திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூன் 25) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எ.வ.வேலு. அவர் மீது 2022ஆம் ஆண்டு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.
அதில், ’மாநில நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு கோட்டங்களில், மார்ச் 2022 மாதத்தில் பணிகள் முடிக்கப்படாமலேயே ஒப்பந்ததாரர்களுக்குப் பல கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும், சில ஒப்பந்ததாரர்களுக்கும் இடையிலான கூட்டுச் சதியால் நடந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் CRIDP (விரிவான சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் ரூ.5000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் இதில் பெரும்பாலும் ஊழல் நடப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்தது.
கரூர் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவில், ‘சங்கரானந்த் இன்ஃப்ரா’ என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட டெண்டர் பணிகளில் முறைகேடு நடந்துள்ளது.
சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளில், மார்ச் 7, 2022 அன்று ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், எவ்விதப் பணிகளும் நடைபெறாமலேயே மார்ச் 25 மற்றும் 28 தேதிகளில் 3.23 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.
4 வெவ்வேறு சாலைப் பணிகளுக்காக முறையே 76.62 லட்சம், 98.80 லட்சம், 26.80 லட்சம் மற்றும் 1.21 கோடி ரூபாய் என மொத்தம் 3.23 கோடி ரூபாய் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பே வழங்கப்பட்டுள்ளது.
சாலைப் பணிகள் நடைபெறாமலேயே பணம் வழங்கப்பட்டதை உறுதி செய்த பிறகு, ஏப்ரல் 2022-ல் கரூர் கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் ஆர். கண்ணன், இளநிலைப் பொறியாளர் பூபாலன் சிங் மற்றும் கோட்டக் கணக்காளர் கே. பெரியசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பணியிடை நீக்கத்திற்குப் பிறகு, அதிகாரிகள் முறைகேடு செய்ததை மறைக்க, ஏப்ரல் 8, 2022 அன்று இரவு காவல்துறை பாதுகாப்போடு அவசரமாகச் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது குற்றச் செயலுக்கான ஆதாரங்களை அழிக்கும் முயற்சி.
ஈரோடு நெடுஞ்சாலைத் துறையிலும், பணிகள் நடைபெறாமலேயே 1.5 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டு, இதற்காக 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகளிலும் பணிகள் நடைபெறாமலேயே பணம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டிய சாலைப் பணிகள்
வாரணாசி-கன்னியாகுமரி சாலை: 76,62,942 ரூபாய்.
மண்மங்கலம்-நன்னியூர் சாலை: 98,80,661 ரூபாய்.
நேரூர்-தளவாப்பாளையம் முதல் புதூர்-நன்னியூர் சாலை: 26,80,562 ரூபாய்.
கரூர்-ஈசநத்தம்-கூம்பூர்-விரியம்பட்டி சாலை: 1,21,03,385 ரூபாய்.
மொத்தம்: 3,23,27,550 ரூபாய்.
அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்
மார்ச் 2022-ல் பணம் வழங்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்தி, சுதந்திரமான தணிக்கைக் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது FIR பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
வழக்கு பதிவு மற்றும் சட்டப்பிரிவுகள்
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள்:
பிரிவு 120B: குற்றச்சதி (Criminal conspiracy).
பிரிவு 420: ஏமாற்றுதல் (Cheating).
பிரிவு 409: பொதுப் பணத்தைச் சீர்குலைத்தல் அல்லது கையாடல் செய்தல் (Criminal misappropriation).
பிரிவு 468: மோசடி செய்யும் நோக்கத்திற்காக போலி ஆவணங்களைத் தயாரித்தல் (Forgery for purpose of cheating).
பிரிவு 471: போலியான ஆவணத்தை உண்மையானது எனப் பயன்படுத்துதல்.
பிரிவு 109: குற்றச் செயலுக்குத் தூண்டுதல் (Abetment).
ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act, 1988) பிரிவுகள்:
பிரிவு 7(c): அரசு ஊழியர் தனது கடமையைச் சரியாகச் செய்யாமல், சட்டவிரோத அல்லது ஊழல் மூலம் ஆதாயம் பெறுதல்.
பிரிவு 13(2) r/w 13(1)(a): அரசு ஊழியர் தனது அலுவலகப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆதாயம் அடைதல்.
பிரிவு 12: ஊழல் செயல்களுக்கு உடந்தையாக இருத்தல்.
வழக்கில் சேர்க்கப்பட்ட நபர்கள்

எ.வ. வேலு: முன்னாள் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்; தற்போது திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
ஆர். கண்ணன்: முன்னாள் துணை கோட்டப் பொறியாளர், கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு; தற்போது மதுரை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் துணை கோட்டப் பொறியாளர்.
பூபாலன் சிங்: முன்னாள் இளநிலைப் பொறியாளர், கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு; தற்போது சென்னை சாலை பாதுகாப்புப் பிரிவு இளநிலைப் பொறியாளர்.
கே. பெரியசாமி: முன்னாள் கோட்டக் கணக்காளர், கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு; தற்போது சென்னை தமிழ்நாடு சாலைத் திட்டத்தில் கோட்டக் கணக்காளர்.
ஆர்.பி. சத்யபாமா: முன்னாள் கோட்டப் பொறியாளர், கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு (ஓய்வு); தற்போது பழனியில் வசிப்பவர்.
வி.வி. நிதிலன்: முன்னாள் கோட்டப் பொறியாளர், ஈரோடு நபார்டு மற்றும் ஊரகச் சாலைகள் பிரிவு; தற்போது கோவை வட்டத்தில் துணை கண்காணிப்புப் பொறியாளர்.
ஏ. ரஃபீக் முகமது: முன்னாள் துணை கோட்டப் பொறியாளர், கரூர் நபார்டு மற்றும் ஊரகச் சாலைகள் பிரிவு; தற்போது சென்னை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் துணை கோட்டப் பொறியாளர்.
சி. தீபிகா: முன்னாள் உதவிப் பொறியாளர், கரூர் நபார்டு மற்றும் ஊரகச் சாலைகள் பிரிவு; தற்போது திருப்பூர் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் உதவிப் பொறியாளர்.
எஸ். கார்த்திக்: முன்னாள் உதவிப் பொறியாளர், கரூர் நபார்டு மற்றும் ஊரகச் சாலைகள் பிரிவு; தற்போது திருச்சிராப்பள்ளி பாலம் கண்காணிப்புப் பிரிவில் உதவிப் பொறியாளர்.
என்.எஸ். சத்யா: முன்னாள் கோட்டக் கணக்காளர், கரூர் நபார்டு மற்றும் ஊரகச் சாலைகள் பிரிவு; தற்போது சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் கோட்டக் கணக்காளர்.
சங்கரானந்த் இன்ஃப்ரா (ஒப்பந்ததாரர் நிறுவனம்): எண். B-303, ஆல்பைன் டவர்ஸ், எண். 3, பழனியப்பா வடக்குத் தெரு, செங்குந்தபுரம், கரூர்.
இந்த 11 பேர் மீதும் நேற்று (ஜூன் 24) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

120B, 409 , 420, 468, 471 r/w 109, 1988 ஊழல் தடுப்புச் சட்டம் Sections 7(c) and 13(2) r/w 13(1)(a), ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில். லஞ்சஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி பாஸ்கரன் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று காலை முதல் சென்னை, திருவண்ணாமலை உட்பட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
