“நான் மருத்துவக் கல்லூரி தொடங்க விண்ணப்பித்திருக்கிறேன் என்பதை யாராவது நிரூபித்தால், நான் இப்போதே அரசியலை விட்டு விலகத் தயார்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக, “பாஜகவிடம் ஆட்சி அமைக்க விடுங்கள் எனத் தவெக தரப்பில் கேட்கப்பட்டது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “நயினார் நாகேந்திரன் ஒரு காமெடிப் பேச்சாளர்; அவருக்குப் பதில் சொல்ல முடியாது. அவர் எங்களைத் தாக்குகிறாரே ஒழிய, திமுகவும் பாஜகவும் தங்களுக்குள் தாக்கிக் கொள்வதில்லை. அங்குச் சமரச முயற்சி செய்துவிட்டு, மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்காக விண்ணப்பம் போட்டவர் அவர்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
நயினார் நாகேந்திரனின் பதில் சவால்:
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று சென்னையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அண்ணன் செங்கோட்டையன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். குறிப்பாக, 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் அவரோடு நான் நாகர்கோவிலில் தங்கியிருந்த நாட்களெல்லாம் உண்டு.
அதன் பிறகு, மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் பயணங்களின் போது, நானும் அண்ணன் செங்கோட்டையனும் தான் வழித்தடங்களை (Route Map) திட்டமிட்டு அனைத்து இடங்களுக்கும் செல்வோம். என்னைப் பற்றி அவருக்கு மிக நன்றாகத் தெரியும்; அவரைப் பற்றி எனக்கும் நன்றாக.. நன்றாகவே தெரியும்.
அண்ணன் செங்கோட்டையன் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது. நான் அவரைப் பற்றித் தவறாக எதுவும் சொல்லவில்லை. ‘யார் பேசினார்கள்’ என்பது தெரியும் என்றுதான் சொன்னேன். ஆனால், அவரோ சம்பந்தமே இல்லாமல் எப்போதுமே இடையில் வந்து ஆஜராகிவிடுவார். இது இப்போது மட்டுமில்லை, அம்மா இருந்த காலத்திலிருந்தே அவருக்கு இருக்கும் ஒரு வழக்கம்தான். தேவையில்லாமல் இடையில் வந்து மாட்டிக்கொள்வார்.”
“அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?”
“தற்போது நான் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பம் செய்திருப்பதாகவும், அதற்காக திமுகவுடன் சமரசம் பேசிக் கொண்டிருப்பதாகவும் அண்ணன் செங்கோட்டையன் கூறியுள்ளார். உங்கள் (ஊடகங்கள்) வாயிலாக அவருக்கு நான் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மருத்துவக் கல்லூரி தொடங்கவோ அல்லது வேறு எந்தக் கல்லூரி தொடங்கவோ விண்ணப்பித்திருக்கிறேன் என்பதை யாராவது நிரூபித்தால், நான் இப்போதே அரசியலை விட்டு விலகத் தயார். நான் சவாலுக்குத் தயாராக இருக்கிறேன். அதேபோல, நான் அப்படி விண்ணப்பிக்கவில்லை என்பது நிரூபணமானால், அண்ணன் செங்கோட்டையன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறாரா?
அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் திறமையும், அவர் மீது எங்களுக்கு இருக்கும் மரியாதையும் தனிப்பட்டது. அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், இனிமேல் ஆதாரமில்லாமல் இது போன்ற விஷயங்களை அவர் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
