உங்க பாணியில் எங்களுக்கும் பேசத் தெரியாமல் இல்லை – கீதா ஜீவன் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Geetha

ஆளுநரின் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களின்பேச்சு ஆணவத்தின் உச்சம். அதிகாரத் திமிரின் வெளிப்பாடு என முன்னாள் அமைச்சர் கீதா ஜூவன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், “எதிர்கட்சித் தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழக அரசின்மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தார். மின்வெட்டு – விவசாயிகள் பிரச்சினை – சீரழிந்துவரும் சட்டம் ஒழுங்கு என நியாயமான கேள்விகளை எழுப்பினார். பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினரைக்கூட ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு முதல்வர் பதிலளிப்பார் என்றே எதிர்பார்த்தோம்.

ADVERTISEMENT

ஆனால், முதல்வருக்கான மாண்புகளை மறந்து ஸ்டாண்ட்-அப் காமெடியன்போல உளறிக் கொட்டியிருக்கிறார் முதல்வர் விஜய். பதிலுரை முழுக்கவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பிதற்றல்களுமே நிறைந்திருந்தன. ஒரே மாதத்தில் 150 பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, என சட்டம் ஒழுங்கு சீரழிவு, மின்சாரத்துறை செயலழிப்பு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டற்றவர்களுக்கு பதில்சொல்ல வக்கற்ற முதல்வர் சார் திமுக மீது அவதூறை அள்ளித் தெளித்திருக்கிறார். பாஜகவுடன் இணக்கமாக இருப்போம் எனக் கூறிவிட்டு திமுக குறிவைத்து தாக்குவதிலேயே நீங்கள் யார் என்பது அம்பலப்பட்டுவிட்டது.
முதல்வர் விஜய் அவர்களே.. இந்த வெற்றுக் வாய்சவுடால்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல திராவிட முன்னேற்ற கழகம் . எனவே உங்கள் வசனங்களை சினிமா ஷூட்டிங்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

அதிலும் எங்கள் தலைவர் குறித்து முதல்வர் விஜய் பேசியது நடித்திருப்பது ஆணவத்தின் உச்சம்.. அதிகாரத் திமிரின் வெளிப்பாடு. 50 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கையில் உள்ள மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் அறிந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியிலே தமிழ்நாட்டை வளர்ச்சி அடைய செய்தவர் எங்கள் தலைவர். 1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட திமுகவின் தலைவர். தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்று‌ கூட்டணி கட்சிகளை தவெவிற்கு ஆதரவு தரக் கூறினார் என்பதை அனைவரும் அறிவர். தளபதியாரை குறித்து இவ்வளவு ஏளனமாக தனி நபர் விமர்சனம், கேலிப்பேச்சு ..

ADVERTISEMENT

சபையில் இல்லாதவரை குறித்து இதுவரை சட்டமன்றத்தில் இவ்வளவு அநாகரிகமாக பேசப்பட்டதில்லை‌.எல்லாவற்றுக்கும் மக்கள் ‌பதில் தருவார்கள்.

கழகத் தலைவர் தளபதியாரைப் பற்றி முதலமைச்சரின் தரம் தாழ்ந்த பேச்சு மற்றும் திமுகவின் மீது அவருடைய பொய்க்குற்றச்சாட்டுகள் அனைத்தும் கண்டனத்துக்குரியது. மாண்பையும் மரபையும் கட்டிக் காக்க வேண்டும் என்ற எங்கள் தலைவரின் உத்தரவின் பெயரிலேயே மிகுந்த கண்ணியத்துடன் விமர்சிக்கிறோம். உங்கள் பாணியில் எங்களுக்கும் பேசத் தெரியாமல் இல்லை என்பதை நினைவில் கொள்க.
சட்டமன்றத்துக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது; அவற்றை மறந்து சிரித்து, விசிலடிக்கும் பொழுதுபோக்கு மன்றமாக சட்டமன்றத்தை மாற்றியிருக்கிறார் முதல்வர் விஜய்.

ADVERTISEMENT

அமைச்சர்கள் டூயட் பாடல்களுக்கு ஆடுகிறார்கள்.. எம்எல்ஏக்கள் விசில் அடிக்கிறார்கள்.. முதல்வர் சட்டமன்றத்தில் நாடகத்தை அரங்கேற்றுகிறார். இந்த ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது!” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share