இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவதால் பாதிப்பா? – திருமா விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவதால் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளதாக இன்று (செப்டம்பர் 13)அறிவித்துள்ளன. அந்த வகையில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் , மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கத்திலிருந்தே ‘தவெக ஆட்சிக்கு மட்டும்தான் எங்கள் ஆதரவு; நாங்கள் தனித்தே இயங்குவோம்’ என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டு இருக்கின்றன. இப்போதும் அவர்கள் தெளிவுபட கூறி இருக்கிறார்கள் தவெக ஆட்சிக்கு எங்கள் ஆதரவு உண்டும். இதில் எந்தத் தயக்கமும் ஐயமும் இல்லை; ஆனால் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம். இப்படிப் போட்டியிடுவதால், இது தவெகவுக்கு எதிரான நிலைப்பாடு என்றோ திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாடு கருதத் தேவையில்லை. ஏனென்றால், இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி அமைப்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இல்லை; அதைக் கொண்டு ஆட்சியைத் தீர்மானிக்கப் போவதில்லை. எனவே, இந்தத் தேர்தலை நாங்கள் தனித்துச் சந்திக்கிறோம் என்று அவர்கள் விளக்கம் கூறியிருக்கிறார்கள். அது அவர்களுக்கான சுதந்திரம் மற்றும் உரிமை. இது எந்த வகையிலும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share