முகம் சமீபத்தில் கம்பீரமான பேட்டியே கொடுத்தார். அப்படி துணிச்சலாக வாச்சாத்தி பெண்களின் உரிமையை நிலைநாட்டிய சண்முகம், செங்கோட்டையன் அமைச்சர் ஆக ஆதரித்ததுதான் 2026 தேர்தலின் புதிய சூழ்நிலை ஆகும். இருவரும் கைகோத்து நடந்து போனது கண்கொள்ளாக் காட்சியாகும். பெ.சண்முகமும் செங்கோட்டையனும் ஒரே நேர்கோட்டுக்கு வந்துள்ளது தான் இன்றைய புதிய அரசியல் சூழ்நிலை ஆகும்.
விஜய் மத ரீதியாக தேர்தல் பரப்புரை செய்தபோது அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னவர் பெ.சண்முகம். விஜய் மீது வருமான வரி வழக்கு வந்த போது, ‘அவர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்’ என்று சொன்னவரும் அவரே. இதையெல்லாம் அவர் மறந்திருக்கலாம். உண்மையான மார்க்சிஸ்ட்டுகள் மறந்திருக்க மாட்டார்கள்.
குறைந்தபட்சம் த.வெ.க. ஆட்சியை ஆதரிக்க, வெளிப்படையான உறுதிமொழிகளைக் கேட்டுப் பெற்றாரா சண்முகம்? மேடைப் பேச்சுகள் அல்ல, எழுத்துப் பூர்வமான உறுதிமொழிகள் வாங்கப் பட்டதா? இவை எதுமில்லாமல் த.வெ.க.ஆட்சியை ஆதரிக்க என்ன நெருக்கடி அவருக்கு? திராவிட இயக்க வெறுப்பு மட்டும் தான்.
அப்படியானால் அந்த உண்மையான நோக்கத்தைச் சொல்லி அரசியல் நடத்துங்கள். ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும் என்று சொல்லி ‘கரூர் பலிபீட’ வெகுஜன விரோதி ஆட்சியை ஆதரிக்கத் தேவையில்லை. இவ்வாறு ப. திருமாவேலன் எழுதி உள்ளார்.
இந்த கட்டுரை நாளையும் தொடரும் என முரசொலியில் அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
