சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (ஜூன் 25) காலை முதல் சோதனை நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு (E.V. Velu) வீடு முன்பாக திடீரென திமுகவினர் திரண்டு சப்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சிக் கால சாலை பணி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டை, திருவண்ணாமலை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
எ.வ.வேலுவுடன் வழக்கறிஞர் சரவணன் சந்திப்பு
இந்த சோதனை நடந்த போது சென்னையில் உள்ள வீட்டுக்கு இன்று பிற்பகல் திமுக வழக்கறிஞர் சரவணன் சென்றார். ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை முதலில் உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் போலீசார் அனுமதித்த நிலையில் எ.வ.வேலுவை வழக்கறிஞர் சரவணன் சந்தித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், போலீசார் அனுமதியுடன் எ.வ.வேலுவை சந்தித்தோம். சோதனைகள் நடைபெற்று வருகின்றன; முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. உள்ளே 5,6 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.எந்த பிரச்சனையும் உள்ளே இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இப்படி வழக்கு போடுவது திமுகவுக்கு புதியது எதுவும் இல்லை. இதுவரை திமுகவினர் மீது போட்ட வழக்குகள் என்ன ஆனது? எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு ஆதாரம் தேவை இல்லை; நீதிமன்றத்தில்தான் ஆதாரம் காட்ட வேண்டும். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தெம்பும் திராணியும் திமுகவினருக்கு இருக்கிறது.. வழக்கை போடுங்கள்” என்றார்.

எ.வ.வேலு வீட்டில் ஆ.ராசா
இதனைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எ.வ.வேலு வீட்டுக்கு சென்றார். அப்போதும் அவரது வீட்டின் கேட் பூட்டப்பட்டு திறக்கப்படவில்லை.
இதனால் ஆ.ராசா தமது காரில் சிறிது நேரம் காத்திருந்தார். அப்போது திமுகவினரும் அங்கு திரண்டனர். அத்துடன், “கேட்டை திறந்துவிடுங்க..ஆ.ராசா எம்.பி. வெளியே காத்திருக்கிறார்” என அவரது உதவியாளர் சப்தம் போட்டார். இதனால் திடீரென அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதனையடுத்து எ.வ.வேலுவின் வீட்டு கேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்தனர். பின்னர் ஆ.ராசா, எ.வ.வேலு வீட்டுக்குள் சென்றார்.
