“துரோகி” முழக்கம்.. மல்லுக்கட்டிய திமுக – காங்கிரஸ்- சென்னை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சித்துப் பேச, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை அடிக்கப் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேரமில்லா நேரத்தின் போது, 182-ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் பேச எழுந்தார். அப்போது, “நான் உங்களைப் போலக் கட்சி பற்றியோ, அரசியல் பற்றியோ பேச மாட்டேன்; மக்கள் பிரச்சினைகளை மட்டுமே பேசுவேன்” என்றார். இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து தனது வார்டு பிரச்சினைகளைப் பற்றிப் பேசிய அவர், மீண்டும் “நான் உங்களைப் போலக் கட்சியைப் பற்றிப் பேச மாட்டேன்” என்றார்.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த திமுக வார்டு உறுப்பினர்களான சிற்றரசன், கவி கணேசன் உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள், அதிமுக உறுப்பினர் சதீஷை நோக்கி நேரடியாக அடிக்கப் பாய்ந்தனர்.

திமுக கவுன்சிலர்கள் காகிதங்களைத் தூக்கி வீசினர். சதீஷும் எதிர்த்து ஆவேசமாகப் பேச முற்பட்டதால் அவையில் பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனடியாக, இருதரப்பையும் சேர்ந்த மற்ற கவுன்சிலர்கள் அவர்கள் இருவரையும் இழுத்துப் பிடித்துச் சமாதானப்படுத்தினர்.

ADVERTISEMENT

மேயர் பிரியா எச்சரிக்கை

அவையில் நிலவிய கூச்சலையும் குழப்பத்தையும் கண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, உறுப்பினர்களை நோக்கி, “அனைவரும் அமைதியாக அமருங்கள்; இல்லையென்றால் அவையை விட்டு வெளியே சென்று உங்களது வாக்குவாதத்தை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

மேயரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். இந்தத் திடீர் சச்சரவால் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் சில நிமிடங்களுக்குக் கடுமையான பரபரப்புடன் காணப்பட்டது.

ADVERTISEMENT

காங்கிரஸ் வெளிநடப்பு

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் திரவியம் பேசும்போது, தொடக்கத்தில் “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். அப்போது அங்கிருந்த திமுக உறுப்பினர்கள் “துரோகிகள்” என்று முழக்கம் எழுப்பியதால் மீண்டும் கடும் வாக்குவாதம் நிலவியது.

மேயர் பிரியா முன்னிலையிலேயே ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக இரு தரப்பினரும் “துரோகிகள், துரோகிகள்” என்று பரஸ்பரம் விமர்சனம் செய்துகொண்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, “துரோகிகளே வெளியே போ, வெளியே போ” என்று திமுக கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்துக் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் திரவியம், மேயர் பிரியாவிடம் சென்று, “திமுக கவுன்சிலர்கள் உங்கள் முன்னிலையிலேயே தொடர்ந்து எங்களை இழிவாகப் பேசுகிறார்கள்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முறையிட்டார். ஆனாலும், தொடர்ச்சியாகத் திமுக கவுன்சிலர்கள் தங்கள் கோஷங்களை முன்வைத்தனர்.

இதனை எதிர்த்துக் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் மொத்தம் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மாமன்றக் கூட்டம் நிறைவடைவதாக மேயர் பிரியா அறிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share