“மாணவிகளுக்கு முதலுதவிதான் செய்தேன்: அமைச்சர் விஸ்வநாதன்

Published On:

| By Kavi

அன்பில் மகேஷ் உள்நோக்கத்தோடு இழிவுபடுத்துகிறார் என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

மதுரை மேலூரில் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்,  ’வாடி வாடி கைப்படாத சிடி” என்ற முதல்வர் விஜய் பட பாடலுக்கு நடனமாடினார் அமைச்சர் விஸ்வநாதன். இரட்டை அர்த்தம் கொண்ட இந்த பாடலுக்கு மாணவ மாணவிகள் முன்பு ஆடியது முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

ADVERTISEMENT

அதோடு அந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் காலை தொட்டு சொடுக்கு  எடுத்தது தொடர்பான புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  ” உயர்கல்வித் துறை அமைச்சர் ஒரு பள்ளிக்கு சென்று நடனம் ஆடுகிறார். அதில் தவறில்லை. ஆனால், அந்தப் பாட்டின் வரிகளும், அங்கே வெளிப்பட்ட பக்குவமின்மையும் முகம் சுளிக்க வைக்கின்றன.

ADVERTISEMENT

“Good Touch Bad Touch” u சொல்லிக்கொடுக்க வேண்டிய அமைச்சரே குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் விதம் என்பது அமைச்சருக்கானது அல்ல. அநாகரிகமான செயலை அமைச்சரே செய்துகொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் விஸ்வநாதன், ”மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘விரா” (விஜய் – ராகுல் ViRa) விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன்.

இதற்கு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்நோக்கம் கற்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி, தி.மு.க. ஐ.டி. விங்கில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரீகமான செயலாகும்.

தமிழகத்தில்60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு முடிவுகட்டி, தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு இனி எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாத அளவில் மிகச் சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதலமைச்சர் விஜய் நடத்திக் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத வகையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிவு அமைந்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

கடந்த காலத்தில் அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த போது ஊழலின் ஊற்றுக் கண்ணாக அந்த துறையை மாற்றி எத்தகைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றது என்பதை சமீபத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் விலாவாரியாக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்தியதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாத அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கிற என்னை குறிவைத்து, இழிவுபடுத்தி பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேலும், தங்களது ஐ.டி. விங் மூலம் இழிவான பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தங்களது தரத்தை தான் அவர்கள் தாழ்த்திக் கொள்கிறார்களே தவிர, எக்காலத்திலும் எங்களை விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். இனியும் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக திமுக சட்டப்பிரிவு உறுப்பினரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சரண்யா நடராஜன், டிஜிபி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையிடம் புகார் மனு அளித்துள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share