முன்னாள் அமைச்சர் மற்றும் திமுகவின் சட்டப்பேரவைக் கொறடாவுமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சென்னையில் இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்,”லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற துறைகள் தங்களுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் இயற்கையாகச் செய்யக்கூடிய சோதனைதான் இது. 30 வருடங்களுக்கு முன்னால் எ.வ.வேலுவுக்கு என்ன சொத்து இருந்தது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இன்று இரண்டு, மூன்று மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என திருவண்ணாமலையின் ஒட்டுமொத்த நிலங்களையும் பினாமிகள் பெயரில் வாங்கியுள்ளனர். ஒரு அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது?
தன் பெயரில் சொத்து இல்லை என்றாலும், மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் பெயரில் சொத்துகளைக் குவிப்பதும் தவறுதான். இந்த முறைகேடுகளைத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது சட்டப்படி வெளிக்கொண்டு வரத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
