”சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள்; மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன்” என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது ”அப்பாவை காணோம்” என்ற குட்டிக் கதை சொன்னார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் இன்று ஜூன் 25-ந் தேதி முன்னாள் அமைச்சர் மதிவாணன் மகன் மணமக்கள் கதிரவன் – மௌனிகா திருமணத்தை நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலே இன்று எண்ணற்றப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. ஒரு பக்கம் மின்வெட்டுப் பிரச்சினை, மற்றொரு பக்கம் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் நிலவுகிறது.
2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையைத் தவறாமல் குறித்த நேரத்திற்கு முன்பே திறந்து வைத்து, நமது அரசு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் சட்டமன்றத்தில் விரிவாகப் பேசியும், முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இருந்தார். ஆனால், அதற்கு முதலமைச்சர் “எங்கே காணோம்? உங்கள் அப்பாவைக் காணோம்?” என்று கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.
அப்பாவை அங்கே தேடாதீர்கள், அவர் மக்கள் மனதிலேயே பதிந்திருக்கிறார். அதுதான் உண்மை. நீங்கள் தேடுவதற்கு அங்கு இடமில்லை; மக்கள் தேடும் அந்த இடத்தில், நான் நிச்சயம் முதல் ஆளாக நிற்பேன். நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்று மக்கள் மன்றத்தில்தான் இருக்கிறேன் என்பதை மனதார இந்த இடத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். நான் அரசியலுக்கு வந்து சுமார் 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 60 ஆண்டுகளும் மக்களோடும் மக்களாகவே இருந்து வருகிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றக்கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் முதலமைச்சராக இருந்தபோது, பலமுறை நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறேன். என் ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் நான் நடத்தியதைப் போன்ற ஆய்வுக்கூட்டங்களை வேறு எந்த முதலமைச்சரும் நடத்தியிருக்க முடியாது; நான் மேற்கொண்ட பயணங்களை எந்தவொரு முதலமைச்சரும் செய்திருக்க மாட்டார்கள். நான் கோட்டைக்குச் சென்றதுதான் அதிகமாக இருந்திருக்குமே தவிர, வேறு எந்த முதலமைச்சரும் அவ்வளவு நேரம் கோட்டையில் இருந்திருக்க மாட்டார்கள்.
இன்னும் சொல்லப்போனால், நீங்கள் தற்போதைய முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்; கோட்டையில்தான் அனைத்துக் கோப்புகளும் இருக்கின்றன. அந்தக் கோப்புகளை எடுத்துப் பாருங்கள்,
அதில் மு.க. ஸ்டாலின் என்ற எனது கையெழுத்து இருப்பதை நீங்களே காண்பீர்கள்.
அதில் நீங்கள் தேடிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த கையெழுத்தை உற்றுப் பாருங்கள், அதுவே உங்களுக்கு அனைத்தையும் உணர்த்தும்.
மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’யாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற கோப்பில் நான் கையெழுத்திட்டிருப்பேன்; அங்கே ‘ஸ்டாலின்’ இருப்பான்.
‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலமாக மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற கோப்பைப் பாருங்கள், அதிலும் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டிருப்பான்.
‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் மூலம் 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டத்திலும் ‘ஸ்டாலின்’ இருப்பான்.
எனவே, நீங்கள் இங்கே எங்கும் தேட வேண்டிய அவசியமே இல்லை; நான் கோட்டையில்தான் இருக்கிறேன், நான்தான் ஆட்சியில் இருக்கிறேன்.
இன்னும் சொல்வதானால், அண்ணா ஒருமுறை குறிப்பிட்டது போல, ‘தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியிருக்கிறேன், இதுவே என் வாழ்நாளுக்குப் போதும்’ என்று அவர் கூறினார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நிலைத்திருக்கும் வரை என் பெயரும் நிலைத்திருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அதுபோல, ‘மகளிர் உரிமைத் திட்டம்’ இருக்கும் வரை இந்த ‘ஸ்டாலின்’ தான் முதலமைச்சர். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
