”சட்டசபையில்தான் அரசியல் செய்ய முடியும்.. வேறு எங்க செய்ய முடியும்?” என்று தமிழக முதல்வர் விஜய்-க்கு (Vijay) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று ஜூன் 25-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு மத்திய அரசுடன் ஒரு கூட்டுறவு (cooperative) முறையில் செயல்படும் என்று கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், எந்த ஒரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பாகுபாடு காட்ட வேண்டும் என்று பிரதமர் அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை.
தற்போது மட்டுமன்றி, இதற்கு முன்னால் இருந்த ஆட்சிக்காலத்திலும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிதி உதவிகளும் முறையாக வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, தூத்துக்குடி போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்ட பெரிய திட்டங்கள் போன்ற பல முக்கியத் திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். தற்போதும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து உதவிகளும், அவர்களுக்கு உரிமையுடன் சேர வேண்டிய நிதியும் கட்டாயமாக வழங்கப்படும்” என்றார்.
அப்போது, ”சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தற்போதைய முதல்வர் முன்னாள் முதல்வரை ஒரு குட்டிக்கதை மூலம் விமர்சித்துள்ளது” குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு ”அரசியல் விமர்சனங்களை சட்டமன்றத்தில் செய்யாமல் வேறெங்கு செய்ய முடியும்? எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளுங்கட்சியும் விவாதிக்கட்டும்; இதில் தவறு எதுவும் இல்லை” என்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மேலும், ”மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிப்பது” குறித்த கேள்விக்கு, “ கடன் வாங்குகிறோம் என்றால், அதன் மூலம் பொது மக்களுக்கான சொத்துகளை உருவாக்கி, அவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் அளிக்க வேண்டும். சொத்து என்பது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அல்லது தொழில் நுட்ப வளர்ச்சிக்கான பெரிய நிறுவனங்கள் என எதுவாகவும் இருக்கலாம்; இவை பரம்பரை பரம்பரையாகப் பயன்படும். அதாவது, அடுத்த ஐம்பது முதல் அறுபது ஆண்டுகளுக்கு இவை நிலைத்திருக்கும். அந்தச் சூழலில், மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் அந்தப் பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்படும்; அதைச் சுற்றியுள்ள இடங்களில் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படும், போக்குவரத்து வசதிகள் பெருகும். இவ்வாறு ஒரு சொத்தை உருவாக்கும்போது, கடன் வாங்கி உருவாக்கினாலும், பொருளாதாரத்தில் நல்ல தாக்கம் ஏற்பட்டு, அதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கோட்பாடு. எனவே, ‘தொடர்ந்து கடன் வாங்குகிறோம்’ என்பதைவிட, வாங்கிய கடனைக் கொண்டு என்ன செய்கிறோம் என்பதே முக்கியமான விஷயமாகும்.
”நீங்கள் சொத்துகளை உருவாக்குகிறீர்களா? அதன் மூலம் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி அடைகிறதா? வேலைவாய்ப்புகள் பெருகுகின்றனவா? அவ்வாறு இருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள். அதனால்தான் பிரதமர் அவர்கள், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பெரிய மருத்துவமனைகளை உருவாக்குவதன் மூலம் மக்களை ஈர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதுவே மூலதனச் செலவு (Capital Expenditure) ஆகும். நீங்கள் இதைச் செய்யாமல், வருவாய் செலவினங்களை (Revenue Expenditure) மட்டும் செய்கிறீர்கள். அதாவது, மக்களிடம் பணத்தைக் கொடுப்பது, ஊதியத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை மட்டும் செய்கிறீர்கள். இத்தகைய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டாம் என்று நான் கூறவில்லை; தாராளமாகச் செய்யுங்கள். ஆனால், நிதி வசதி குறைவாக இருக்கும்போது, வாங்கும் கடனை நல்ல சொத்துகளை அமைப்பதற்குச் செலவிட வேண்டும்” என்றார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
