திமுக இனி யாருடனும் கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிட வேண்டும் என ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழா இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழாவில் பேசிய ஆ.ராசா, தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை விமர்சித்தார். “மேடையில் இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சுட்டிக்காட்டி இந்த தலைவனை ஒரு தேர்தலை வைத்து எடை போடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ” எனக்கு ஒரு லாஜிக் புரியவில்லை. ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திமுக கூட்டணியே இல்லை என்கிறார். திமுக கூட்டணியில் நீங்கள் இல்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. திமுக கூட்டணியே இல்லை என்று எப்படி சொல்லலாம். அதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. உங்களுக்கு என்ன அதிகபிரசங்கி தனம். திமுக தலைமையிலான கூட்டணியில் 60-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் உள்ளது.
நான் அதிக பிரசங்கி தனமாக பேசினால் மன்னித்து விடுங்கள். ஒருவர் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி கூட்டணி தொடருகிறதா? என்பதை அறிவிப்பதாக கூறுகிறார். விருப்பமிருந்தால் உடனடியாக கூட்டணி இல்லை என்று அறிவிக்கட்டும்” என்றார்.
மேலும் திமுக தலைவரை பார்த்து தயவு செய்து அறிவியுங்கள் “இனி யாருடனும் கூட்டணி இல்லை. திமுக தனித்து நிற்கும் என்று சொல்லுங்கள். 234 தொகுதியிலும் நிற்போம். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் வேறு வழி இல்லை. பெரியார், கலைஞர், அண்ணா அனைவரின் மொத்த உருவத்தையும் உங்களில் பார்க்கிறோம்” என்றார்.
ஆ.ராசாவின் இந்த கருத்துகள் திமுக கூட்டணி அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இடதுசாரி கட்சிகளுடனான உறவு மற்றும் திமுகவின் எதிர்கால கூட்டணி நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
