”இதையெல்லாம் ஏன் மறைச்சீங்க?”: அமைச்சர் நிர்மல் குமாருக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

Published On:

| By Kavi

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூன் 25) துறை சார்ந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் மின் துறையில் 2.47 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று கூறியிருந்தார். கடந்த திமுக ஆட்சி மீதும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கடந்த 5 ஆண்டுகளில் எங்களுடைய தலைவர் முதலமைச்சராக இருந்து தமிழ்நாடு அரசினுடைய நிதிகளை மின் வாரியத்திற்கு வழங்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக மின்வாரியம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கும். 

முழுமையாக தொடர்ந்து கண்காணித்து தன்னுடைய துறையைப் போல மின் துறையை கடந்த 5 ஆண்டுகளில் நிதிகளை கொடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகத்திற்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின். 

ADVERTISEMENT

இங்கே நிறைய பத்திரிக்கையாளர்கள் வந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும் மின்சாரத்தினுடைய தேவைகள் அதிகரிக்கும். அப்படித்தான் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டினுடைய மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வந்தன. ஆனால் இப்படி 5 ஆண்டுகள் அதிகரித்தாலும் கூட குறிப்பாக கோடைக்காலமாக இருந்தாலும் கூட எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்த அரசு திராவிட மாடல் அரசு. 

இன்று காலை வெள்ளை அறிக்கையை வெளியிட்ட இன்றைய மின் துறை அமைச்சர், மின்சார வாரியத்தினுடைய வருவாய், எவ்வளவு செலவு, எவ்வளவு இடைவெளி என்பதை அந்த வெள்ளை அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கின்றார். 

ADVERTISEMENT

குறிப்பாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கான அந்த கால அட்டவணையை அதிலே வெளியிட்டிருக்கின்றார். 2006-11இல் 92,737 கோடி ரூபாய் வருவாய் என்பது, அதற்கடுத்த 5 ஆண்டுகளில் 1,234 கோடி ரூபாய் அதிகரித்து ஏறத்தாழ 1,92,971 கோடி ரூபாய் வருவாய் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் அதே 5 ஆண்டுகளில் செலவினம் என்பது 1,21,200 கோடி ரூபாய் உயர்ந்து 2,49,332 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அப்பொழுது வருவாய்க்கும் செலவுக்குமான இடைவெளி பற்றாக்குறை என்பது 56,361 கோடி ரூபாய், 2011-16ஆம் ஆண்டு காலகட்டங்களில் அந்த பற்றாக்குறை இழப்பு ஏற்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2016-21இல் 58,534 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றன, இழப்பு ஏற்பட்டிருக்கின்றன.

அதேபோல முந்தைய அதிமுக ஆட்சியில், மூன்று கட்டங்களாக மின்கட்டண உயர்வு ஏற்றப்பட்டன. குறிப்பாக ஒரு முறை 37 விழுக்காடு, ஒரு முறை 3.5 விழுக்காடு அதற்கு பிறகு ஒரு முறை 16 விழுக்காடு என மூன்று முறை முந்தைய அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டன. அப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பொழுதும் கூட வருவாய் பற்றாக்குறை இழப்பு என்பது 56,000 கோடி, அதற்கடுத்து 58,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருக்கின்றன. 

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் என்பது 5 ஆண்டுகளில் மட்டும் 1,77,856 கோடி ரூபாய் உயர்ந்து 4,97,996 கோடி ரூபாயாக வருவாயை  நாங்கள் அதிகரித்து காட்டியிருக்கின்றோம்.

அப்படி வருவாய் அதிகரிக்கின்ற பொழுது செலவும் கூடியிருக்கிறதே, இதற்கு என்ன பணிகளை செய்தார்கள் என்று இன்று காலை வெள்ளை அறிக்கையிலே மின் துறை அமைச்சர் கேள்வியை எழுப்பியிருக்கின்றார். 

வருவாய் 4,97,996 என்று சொன்னால், செலவினம் 5,32,443 கோடி ரூபாய். ஆக கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்க்கும் செலவுக்கும் இருக்கக்கூடிய இடைவெளி, அந்த நஷ்டம் பற்றாக்குறை என்பது 34,447 கோடி ரூபாய். ஆக முந்தைய அதிமுக ஆட்சியில் 56,000 கோடி அதற்கடுத்து 58,000 கோடி என்று இருந்ததை ஏறத்தாழ 34,000 கோடியாக, குறைத்திருக்கின்றோம்.

அப்படி குறைத்தாலும் கூட அவர்கள் சொல்லியிருக்கக்கூடிய கூற்றின் அடிப்படையிலேயே பார்த்தாலும் கூட, முதல் ஆண்டிலே 12,000 கோடி இழப்பு என்பது கடந்த ஆண்டு 934 கோடி ரூபாய் வெறும் இழப்பு என்ற அளவிற்கு, ஆண்டுதோறும் படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அதற்கான செலவினங்களை, இழப்புகளை குறைத்திருக்கின்றோம். 

குறிப்பாக 2021ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசு அமைந்தவுடன் முதலமைச்சர் எங்களுக்கு இட்ட கட்டளை, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு வங்கிகளிலும் பல்வேறு நிதி நிறுவனங்களிலும் கடன்களை பெற்றிருக்கிறது. அந்த கடன்களுக்கு செலுத்தக்கூடிய வட்டித்தொகை என்பது 13.5 விழுக்காடு வரை அதிகபட்சமாக கடன் தொகையை வாங்கியிருக்கின்றார்கள். அதை முழுவதுமாக குறைத்து ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று உத்தரவுகளை வழங்கினார்.

அப்படி கடந்த காலங்களில் எந்தெந்த வங்கிகள் நிதி நிறுவனங்களில் 13.5 சதவீதம் வரை வட்டிகளுக்காக நிதி பெறப்பட்டதோ அதையெல்லாம் அவரிடத்திலே பேசி, ஒத்துக்கொள்ளாதவரிடத்திலே அந்த தொகையை நாங்கள் கட்டி, மீதம் இருக்கக்கூடிய வங்கிகளிலே நிதி நிறுவனங்களிலே கடனை பெறக்கூடிய ஒரு சூழலை உருவாக்கினோம். அதிகபட்சம் தமிழ்நாடு மின்சார வாரியத்தினுடைய கடன் வட்டித்தொகை என்பது 9.5 விழுக்காட்டிற்குள் முழுமையாக கட்டுப்படுத்தி கொண்டுவரப்பட்டன. இதன் மூலமாக ஒரு ஆண்டிற்கு 1,200 கோடி ரூபாய், 1,500 கோடி ரூபாய் அளவிற்கான சேமிப்புகளை எங்களால் உருவாக்க முடிந்தது.

இப்படி தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  வருவாய் ஒரு பக்கம் அதிகரித்தாலும் செலவினம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது. அந்த செலவினம் வருவாய் அதிகரித்த அளவிற்கு செலவினத்திற்கான பணிகள் எங்கே மேற்கொண்டார்கள்? அதற்கான இழப்புகள் எப்படி சென்றது என்பதை அவர் ஒரு பட்டியலை போட்டு பேசியிருக்கின்றார். 

2019-20 தமிழ்நாட்டினுடைய மின் தேவை, 94,947 மில்லியன் யூனிட்.

அதுவே 20-21இல் 93,344, அது கோவிட் காலம். அதுக்கடுத்து 2021-22இல் 98,674 மில்லியன் யூனிட். 2022-23இல் 1,03,546 மில்லியன் யூனிட். 2023-24இல் 1,11,504 மில்லியன் யூனிட். 2024-25இல் 1,16,813 மில்லியன் யூனிட். ஆக 94,000 மில்லியன் யூனிட்டிலிருந்து 1,16,000 மில்லியன் யூனிட் வரைக்கும் உயர்ந்திருக்கிறது.

ஏறத்தாழ 5 வருடத்தில் 25,000 மில்லியன் யூனிட் உயர்ந்திருக்கின்றன. அப்படி உயர்ந்த மில்லியன் யூனிட் மின் நுகர்விற்கு ஏற்ப நாம் கொள்முதல் அதிகரிக்க வேண்டும். அதேபோல உற்பத்திகள் அதிகரிக்க வேண்டும். 

உற்பத்தி அதிகரிக்கின்ற பொழுது அதற்கான செலவினங்கள் நமக்கு உறுதியாக கூடும். இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிச்சந்தையில் நாம் மின்சாரத்தை கொள்முதல் செய்கின்ற பொழுது, அதற்கான செலவினங்களும் நிச்சயமாக கூடும். இதை அந்த வெள்ளை அறிக்கையில் வெளியிட்டிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். எவ்வளவு வருமானம், செலவு வந்தது என்று காட்டியவர்கள், 

எந்தெந்த வகையில அந்த வருமானங்கள் வந்துச்சு, எந்தெந்த வகையில அந்த செலவினங்கள் ஏற்பட்டது, இது வெள்ளை அறிக்கையில இருந்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். அதை தவிர்த்து அவர்களுக்கு வசதியாக மக்களிடத்தில் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

முந்தைய திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை அதை பட்டியலிட்டு இருக்கின்றார்கள். 

இருந்தாலும் கூட 2020-21இல் 14,542 கோடி கேப் என்பது 2025-26இல் 933 கோடியாக குறைஞ்சிருக்கு. அது 4 வருஷத்துல சீரிய நடவடிக்கை எடுத்ததுனால. இன்னொன்னு ரொம்ப வசதியா அவர் சொன்னதுல வருஷ வருஷம் அஞ்சு அஞ்சு வருஷத்துல எவ்வளவு கடன் சொல்லியிருக்கார்.

நான் 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை எங்களுடைய முதலமைச்சர் ஏற்ற பொழுது தமிழ்நாடு மின்சார வாரியத்தினுடைய ஒட்டுமொத்த கடன் 1,59,731 கோடி. இதுப்பற்றி அப்பவே சட்டமன்றத்தில் பேசினேன்.  ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் இருக்கு, ஒரு வருஷத்துக்கு ஏறத்தாழ 15,000 கோடி மின்சார வாரியம் வட்டி மட்டும் செலுத்துது என்று சொன்னேன். 

ஒரு வருஷத்துக்கு 15,000 கோடின்னா, அஞ்சு வருஷத்துக்கு 75,000 கோடி வட்டி மட்டும் கட்டிருக்கணும். இது நாங்க வாங்கின கடனுக்கு இல்ல…  இதற்கு முன்பாக இருந்த கடனுக்கு செலுத்திய வட்டி.

ஆக பழைய கடன் இருக்கிறதால வட்டி கட்டறோம் என்பதை தெளிவுபடுத்தினா மிகச் சிறப்பாக இருக்கும். 

அதற்கு அடுத்து எந்தெந்த வகைகளில் வந்து நம்ம செலவினங்கள் உயர்ந்து இருக்கு என்பதையும் அவங்க சொல்லி இருக்கணும். அது முழுமையா சொல்லல அத மறைச்சிருக்காங்க. 

குறிப்பாக வந்து 2019-20இல் பவர் பர்சேஸ் இருக்கு, பிளஸ் நம்மளுடைய உற்பத்திக்கான செலவினங்கள் இருக்கு, பியூவல் காஸ்ட் செலவு  19-20இல் ஒரு 50,849 கோடியா இருக்கு, 24-25ல பார்த்தீங்கன்னா அது 65,000 கோடியா உயருது. ஏறத்தாழ வந்து 50,000 கோடியில் இருந்து 65,000 கோடினா பர்ச்சேஸ்ஸும் நம்மளுடைய உற்பத்திக்கான பியூவல் காஸ்ட் இதெல்லாம் சேர்த்து, ஒரு 15,000 கோடி உயருது. 

அப்படி, மின் தேவை அதிகரிப்புகளுக்கு ஏற்ப உற்பத்தியை நாம் ஒரு பக்கம் அதிகரித்திருக்கின்றோம். அந்த அதிகரிப்புக்கான செலவினங்கள் கூடியிருக்கின்றன, அதேபோல வெளியில் கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கான செலவினங்கள் கூடியிருக்கின்றன.

இதனால் ஏற்பட்ட செலவினங்கள் என்பதை அவர்கள் குறிப்பிட மறுத்து மறந்துட்டாங்க. 

அதே போல நாம வெளியிலிருந்து வாங்கக்கூடிய மின்சாரத்திற்கு டிரான்ஸ்மிஷன் சார்ஜ்ன்னு ஒன்னு போடுவாங்க. அது பாத்தீங்கன்னா 2019-20ல 4,564 கோடி.  2024-25ல கேப்ல பார்த்தீங்கன்னா 9,548 கோடி. 

ஏறத்தாழ இரண்டு மடங்காக அந்த டிரான்ஸ்மிஷன் சார்ஜ் உயர்ந்து இருக்கு. அதையும் அதுல அவங்க எல்லாம் குறிப்பிட்டிருக்கலாம். இதெல்லாம் ஏற்பட்ட செலவினங்களுடைய உயர்வு. 

இதனால தான் இந்த செலவினங்கள் அதிகரிச்சிருக்கு அப்படிங்கறத அவங்க எல்லாம் ஒரு பக்கம் சுத்தமா மறைச்சிருக்காங்க. 

திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் ஏதுமில்லை என அமைச்சர்  கூறியிருக்கிறார். ஆனால் வட சென்னை எண்ணூர் அனல் மின் நிலையம், உடன்குடி அனல் மின் நிலையம், குண்டாறு அனல் மின் நிலையம், கொல்லிமலை அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு முடிவடைந்துள்ளன. மேலும் சில திட்டங்கள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. தூத்துக்குடி அனல் மின் நிலையத் திட்டமும் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதோடு, 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின்நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் தேர்தல் அறிவிப்பால் மேற்கொள்ள முடியவில்லை” என்று கூறினார். 

🔴 LIVE: செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு நேரலை | Senthil Balaji Press Meet LIVE | DMK

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share