ஒடிஷாவில் மீண்டும் ’பாண்டியன் ராஜ்ஜியம்’! அதிர வைக்கும் ‘தமிழ்நாட்டு மருமகள்’!

Published On:

| By Mathi

vk pandian wife sujata joins-bjd

ஒடிஷாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் (BJD) கட்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுஜாதா ரவுத் கார்த்திகேயன் (Sujata) இணைந்திருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது. இவர் வேறு யாருமல்ல.. 2024-ம் ஆண்டு ஒடிஷா சட்டசபை தேர்தலின் போது பாஜகவின் ‘டார்கெட்’டாக இருந்த- முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலது கரம் தமிழரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவிதான் இந்த சுஜாதா கார்த்திகேயன்.

பிஜூ பட்நாயக்கும் திமுக- அதிமுக இணைப்பும்

ஒடிஷாவின் முதுபெரும் அரசியல் தலைவர், அம்மாநில முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக். 1979-ல் தமிழ்நாட்டில் இரு பெரும் துருவங்களான திமுகவையும் அதிமுகவையும் ஒரே கட்சியாக இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டவர். அப்போது கலைஞர்- எம்ஜிஆர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பிஜூ பட்நாயக். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

ADVERTISEMENT

1990களில் ஜனதா தளத்தில் பயணித்தார் பிஜூ பட்நாயக். 1997-ல் பிஜூ பட்நாயக் மறைந்த பின்னர் அவரது மகன் நவீன் பட்நாயக் தீவிர அரசியலில் இறங்கினார். தந்தை பிஜூ பட்நாயக் பெயரில் பிஜூ ஜனதா தளம் கட்சியை தொடங்கினார்.

ஒடிஷாவில் வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிந்துவிட்டு 2000-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தது பிஜூ ஜனதா தளம்; 24 ஆண்டுகாலம் அம்மாநில முதல்வராக பதவி வகித்தவர் நவீன் பட்நாயக்.

ADVERTISEMENT

நவீன் பட்நாயக்கும் விகே பாண்டியனும்

நவீன் பட்நாயக் ஆட்சி நிர்வாகத்தில் வி.கே. பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு தமிழர் – ஐஏஎஸ் அதிகாரி மிக முக்கிய பங்கு வகித்தார். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்ற தொடங்கி ஒரு கட்டத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையமாக உருவெடுத்தார்.

பிஜூ ஜனதா தளம் கட்சியை மக்களிடத்தில் தக்க வைப்பதில் அரசு நிர்வாகத்தில் இருந்த விகே பாண்டியன் மிக முக்கிய பங்களிப்பு செய்தார். இதனாலேயே விருப்ப ஓய்வு பெற்று அதிகாரப்பூர்வமாக பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்.

ADVERTISEMENT

2024 தேர்தலின் மையப் புள்ளியான பாண்டியன்

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிஷா சட்டசபை தேர்தலில் மிக முக்கியமான விவாதப் பொருளாக வி.கே. பாண்டியன் இருந்தார். அவரைச் சுற்றியே ஒடிசாவின் தேர்தல் களம் அமைந்திருந்தது.

அந்த தேர்தலில் “ஒடிய சுயமரியாதை” (Odia Asmita) என்ற முழக்கத்தை பாஜக முன்வைத்தது. ஒடிஷாவில் ஒரு தமிழர் ஆட்சி- கட்சி நிர்வாகத்தில் தலைதூக்கி நிற்பதற்கு எதிரான பிரசாரமாக தீவிரப்படுத்தப்பட்டது.

ஒடிஷாவின் புகழ் பெற்ற பூரி கோவிலின் ரத்ன பண்டார் (கருவூலம்) சாவிகள் தொலைந்து போனதாகக் கூறப்படும் விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி, அந்தச் சாவிகள் வி.கே. பாண்டியனின் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று விமர்சித்தார். இது தமிழ்நாட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. தமிழர்களை திருடர்கள் என மோடி விமர்சித்தார் என்பது இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் விவகாரம்.

மேலும் அந்த தேர்தலில் பாஜக வெளியிட்ட “பாப பெடி” (25 ஆண்டுகால பாவங்களுக்கான பெட்டி) என்ற துண்டுப் பிரசுரத்தில், விகே பாண்டியன், ஒடிஷாவின் கலாச்சாரத்தையும் கோவிலின் புனிதத்தையும் சிதைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர் ஒரு “ஒடியர் அல்லாதவர்” (Non-Odia) என்பதால், ஒடிஷாவின் பாரம்பரியமான கோவிலை நிர்வாகம் செய்யும் தார்மீக உரிமை அவருக்கு இல்லை என்ற ரீதியிலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

2024-ல் பிஜூ ஜனதா தளம் தோல்வியும் ‘மவுனித்த’ பாண்டியனும்

2024-ஆம் ஆண்டு ஒடிஷா மாநிலத் தேர்தல்களில் பிஜூ ஜனதா தளம் (BJD) பெரும் தோல்வியைச் சந்தித்தது. 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி ஆட்சியை இழந்ததற்கு வி.கே. பாண்டியனே முதன்மைக் காரணம் என்று அக்கட்சியின் உள்ளேயும் வெளியேயும் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, பாண்டியன் தான் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாகப் பகிரங்கமாக அறிவித்தார். “பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு எனது செயல்பாடுகளும், எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களும் காரணமாக இருந்திருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன்” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகப் பார்க்கப்பட்ட விகே பாண்டியன், தேர்தலுக்கு முன்னதாக மிக அதிகாரம் படைத்த நபராகச் சித்தரிக்கப்பட்டார். இதுவே அவருக்கு எதிராகத் திரும்பியது. பாஜக இவரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் மூலம் ஒடிசாவின் ‘சுயமரியாதை’ (Odia Asmita) பாதிக்கப்படுவதாகவும் முன்வைத்த பிரச்சாரம் ஒடிஷா மக்களிடையே எடுபட்டது.

கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கும் பாண்டியனின் அதீத வளர்ச்சி மற்றும் அவரது நிர்வாக முறைகள் பிடிக்கவில்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்த அதிருப்தி பகிரங்கமான குற்றச்சாட்டுகளாக மாறியதால், அவர் ஒதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மீண்டும் பாண்டியனின் ராஜ்ஜியம்

இந்த பின்னணியில்தான் தற்போது விகே பாண்டியனின் மனைவி- ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா ரவுத் கார்த்திகேயன் – தமிழ்நாட்டின் மருமகள், நவீன் பட்நாயக்கை நேற்று ஜூன் 25-ந் தேதி சந்தித்து பிஜூ ஜனதா தளத்தில் ‘அதிகாரப்பூர்வமாக’ இணைந்துள்ளார்.

தாம் பிஜூ ஜனதா தளம், நவீன் பட்நாயக்கை விட்டு விலகிவிட்டதாக விகே பாண்டியன் வெளிப்படையாக அறிவித்தாலும் இன்னமும் அவர் ‘நிழலாகவே’ பின் தொடர்கிறார்; அவரது செல்வாக்கு நீடிக்கவே செய்கிறது என்பதையே பிஜூ ஜனதா தளத்தில் சுஜாதா இணைந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share