”ஒன்றிய அரசை” கைவிட்ட முதல்வர் விஜய்!

Published On:

| By Mathi

CM Vijay Drops "Ondriyam" Terminology

திமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசை “ஒன்றிய” அரசு (Union Govt) என அழைத்தது. ஆனால் தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் ‘ஒன்றிய அரசு’ என அழைப்பது கைவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக “இந்திய அரசு” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ”இந்திய” அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி ”இந்திய” பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்

ADVERTISEMENT

அக்கடிதத்தில், என்.எல்.சி. இந்தியா (NLC India) நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை, 2% அடிப்படை பங்குகள் மற்றும் 1% கூடுதல் பங்குகள் ஒதுக்கீடு விருப்பம் (green-shoe option) உள்ளிட்ட 3% வரையிலான ‘விற்பனைக்கான சலுகை’ மூலம் விற்பனை செய்வதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தைத் தெரிவிக்கும் முகமாக இக்கடிதத்தை தான் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது என்றும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும், தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதால், இவ்விகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ளது என்றும், இங்குதான் அதன் முதன்மையான பழுப்பு நிலக்கரி சுரங்கச் செயல்பாடுகளான சுரங்கம்-I, சுரங்கம்-IA, சுரங்கம்-II மற்றும் அதன் முக்கிய நிலக்கரி சுரங்க முகப்பு சார்ந்த அனல் மின் நிலையங்களும் அமைந்துள்ளன என்றும், இந்த நிறுவனம், மாநில அரசு நிர்வாகத்தின் விரிவான வசதி வாய்ப்புகள், தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்பது வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் மட்டுமல்ல, எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்து என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என்றும். இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு குறைவாக இருப்பினும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும், இத்தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்சங்களைக் கடந்து, மாநிலத்தின், மாநில மக்களின் நீண்டகால நலன்கள், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிப்பதாக அமையுமென்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகள் மேலும் குறைக்கப்பட கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்துவருகிறது என்றும். இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாகப் பல தசாப்தங்களாக அவற்றைச் செயல்படுத்திவரும் மாநிலத்தின் தொடர்ச்சியான ஆதரவோடு நிறுவப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டவை என்பதால், இத்தகைய நிறுவனங்கள் தொடர்ந்து முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே நீடிக்கவேண்டும் என்றும், இத்தகைய சூழலில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான தனது முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாம் உளப்பூர்வமாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒன்றியம் என்றே பயன்படுத்துவோம்.. அன்று சொன்ன ஸ்டாலின்

”ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினோம்; பயன்படுத்தி வருகிறோம்; இனியும் பயன்படுத்துவோம்” என தமிழ்நாடு சட்டசபையில் 2021-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் 2021-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த நயினார் நாகேந்திரன், ‘மத்திய அரசை, ஒன்றிய அரசு எனக் கூறுவது ஏன்?’ என முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அப்போதைய முதல்வர் ஸ்டாலின், “”ஒன்றிய அரசு எனக் கூறுவதை குற்றமாக கருத வேண்டாம். நமது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டதை தான் நாங்கள் சொல்கிறோம். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியிலேயே (INDIA SHALL BE A UNION OF STATE )இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய முதல்வர், இந்த சொல்லை கேட்டு யாரும் மிரள வேண்டாம். அண்ணா, கருணாநிதி மத்திய அரசு என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி வந்ததாகவும், அவர்கள் கூறாததை நாங்கள் கூறுவதாகவும் விமர்சிக்கின்றனர். 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுகவின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா இதுபற்றி பேசியிருக்கிறார்” என்று கூறிய முதல்வர், ”ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினோம், பயன்படுத்தி வருகிறோம்; இனியும் பயன்படுத்துவோம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share