காரைக்குடி மாநகராட்சியில் நடிகை திரிஷா (Trisha) படத்தை வைக்க வேண்டும் என்று சுயேட்சை கவுன்சிலர் முழக்கம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காரைக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று ஜூன் 24-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 11-வது வார்டு கவுன்சிலரான சி. மெய்யர், “மாமன்ற கூட்டத்தில் ”நடிகை திரிஷா” படத்தை வைக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்.
மேலும், “திரிஷா படத்தை மன்றத்துக்குள்ள வெச்சே ஆகனும்”
“திரிஷா படத்தை வைக்கலைன்னா பெரிய கலவரம் நடக்கும்”
”எல்லாருடைய படத்தையும் அடுக்கிகிட்டே இருந்தா திரிஷா படத்தையும் வையுங்க”
”ஆட்சி மாற்றத்துக்கு காரணமே திரிஷாதான்.. அடுத்த முதல்வரே திரிஷாதான்”
“அடுத்த முதல்வர் திரிஷா.. திரிஷா படத்தை கொண்டு வந்து வைங்க”
”அந்தப் படத்தை வை.. இந்தப் படத்தை வைன்னு சொல்லாம.. திரிஷா படத்தை வெச்சுட்டு கூட்டத்தை நடத்துங்க.. திரிஷா என்ன மட்டமா?”
”திரிஷா படத்தை வையுங்க”
“திரிஷா படத்தை வையுங்க”
என தொடர்ந்தும் சி. மெய்யர் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக சி.மெய்யரை தொடர்பு கொண்டு நாம் பேசிய போது, “ஒவ்வொரு கட்சிக்காரங்களும் அவங்க படத்தை வைங்க.. இவங்க படத்தை ஏன் வைக்கவில்லை என கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அதனால்தான் நான் திரிஷா படத்தை வைக்க சொன்னேன்.. நான் சுயேட்சை கவுன்சிலர். எந்த கட்சியையும் சேராதவன்” என்றார்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை எடுத்ததற்கு எதிராகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்த வைக்க வலியுறுத்தியும் கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
