வைஃபை ஆன் செய்தது, “முன்னால் ஒரு மலை… பின்னால் ஒரு கடலாய்!
தத்தளிக்கும் படகெனவே மனது அலை பாயுதே!” என கவிதை வாசித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
வாங்க ப்ரோ.. அங்கிட்டும் இங்கிட்டும் தத்தித் தாவுற கேரக்டர் யாராம்?
விஜயபாஸ்கர் நேத்து திடீர்னு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்திச்சு தான் கைப்பட எழுதுன ராஜினாமா கடிதத்தை கொடுத்தாரு.. சபாநாயகரும் அதை ஏத்துகிட்டாரு..

அதோட நிற்காத விஜயபாஸ்கர், ”தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தைத் தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன். இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன்”ன்னும் அறிவிச்சு அதிமுகவை விட்டும் விலகிட்டாரு..
இப்ப விஜயபாஸ்கர் அடுத்து சேரப் போறது தவெகவிலா? திமுகவிலா?ன்னுதான் பட்டிமன்றம் நடக்குது..

இதை பத்தி திமுகவில ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு மறுபடியும் எங்ககிட்ட விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.. “நான் திமுகவில சேர தயாராக இருக்கிறேன்”ன்னும் சொன்னார்..
ஆனா எங்க தரப்புல, “இடைத்தேர்தல் முடியட்டும் அதுவரை பொறுமையா இருங்கன்னுதானே சொல்லி இருந்தோம்..
ஏன்னா இடைத்தேர்தலில், “அதிமுக எம்.எல்.ஏக்களை ’குதிரை பேரம்’ நடத்தி வளைச்சு போட்டிருக்கு தவெக”ன்னுதான் நாங்க பிரசாரம் செய்யனும்..
உங்களை நாங்க சேர்த்துகிட்டா, “நீங்களும்தானே அதிமுகவில இருந்து விஜயபாஸ்கரை சேர்த்திருக்கீங்க.. நீங்களும்தானே குதிரை பேரம் பேசுனீங்க?”ன்னு பதில் கொடுக்கும் தவெக.
அதனாலதானே இடைத்தேர்தல் முடியட்டும்.. பார்த்துக்கலாம்னு சொல்லி இருந்தோம்.. இப்ப நீங்க திடீர்னு ராஜினாமா செஞ்சுட்டீங்களே”ன்னு ரிப்ளை கொடுத்தோம்..
அதுக்கு விஜயபாஸ்கர், “அப்படி தவெக பிரசாரம் செஞ்சா அதுக்கு கவுண்ட்டர் கொடுக்கலாம்.. ”நான் திராவிட கொள்கைகளுக்காகதான் திமுகவுக்கு வந்தேன்”ன்னு சொல்லலாம்..
அதோட, “ஆதாயத்துக்காக கட்சி மாறனும்னா ஆளும் கட்சிக்குதானே போயிருக்கனும்.. கொள்கைக்காகவே திமுகவுக்கு விஜயபாஸ்கர் வந்தார்”அப்படின்னும் கவுண்ட்டர் கொடுக்கலாம்தானேன்னு பதில் சொன்னாரு…
இதை எங்க தரப்பு ரசிக்கலை.. அதனால அவசரப்படாதீங்க..வெயிட் பண்ணுங்க”ன்னு சொல்லிட்டோம்னு ஷேர் செஞ்சாங்க ப்ரோ..

ஸோ விஜயபாஸ்கர் அடுத்த மூவ் தவெகதானே ப்ரோ?
யெஸ் ப்ரோ.. தவெக தரப்புலதான் விஜயபாஸ்கர் மறுபடியும் மூவ் செய்யறார்.. விஜய்க்கு நெருக்கமான சர்க்கிளில் என்ன டெவலப்மென்ட்டுன்னு கேட்டப்ப, “ஆமாம்.. எங்ககிட்ட விஜயபாஸ்கர் ரொம்பவே சீரியசா பேசிகிட்டுதான் இருக்கிறார்.. இடைத்தேர்தலில் தாம் ரொம்பவே ஈஸியா ஜெயிச்சுடுவேன்னு சொல்றாரு..
அதோட, தான் மறுபடியும் எம்.எல்.ஏ.ஆகும் போது எனக்கு ‘அமைச்சர்’பதவி தருகிறோம்னு உத்தரவாதம் கொடுங்கன்னும் பிடிவாதமா கேட்கிறார்..
இதுதான் இங்கே சிக்கலா இருக்குது.. அவரை கட்சியில சேர்க்கிறதுல, இடைத்தேர்தலில் நிறுத்துறதுல எந்த சிக்கலும் இல்லை.. வழக்குகள் இருக்கிற நிலையில அவரை அமைச்சராக்குறோம்னு உத்தரவாதம் தர முடியாத நிலைமைதான் இப்ப எங்க சைடுல இருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ..
அதாவது, ஈஸியா திமுகவில சேரலாம்னு விஜயபாஸ்கர் போட்ட கால்குலேஷன் ஒர்க் அவுட் ஆகலை.. இன்னொரு பக்கம் விஜயபாஸ்கர் எதிர்பார்க்கிற ‘அமைச்சர்’ பதவி உத்தரவாதம் தவெக தரப்புல தரப்படலை.. அதனால என்னதான் செய்யுறதுன்னு ரொம்பவே பதற்றத்துலதான் இருக்கிறாராம் விஜயபாஸ்கர்..

என்னங்க ப்ரோ.. தவெக டிவி சேனல் எல்லாம் தொடங்கிட்டாங்க போல..
ஆமாங்க ப்ரோ.. இதை பத்தியும் விசாரிச்சப்ப 2 டிவி சேனல் விஷயம் நமக்கு கிடைச்சது.. தவெக தரப்புல என்ன சொல்றாங்கன்னா, “காவேரி டிவின்னு ஒரு சேனல் இருந்துச்சு இல்லையா? அதைத்தான் இப்ப வாங்கிட்டோம்.. “வெற்றி” டிவி-ன்னு பெயர் மாத்தி இருக்கிறோம்.. இப்போதைக்கு தவெகவோட அறிவிக்கப்படாத அப்பீசியல் டிவியா வெற்றி டிவி இருக்கும்.. இந்த வெற்றி டிவிக்கு பின்னாடி இருப்பது அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்”ன்னு சொல்றாங்க..
அதோட, “முன்னணி டிவி சேனல் நிர்வாகத்தோட இன்னொரு அமைச்சரான ஆதவ் அர்ஜூனா பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்கிறார்.. இந்த பேச்சுவார்த்தையில, “டிவி லைசென்ஸ் எங்ககிட்ட இருக்கட்டும்.. செலவுகளை எல்லாம் நீங்க பார்த்துக்குங்க.. ரெவின்யூ ஷேர் எவ்வளவுன்னு பேசுவோம்”னு டிவி சேனல் தரப்பு சொல்லி இருக்கு..
ஆனா அமைச்சர் தரப்புல, “அப்படி எல்லாம் பாதி பாதியா செய்ய வேண்டாம்.. மொத்தமா டிவி சேனலை கொடுத்துடுங்க.. அதுக்கான தொகையை பேசுவோம்”னு சொல்லி இருக்காங்க.. டாக்ஸ் ஓடிகிட்டுதான் இருக்கு”ன்னு சொல்றாங்க..
இனிமேல தவெக செய்திகளும் அதிரிபுதிரியா டிவி சேனல்களில் வலம் வரும் ப்ரோ என சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
