நிர்மலா சீதாராமன் மாற்றம்?

Published On:

| By Mathi

Nirmala Sitharaman's Cabinet Portfolio Reshuffle Likely

பிரதமர் மோடி (PM Modi) தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப் படக் கூடும் என்கின்றன தகவல்கள்.

மத்திய சிறுபான்மை நலன், மீன்வளத்துறை இணை அமைச்சராக இருந்த கேரளாவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் குரியன் ஜோசப்பின் ராஜ்யசபா பதவி காலம் முடிவடைந்தது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி. வாய்ப்பு தரப்படவில்லை. அதனால் மத்திய அமைச்சர் பதவியை குரியன் ஜோசப் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் முடிவடைந்த நிலையிலும் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சரான ரன்வீத் சிங் இன்னமும் ராஜினாமா செய்யாமல் இருக்கிறார். இதனால் அவர் மத்திய அமைச்சரவையில் நீடிக்கிறாரா? இல்லையா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், ஜேடியூ தலைவரான பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார், ராஜ்யசபா எம்.பி.யாகி உள்ளார்.

ADVERTISEMENT

ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் பாஜகவிலும் பாஜக கூட்டணியிலும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அவரைத் தொடர்ந்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்தே மத்திய அமைச்சரவை மாற்றம் உறுதி என்கின்றன டெல்லி தகவல்கள்.

தற்போதைய தகவல்களின்படி,

  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்படலாம்
  • ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரும் பிரதமர் மோடியின் செயலாளருமான தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ், நிதி அமைச்சராகக் கூடும்
  • நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு வினாத்தாள் சர்ச்சையில் சிக்கிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமெரிக்காவின் எப்ஸ்டீன் ஃபைல் சர்ச்சையில் சிக்கிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம்.
  • உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இருந்து பாஜகவுக்கு தாவிய 6 எம்.பி.க்களில் ஒருவர் மத்திய அமைச்சராகலாம்.
  • மத்திய அமைச்சரவையில் இருந்து சுகாதாரத் துறை இணை அமைச்சரான சிவசேனாவின் பிரதாப் ராவ் ஜாதவ் விடுவிக்கப்படலாம். அவருக்கு பதில் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய சஞ்சய் தீனா பாட்டீல் அமைச்சராகலாம்.
  • மகாராஷ்டிரா துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது.
  • பாஜகவின் அனுராக் தாகூர் மீண்டும் மத்திய அமைச்சராகக் கூடும்.
  • உ.பி. மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அம்மாநில எம்.பி.க்களான அருண் கோவில் உள்ளிட்டோர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம்.
  • அதே நேரத்தில் உ.பி. தேர்தலுக்காக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படலாம்.
  • ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு கூண்டோடு தாவியதற்காக ராகவ் சத்தா அல்லது அசோக் மிட்டலுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும்
  • பஞ்சாப்பை சேர்ந்த மத்திய அமைச்சர் ரன்வீர் பிட்டு தூக்கி அடிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ்.-ன் தருண் சுக் அமைச்சராகலாம்.
  • பீகார் முன்னாள் முதல்வரான நிதிஷ்குமாரும் மத்திய அமைச்சராகும் சாத்தியம் இருக்கிறது.
  • மின்வாரிய அமைச்சர் மனோகர் லால் கட்டாரின் அமைச்சர் பதவி பறிபோகலாம்.
  • மமதா பானர்ஜிக்கு எதிராக அக்கட்சியை விட்டு வெளியேறி திரிபுரா மாநில கட்சியில் இணைந்த 20 எம்.பி.க்களில் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி, இணை அமைச்சர் பதவிகள் கிடைக்கலாம்.
  • மத்திய இணை அமைச்சர்கள் பலரும் நீக்கப்பட்டு புதுமுகங்கள் இணைக்கப்படவே அதிக சாத்தியம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share