முதல்வர் விஜய் பெயரை குறிப்பிடாமல் அரசியலில் யாரையும் யாரும் அவ்வளவு எளிதாகக் காணாமல் அடித்துவிட முடியாது என குறிப்பிடாமல் முத்தரசன் தெரித்வித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான முத்தரசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மதிவாணன் நல்ல கொள்கைப் பற்றுடையவர். அதுதான் இன்று நம் நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென அந்தப் பக்கமுள்ள கரையைப் பார்க்கும். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று சொல்வதைப் போல, அந்தப் பக்கம் கொஞ்சம் பசுமையாகத் தெரிவது போல் இருக்கும். முதலில் ஒரு குதிரை போகும், பின்னர் ஆடு, மாடுகள் என போக ஆரம்பிக்கும். கடைசியில் மந்தையே அந்தப் பக்கக் கரைக்குச் சென்றுவிடும்.
ஆனால், அங்குப் போனால் நிலைமை இதைவிட மிகவும் மோசமாக இருக்கும். இங்கேயாவது கொஞ்சம் பச்சையாகத் தெரியும், அங்கோ ஒன்றுமே இருக்காது, வறண்டு காய்ந்து போயிருக்கும். ‘ஆஹா.. அவசரப்பட்டு வந்துவிட்டோமே’ என்று நினைத்து, வந்த உடனேயே திரும்ப நினைத்தால், பழைய படுகை நம்மை ஏற்றுக்கொள்ளுமா என்ற பயத்தில், ‘கொஞ்ச நாள் இங்கேயே இருந்துவிட்டாவது போவோம்’ என்று நினைப்பார்கள். யாரும் இதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், மதிவாணனின் கொள்கைப் பற்றைப் பாராட்டுவதற்காகவே இந்த உதாரணத்தைச் சொன்னேன்.”என்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். நாட்டில் அரசியல் ரீதியாகப் பல விஷயங்கள் அப்படி இப்படியாக நடக்கும். யாரையோ காணவில்லை என்றார்களாமே.. ஆனால், அரசியலில் யாரையும் யாரும் அவ்வளவு எளிதாகக் காணாமல் அடித்துவிட முடியாது. அதற்கு ஒருபோதும் வாய்ப்பும் இல்லை. நான் நீண்ட நாட்களாக இடைவெளியில் தலைவரைப் போய்ப் பார்க்கவில்லை என்பதால் எனக்குள் எந்தக் கோபமோ, அவரைப் பார்ப்பதில் எந்தவிதச் சங்கடமோ கிடையாது.
நாங்கள் இருவருமே ஒரே ஊர்க்காரர்கள், ஒரே தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எப்போதுமே அண்ணன்-தம்பியாகத்தான் பழகி வருகிறோம். எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்வோம். எங்களுக்குள் எந்தப் பெரிய பிரச்சினையும் எப்போதும் இருந்ததில்லை.இருந்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரைப் பார்க்கவில்லையே என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கப் போகிறோமே, அவர் எப்படி இருப்பாரோ? சரியாகப் பேசுவாரா? சோர்வாகவோ அல்லது சங்கடத்தில் இருப்பாரோ?’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டேதான் அவர் வீட்டுக்குச் சென்றேன். ஆனால், அவரிடம் எந்தவொரு சோர்வும் இல்லை. அதே வழக்கமான அன்பான வரவேற்பு; அதே வழக்கமான உபசரிப்பு. அப்படித்தான் எங்களுடைய உரையாடல் அமைந்தது. இந்த உரையாடல் எப்போதும் தொடரும்.
இன்று ஜூன் 25-ஆம் தேதி மதிவாணன் மகனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதனால், நமது டெல்டா மாவட்ட விவசாயிகள் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு குறுவை சாகுபடியை மேற்கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள். கடந்த ஆண்டு குறுவை சாகுபடி வழக்கத்தை விட அதிகமாகவே நடைபெற்றது. எனக்கு அதிர்ஷ்டத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, நடந்த எதார்த்தத்தைச் சொல்கிறேன். கடந்த ஆண்டு அணை திறக்கப்பட்டு விவசாயம் செழிப்பாக இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. இந்தச் சூழலில் டெல்டாவில் ஒருபோக சாகுபடியாவது நடைபெறுமா? அதற்குரிய முயற்சிகளையாவது அரசு மேற்கொள்ளுமா? கர்நாடகா ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே நான்கு அணைகளைக் கட்டி வைத்துள்ளனர். இப்போது புதிதாக மேகதாதுவில் ஒரு அணையைக் கட்டுவதாகச் சொல்கிறார்கள். இதைத் தடுப்பதற்கும், தண்ணீர் இல்லாத இந்தச் சூழ்நிலையில் தமிழக விவசாயிகளைக் காப்பதற்கும் அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு ஒருபோக சாகுபடியாவது நடைபெற வாய்ப்புகள் ஏற்படுமா, அல்லது டெல்டா பகுதி கடும் பஞ்சத்தை நோக்கி நகருமா என்ற அச்சமும் கவலையும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது,” என்று முத்தரசன் கவலை தெரிவித்தார்.
