பாஜகவிடம் தவெக உதவி கேட்டதா? – நயினாருக்கு செங்கோட்டையன் பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

sengottaiyan

“திமுகவிடம் மருத்துவக் கல்லூரி தொடங்க விண்ணப்பம் போட்டவர் நயினார் நாகேந்திரன். அவர் இதைப் பற்றிப் பேசுவது அழகல்ல” என்று தமிழக வெற்றிக் கழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பேசுகையில், “திமுகவைப் பொறுத்தவரை அவர்களின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் தலைவர் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். திமுக தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறது; அவர்கள் முறையான கருத்துக்களைச் சொல்லி நாட்டின் வளர்ச்சிக்கு உதவினால் சரியாக இருக்கும்.

ADVERTISEMENT

ஆளுநர் பதவி குறித்த விவாதம்:

குடியரசுத் தலைவரும் ஆளுநரும் ஒன்றுதான். குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன்; ஆளுநர் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை ஏற்படுத்துபவர். இதைச் சொன்னதற்காக எங்களைக் கிண்டல் செய்தார்கள். ‘ஆட்டுக்கு வாலும், நாட்டிற்கு கவர்னரும் தேவையில்லை’ என்று கிண்டல் செய்தார்கள். ஆனால், நாங்கள் அதுபோலச் செய்யவில்லை.

எங்களைப் பொறுத்தவரை, கலைஞர் படத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் வந்தபோது இருமுறை தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது; அது தவறில்லை. அதுபோலத் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தமிழ் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் எந்த இடத்தில் இருந்தாலும் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் தலைவரின் லட்சியப் பயணம். அதை ஆளுநர் தெளிவாகச் செய்தார்.” என்றார்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு மாணவர்கள் தவெக கொடி ஏந்தியது குறித்த கேள்விக்கு, “முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்குப் பள்ளி மாணவர்களைக் கட்சிக் கொடி தூக்க வைத்தது குறித்த கேள்விக்கு, பொதுவாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சில இயக்கங்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு உணர்வுதான் தற்போது தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. ‘விசில்’ சின்னத்தை உலகத்திற்குக் கொண்டு செல்லக் குழந்தைகள் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், கட்சிக் கொடியை மாணவர்கள் கையில் ஏந்தி வருவதற்கு நாங்கள் பொறுப்பல்ல.” என்றார்.

நயினார் நாகேந்திரனுக்குப் பதில்

பாஜகவிடம் ஆட்சி அமைக்க விடுங்கள் எனத் தவெக தரப்பில் கேட்கப்பட்டதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு, ” நயினார் நாகேந்திரன் ஒரு காமெடிப் பேச்சாளர்; அவருக்குப் பதில் சொல்ல முடியாது. அவர் எங்களைத் தாக்குகிறாரே ஒழிய, திமுகவும் பாஜகவும் தங்களுக்குள் தாக்கிக் கொண்டிருக்கின்றன. அங்குச் சமரச முயற்சி செய்துவிட்டு, மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்காக விண்ணப்பம் போட்டவர் அவர். எனவே, அவர் இதைப் பேசுவது அழகாக இருக்காது.

ADVERTISEMENT

பாஜகவிடம் நாங்கள் என்றைக்கும் உதவி கேட்டது கிடையாது. நாங்கள் ஆட்சி அமைத்ததற்குப் பிறகு எல்லோரையும் பார்க்க வேண்டும் என்பதற்காகக் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரையும் சந்திப்பது இயற்கையான ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share