”என் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை” : எ.வ.வேலு பேட்டி!

Published On:

| By Kavi

திமுகவின் முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூன் 25) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் சோதனை நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்றிரவு ரெய்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்தார்.

”புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசினுடைய உச்சம் என்னவென்றால், எங்களைப் போன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்பதுதான். அதுதான் இன்றைக்கு ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். 

ADVERTISEMENT

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர், ஆளுநர் உரைக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

அப்போது 2017 முதல் 2026 வரை குறிப்பிட்ட காலத்தை சொல்லி ஆதாரம் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை சொன்னார். 

அப்பொழுது நான் எழுந்து ஆதாரத்தோடு பேசுங்கள், ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும். அதுதான் மரபு அதுதான் முறை. 

ஆதாரத்தைக் காட்டிவிட்டு முதலமைச்சரை பேச சொல்லுங்கள் என்று நான் தொடர்ந்து கேட்டதற்கு அவர்கள் தொடர்ந்து அனுமதிக்கவில்லை. எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவரும் எழுந்து பேச முயன்றார். 

அப்போது சபாநாயகரிடம் முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும், மைக்கை கொடுங்கள் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி நின்று கொண்டிருந்தேன். 

பேரவை தலைவரும் முதல்வர் பேசி முடித்த பிறகு கடைசியாக தருகிறோம் என்று சொன்னார். அவர்கள் எங்களைத் தொடர்ந்து அனுமதிக்கவில்லை.

அதற்குப் பின்னால் எங்களை வெளியே தூக்கி போடலாம் என்ற நிலைக்குப் போய்விட்டதால் நாங்களே அமைதியாக வெளியேறி விட்டோம். 

நான் அவரை கேட்ட கேள்வியின் அடிப்படையில் தான் இன்றைக்கு 2022-ல்  கரூரில் ஏதோ ஒரு அலுவலகத்தில் நடந்த சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை மையப்படுத்தி என் வீட்டுக்கு சோதனைக்கு வந்திருக்கிறார்கள்.

சே.கூடலூர் என்கிற என்னுடைய சொந்த கிராமத்திலும் எனது இல்லம் இருக்கிறது. என்னுடைய வாக்கு உரிமையும் அங்கு தான் இருக்கிறது.   இங்க இருக்கக்கூடிய வீடு, சே.கூடலூரில் இருக்கக்கூடிய வீடு இந்த இரண்டு இடத்தில் தான் எனக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. 

ஆனால் திருவண்ணாமலையில் உள்ள கல்லூரிக்கு சென்று சோதனை என்ற பெயரில், காலை முதல் இந்த நிமிடம் வரை ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இதனால் அந்த பொறியியல் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும். நீங்களே யோசித்துப் பாருங்கள். 

சம்பந்தமே இல்லாமல் கல்லூரிக்கு போயிருக்கிறார்கள். 

இதையெல்லாம் செய்தால் நாங்கள் பயந்து விடுவோமா. அப்படியெல்லாம் இல்லை. 

திமுக மிசாவையே பார்த்த இயக்கம். இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். நீங்கள் வழக்கு போடலாம். ரெய்டு நடத்தலாம். 

ஆனால் நீதிமன்றம் இருக்கிறது. நமக்கு கடைசியாக இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை நீதிமன்றம் தான். 

நீதிமன்றத்தில் நிரபராதி என்பதை நான் கட்டாயம் நிரூபிப்பேன். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயமிருக்கும்.

என்னை பொறுத்தவரை நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.நான் பரிசுத்தமானவன். எந்த தவறு செய்யாதவன்.

ஒரு பொய்யை பலமுறை சொல்வதாலேயே உண்மையாகாது. 

நிச்சயம் நான் நிரபராதி என்பதை நிரூபித்து காட்டுவேன்” என்றார். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

கணக்கில் காட்டாத 40 லட்சம் ரூபாய், ஆவணங்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருக்கிறதே? 

40 லட்சம் ரூபாய் பறிமுதல் என்பது தவறான தகவல். இங்குள்ள என்னுடைய வீட்டிலேயோ, சே கூடலூர் வீட்டிலேயோ ஒரு பைசா கூட எடுக்கவில்லை. நான் அமைச்சராக இருக்கும்போது துறை சம்பந்தமான அறிக்கைகள் தயாரிப்பது, சுற்றுப்பயணம் பட்டியலை அனுப்புவது, துறை ரீதியாக ஆய்வுகள் நடக்கும் போது எடுக்கப்படும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு பத்திரிகைகளுக்கு அனுப்புவது ஆகியவற்றிற்காக பயன்படுத்துவதற்கு ஒரு கணினி வைத்திருந்தேன். அதில் ஏதோ இருப்பது போல பறிமுதல் செய்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதை நாங்களே முன்வந்து தான் கையெழுத்து போட்டு எடுத்துச் செல்ல சொன்னோம். அதில் அறிக்கைகள், செய்திகள் சம்பந்தப்பட்ட தகவலை தவிர வேறு எதுவும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனினும் பார்த்து விட்டு தருகிறோம் என்று சொன்னதால் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னோம். 

குற்றம் சாட்டப்படுவதற்கு ஏதுவான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்? 

குற்றச்சாட்டு என்ன… கரூரில் எங்கேயோ சாலை போடப்பட்டது. அதற்காக பில் போடப்பட்டது. அங்கு தவறு நடந்திருக்கிறது… ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் (எ.வ வேலு) நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி செய்திருக்கிறார் என்றுதான் எஃப் ஐ ஆர் இல் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

கரூரில் உள்ள ஒரு அலுவலகத்தில் டெண்டர் நடத்த வேண்டும் என்றால் அங்குள்ள கோட்ட பொறியாளர் தான் நடத்துவார். அதற்குரிய ஆவணங்கள் எல்லாம் அங்கு தான் இருக்குமே தவிர,  அமைச்சர் வீட்டில் இருக்காது. நடைமுறையில் அது நடக்காது. கோட்டப் பொறியாளர் டெண்டர் விடுகிறார் என்றால் அது சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அங்கு தான் இருக்கும். 

ஒருவேளை மேற் பொறியாளர் ஒரு டெண்டர் விடுகிறார் என்றால், அந்த ஆவணமும் அங்கு தான் இருக்கும். நெடுஞ்சாலை துறையைப் பொறுத்தவரை டெண்டர் விடும் அதிகாரம் கோட்ட பொறியாளருக்கும் மேற் பொறியாளருக்கும் தான் உள்ளது. வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படி இருக்கும்போது ஆவணங்கள் எல்லாம் அந்த அலுவலகங்களில் தான் இருக்கும். அந்த ஆவணங்கள் என்பது பொது சொத்து. எனவே அதை என்னுடைய இல்லத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. 

உங்களை டார்கெட் செய்கிறார்களா? 

அதைத்தான் அதிகாரத்தின் உச்சம் எனறு சொல்கிறேன். சட்டமன்றத்தில் ஜனநாயக ரீதியாக ஒரு கேள்வியை எழுப்ப எங்களுக்கு உரிமை உண்டு. எதிர்க்கட்சி என்றால் கேள்வி கேட்கும். போற்றி போற்றி என லாலி பாடுவதற்காக எதிர்க்கட்சி உள்ளது. மக்கள் பிரச்சினை என்றால் கேள்வி கேட்கத்தான் செய்வோம். 

ஒரு குற்றச்சாட்டை சொல்லும் போது அதற்கான ஆதாரத்தை சபாநாயகரிடம் காட்டுங்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. 

நான் 1984 இல் சட்டமன்றத்துக்குள் நுழைந்தேன். நான் ஒரு மூத்த உறுப்பினர். ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். அப்படி என்றால் எனக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும். 

முதலமைச்சர் என்னைப்போல் மக்கள் பணி செய்து விட்டு வந்தாரா… மொழிப்போருக்காக நான் சிறை சென்றிருக்கிறேன். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். மக்களுக்காக போராட்டம் செய்ததால் பலமுறை வேலூர் சிறைக்கு சென்றிருக்கிறேன். பள்ளி , கல்லூரி பருவத்தில் இருந்து, மொழி திராவிடம் என்ற பற்றோடு வளர்ந்து கொண்டிருக்கிறோம். 

இவர் புதிதாக பதவிக்கு வந்து விட்டதால் நாங்கள் எதிர்த்து கேள்வி கேட்டதற்காக, இப்படி செய்கிறார்கள். 

அதைத்தான் சொல்கிறேன் அதிகாரத்தின் உச்சம்.. அதனால்தான் ரெய்டு வந்திருக்கிறார்கள். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share