மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டி

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டியிட உள்ளதாக சென்னையில் இந்திய கம்யூஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டத்திற்கு பின் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிலவுகிற அரசியல் சூழலில் எந்த கூட்டணியிலும் இடம் பெறுவதில்லை என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். அந்த நிலைப்பாடு இப்பொழுதும் தொடர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு முடிவு செய்திருக்கிறது.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகத்தின் பொருட்டு, மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து, மக்கள் அதிகாரத்தின் மீது ஆளுநர் அமர்ந்து விடக்கூடாது, பிஜேபியினுடைய மறைமுக ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவை ஆதரித்தது வெளியிலிருந்து. அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கவில்லை, கூட்டணியிலும் நாங்கள் பங்கேற்கவில்லை.

இப்பொழுது இடைத்தேர்தல் இயல்பானதாக இல்லை. அது ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தலாகவே இருக்கிறது. எனவே இந்த இடைத்தேர்தலில், ஏற்கனவே நாங்கள் எடுத்த முடிவின்படி எந்த கூட்டணியிலும் இடம் பெறுவதில்லை என்கிற அந்த அரசியல் நிலைப்பாட்டில் நின்றே இடதுசாரிகள் இந்த தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது.

ADVERTISEMENT

நாங்கள் எங்கள் கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் பகிர்ந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே நிலை எடுத்திருக்கிறது. இன்றைக்கு திருச்சியில் மாநில செயலாளர் இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவிப்பார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய நிர்வாகக் குழு கூட்டத்தில் பல்வேறு திசைகளில் விவாதங்களை துவக்கியது. தோழர்களின் கருத்துக்களை அறிந்தது. நிறைவாக தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்றும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்றும் முடிவாகி இருக்கிறது. அதை அதிகாரப்பூர்வமாக மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் அறிவிப்பார்.”என தெரிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக போட்டியிடுவதாக அறிவித்து, நாதகவை தவிர மற்ற மூன்று கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இந்த நிலையில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் 5 முனைப்போட்டி என்ற சூழல் உருவாகி உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share