துவங்கிவிட்டதா த.வெ.க ஆட்சியில் தமிழ்நாட்டின் இருண்ட காலம்? தடுத்து மீட்குமா தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்கள்?

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

Will Dharapuram and Maduranthakam by-elections bring a recovery?

ராஜன் குறை

இருண்டகாலம் என்பதை குறியீடாகச் சொல்வார்கள்; தவெக ஆட்சியில் அதனை நேரடிப் பொருளிலும் பயன்படுத்தலாம். மின்சாரப் பற்றாக்குறையால் மக்கள் உண்மையிலேயே இருளில் அவதிப்படுகின்றனர். “ஓளி வேண்டும்” என்ற முழக்கத்துடன் பல நகரங்களில் மக்கள் இருட்டில் போராடும் காணொலிகளைக் காண முடிகின்றது. இரவு நேரங்களில் தொடர்ந்த மின்வெட்டால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுத் தவிக்கின்றனர் மக்கள்.

அது மட்டுமா பிரச்சினை? சிறு குறு தொழில் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழிற்பேட்டைகளில் செயல்படுவோர் குரல் கொடுக்கின்றனர். மின்சாரம் இல்லாமல் உற்பத்தியும், தொழில் துறையும் கடுமையாக பாதிப்படையத்தானே செய்யும்? இந்த செய்தி பரவினால் எப்படி வெளிநாடுகளிலிருந்து முதலீடு வரும்? எப்படி புதிய தொழில்கள் துவங்கப்படும்? ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தி.மு.க-வை வசைபாடுவதில்தான் மும்முரமாக இருக்கிறார். அவரால் மின்சாரத் துறையை நிர்வகிக்க முடியவில்லை என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

மின்சாரத்துறை என்பது ஒரு உதாரணம்தான். வருவாய்த்துறை, காவல்துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளிலும் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது; அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்கள். மக்கள் அவதிப்படுகிறார்கள். முறைகேடுகள் மலிகின்றன. ஆட்சியாளர்களோ ஊடகங்களில் பொய்ச்செய்திகளை பரப்பிக்கொண்டும், ரீல்ஸ் போட்டுக்கொண்டும் மாய உலகில் வாழ்கிறார்கள். ஏதாவது கேட்டால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அவகாசம் வேண்டும் என்று சால்ஜாப்பு சொல்கிறார்கள்.

புதிதாக ஒருவர் ஓட்டுனராகப் பணியாற்றத் துவங்குகிறார். அவர் சில விபத்துக்களை ஏற்படுத்தினால் பரவாயில்லையா? புதிதாகத் திருமணமானவர்கள் தனியாக வாழ்கிறார்கள். கணவனோ, மனைவியோ பாயாசத்தில் உப்பைப் போட்டால், குழம்பில் சக்கரையைப் போட்டால் பரவாயில்லையா? புதிதாக வந்தவர்கள் எந்த தவறையும் செய்யலாம். திறனின்றி இருக்கலாம் என்றால் எந்த நிறுவனமும் புதிதாக யாரையும் பணியிலேயே அமர்த்த முடியாது. புதிதாக நீச்சலடிப்பவர் மூச்சை அடக்கத் தவறினால் மூழ்கி இறந்துவிடுவார்.

ADVERTISEMENT

அரசியலில் ஈடுபடுகிறோம், ஆட்சிக்கு வர தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றால் அதற்காகத் தங்களை தயாரித்துக்கொள்ள வேண்டும். நிர்வாக நடைமுறைகளை கவனித்து பயிற்சி எடுக்க வேண்டும், அரசு நடைமுறைகளை கவனித்துப் பயில வேண்டும். அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டுப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றுமே செய்யாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, கற்றுக்கொள்கிறோம் அவகாசம் கொடுங்கள் என்று மக்களை பலிகடா ஆக்குவதா அரசியல்?

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சினைகள் தீவிரமானவை. முதல் பிரச்சினை, அதிமுக்கியமான பிரச்சினை அரசியலில் எந்த ஆர்வமும் இல்லாத, அரசியல் குறித்து சிந்திக்கவே முடியாத, அளவுகடந்த தற்காதல் (narcissism) என்ற நோயைத் தவிர வேறு எந்த நற்குணமும் இல்லாத ஒரு கதாநாயக நடிக பிம்பத்தை தலைவனாக முன்னிறுத்துவது. இது தமிழ்நாட்டு வரலாற்றில், இந்திய வரலாற்றில் இதுவரை நிகழாதது. இரண்டாவது பிரச்சினை, இப்படி அரசியல் பற்றேயில்லாத தலைமையால் கட்சியமைப்பு என்று எதையும் வலுவாக உருவாக்க முடியாததும், அதன் சமூக ஊடாட்டம் ஒருங்கிணைப்படாமல் இருப்பதும்;  மூன்றாவது பிரச்சினை அதற்கு எந்த கருத்தியல் அடிப்படைகளையும் வகுக்க முடியாமல், தி.மு.க வெறுப்பரசியலை மட்டும் செய்யும்போது, அது பாஜக-வின் தமிழ்நாட்டு முகவராக மதவாத அரசியலுக்கு பாதை சமைக்கும் கட்சியாக மாறுவது. இந்த மூன்று காரணங்களால்தான் அது பாஜக எதிர்ப்பு கூட்டணியிலிருந்து வந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளை நம்பாமல், குதிரை பேரம் மூலம் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்களை தங்கள் கட்சிக்குக் கொண்டுவர காய் நகர்த்துவதும், தாராபுரம்,மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தாங்கள் பேரம் பேசி வாங்கிய குதிரைகளை ஓடவிடுவதும். இந்த நான்கு அம்சங்களையும் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.

ADVERTISEMENT

வெற்றி என்ற பெயரில் வெறித்தனமாகப் பேசும் வெற்றுத் தலைமை

அரசியலுக்கு வந்து பெருவெற்றி அல்லது ஓரளவாவது வெற்றி பெற்ற நடிகர்கள் எல்லோருமே அரசியல் ஆர்வம் கொண்டவர்கள். வாழ்வனுபவங்கள் ஊடாகவோ, பலருடன் பேசி விவாதித்தோ, படித்து சிந்தித்தோ அரசியல் குறித்து புரிந்துகொண்டவர்கள். சமூக அமைப்பில் புழங்கி அதனைப் புரிந்துகொண்டவர்கள். அவர்களால் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இயல்பாகப் பேச முடியும். பிற கட்சிக்காரர்களிடம், தலைவர்களிடம் இயல்பாக உரையாட முடியும். முக்கியமாக அவர்கள் ஆதரவாளர்களிடம் கலந்து பேச முடியும்; அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று சிந்திக்க முடியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய்காந்த் ஆகியவர்கள் அரசியலில் ஈடுபட்டு கட்சிப் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்கள். தலைமைப் பண்பை வளர்த்துக் கொண்டவர்கள்.

நடிகர் விஜய் நாமக்கல் கோழிப்பண்ணையில் கூண்டில் முட்டையிடுவதற்கென்றே வளர்க்கப்படும் கோழி போல, சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிப்பதற்கென்றே வளர்க்கப்பட்டவர்; அவருக்கு சமூகத்தில் இயல்பாக நடமாடி பலருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்ததாகத் தெரியவில்லை. பிற நடிகர்களைப் போலவோ, அரசியல் தலைவர்களைப் போலவோ ஊடகங்களை சந்தித்து இயல்பாகப் பேச முடிவதில்லை. தேர்தல் பிரசாரத்திலும் எழுதிக் கொடுப்பதை படிப்பது, உணர்ச்சி வசப்பட்டு கத்துவது என்பது போன்ற நடைமுறைகளைத் தாண்டி இயல்பான பேச்சு என்பதைக் காண முடிந்ததில்லை.

அடுத்த நிலையில் பெரிய சிக்கல் என்னவென்றால் சட்டமன்றத்திலும் அவரால் விவாதங்களில் பங்கெடுக்க முடிவதில்லை. ஒரு முதல்வராக, காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராக அவர் பேசவேண்டிய சந்தர்ப்பங்களிலும் வேறு மந்திரிகளை பேச விட்டுவிட்டு வாளாவிருக்கிறார். இந்த பலவீனத்தை மறைக்க அவர் பேசும்போது சிறிதும் கண்ணியம் இல்லாமல் சைகை காட்டுவது, எதிர்கட்சியினரை இழித்துப் பேசுவது, “காட்டு காட்டென்று காட்டுவேன்” என்பது போன்ற கொச்சை சினிமா வசனங்களை பேசுவது என்று பதவியின் மாண்பை கேவலப்படுத்துகிறார். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதுள்ள காழ்ப்பினால் அருவருக்கத்தக்க உடல்மொழியை செய்து காட்டி அவப்பெயர் பெற்றுள்ளார் விஜய்.

நடிகர் விஜயின் இது போன்ற இழிசெயல்களை தவெக கட்சியினர், அவரை ஆதரிக்கும் பொது மன்ற கருத்தாளர்கள், ஊடகங்கள் எல்லாம் எப்படியெப்படியோ நியாயப்படுத்தினாலும், விஜயால் மனதை ஒருமுகப்படுத்தி பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு சிந்திக்க முடியுமா, நிர்வாகத்தை நட த்த முடியுமா என்ற பெரும் ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் மனதில் சிந்தனை இருந்தால், எண்ணங்கள் இருந்தால் அவை தானாக பேச்சில் வெளிப்படத்தானே செய்யும்? மனதின் வெற்றிடம்தான் வெறிக்கூச்சல் போட வைக்கிறது.  

கல்விப்புலத்தை பொறுத்தவரை ஆய்வு மாணவர் நேரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும். அப்படிச் சொன்னால்தான் அவர் ஆய்வேடு ஏற்றுக்கொள்ளப்படும். வேறு யாராவது எழுதிக் கொடுத்து ஆய்வேட்டை சமர்பிக்க க் கூடாது என்பதால் இந்த நேர்முகத் தேர்வு என்பது கட்டாயம். அதனை வைவா/விவா வோசி/வோசே (viva voce) என்று கூறுவார்கள். வாய்மொழித் தேர்வு எனலாம். ஒருவர் பிரச்சினைகளை உள்வாங்கி சிந்தித்துள்ளார் என்பது நிரூபணம் ஆகவேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு பிரஸ் மீட் எனப்படும் பத்திரிகையாளர் சந்திப்புதான் வைவா தேர்வு. மக்கள் சார்பாக ஊடகத்தினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் தலைவர்கள். நரேந்திர மோடி விஷயத்தில் பிரதமரான பிறகு ஊடகங்களிடம் அவர் பேச மறுத்தது அவரது எதேச்சதிகார மன நிலையாகவே விமர்சிக்கப்பட்டது. மிக மோசமான ஒரு மக்களாட்சி முன்மாதிரியை அவர் உருவாக்கினார். அவரை முன்னுதாரணமாக வைத்து அதே போன்ற நட த்தையை நியாயப்படுத்துவது மக்களாட்சி மேலும் சீரழியவே வழி வகுப்பதாகும். தமிழ்நாட்டு ஊடகங்கள் இந்த சீரழிவை நியாயப்படுத்தி மக்களுக்கு துரோகம் செய்கின்றன. ஊடகங்களை உதாசீனம் செய்யும் முதல்வர் விஜயை கண்டிக்க மறுக்கின்றன. 

இந்த நிலையில் அரசை வழிநட த்துவதில் பெரியதொரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் முதல்வர் தினசரி இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும். அன்றாட நிர்வாகப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வலியுறுத்த வேண்டும். மக்களாட்சியில் முதல்வர், பிரதமர் பதவிகளெல்லாம் பெரும் பொறுப்புகள்தான்; முட்கிரீடங்கள்தான். அந்த பொறுப்பை சுமப்பது எளிதானதல்ல. முதல்வரால் சிந்தித்து முடிவுகள் எடுக்க முடியாது என்று உணரப்பட்டால், அவரை ஒவ்வொருவரும் தங்கள் முடிவுக்கு நகர்த்தவே முயற்சிப்பார்கள். அப்போது நிர்வாகத்தில் குழப்பமே உருவாகும். பணிகள் தேங்கும். யாரும் பொறுப்பெடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் இப்போது தமிழ்நாட்டு அரசில் நடப்பதாகத் தெரிகிறது.

விடுமுறை நாளையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கிளாம்பாக்கத்தில் பயணிகள் பரிதவிக்கிறார்கள். ஆம்னி பேருந்துகள் விமான கட்டணத்தை வசூலிக்கின்றன. யாரும் பொறுப்பேற்பதில்லை. முதல்வர் லண்டன் சென்றுவிட்டார். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இடதுசாரி அமைப்புகள் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று மக்களாட்சி உரிமைகளை பறிக்கும் சுற்றிக்கை அனுப்பப் படுகிறது. கேட்டால் தலைமைச் செயலர் எங்களைக் கேட்காமல் அனுப்பிவிட்டார் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். பழனியில் கோயில் நிலத்தை அதிகாரிகள் விற்பனை செய்கிறார்கள். அந்த துணிச்சல் எப்படி வந்தது? போதைப்பொருள் விற்பனையைக் குறித்து புகாரளித்த மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள். காவல் நிலைய மரணங்கள் அதிகரிக்கின்றன.

அரசின் முடிவுகள் தான் தோன்றித்தனமாக எடுக்கப்படுகின்றன. பரந்தூர் விமான நிலைய திட்ட த்தை எந்த மாற்று ஏற்பாடும் இல்லாமல் கைவிடுகிறார்கள். சரி விவசாயம், சுற்றுச்சூழலுக்காக செய்தார்கள் என்று நினைத்தால் பிறகு அங்கே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்று கூறுகிறார்கள். மாநிலத்தின் எதிர்காலத்தை பெருமளவு பாதிக்கும் முடிவுகளை சட்டமன்றத்திலோ, பொதுமன்றத்திலோ விவாதிக்காமல் எடுக்கிறார்கள். திடீரென பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைப்போம் என்று அறிவிக்கிறார்கள். கடலைப் பார்த்தபடி முதல்வர் அமர வேண்டும் என்று ஜோசியர் சொன்னதால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது. எவ்வளவு விபரீதமான, அபத்தமான முடிவு அது என்று பொதுமன்ற சிந்தனையாளர்களும், அங்கே வசிக்கும் மீனவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஒரு வேளை, மலை உச்சியில் முதல்வர் அமர வேண்டும் என்று ஜோசியர் சொல்லியிருந்தால் தொட்ட பெட்டாவில் தலைமைச்செயலகம் கட்டியிருப்பார்கள். நீலகிரியின் நற்பேறு அது தப்பித்தது.

ஒரு நடிக பிம்பத்தின் தற்காதலைத் தவிர எந்த தலைமைப் பண்பும், ஆளுமையும் இல்லாத பேசாத பொம்மை முதல்வரைச் சுற்றி நிழல் அதிகார மையங்கள் பெருகுகின்றன. விஷ்ணு ரெட்டி என்ற ஆந்திர மாநிலத் தொழிலதிபர் அவரது நிழலாக இருக்கிறார். கல் குவாரி, மணல், மதுபானம் போன்ற தொழில்களில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அவர் முதல்வரின் நீண்ட கால நண்பர் எனப்படுகிறது; அதற்காக அவர் எப்படி அரசு நிர்வாகத்தில் பங்கேற்க முடியும் என்பது தெளிவாக இல்லை. அவரை ஆலோசகராக நியமித்துள்ளார்கள் என்று கூறப்பட்டாலும், அதற்கான அரசாணை பொதுமன்றத்தில் பகிரப்படவில்லை. சட்டமன்றத்திலும், வெளியிலும் முதல்வருக்காக பேசுபவராக ஆதவ் அர்ஜுனா என்ற லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன்தான் செயல்படுகிறார். அவர்தான் நிழல் முதல்வர் என பலரும் கருதும்படியாகத்தான் இருக்கிறது. முற்றிலும் பொறுப்பற்று, பண்பற்று பேசக்கூடியவராகவே ஆதவ் அர்ஜுனா வெளிப்படுகிறார். ஆயிரம் உதாரணங்கள் தரலாம்.

கட்டமைக்கப்படாத கட்சி அணிகள்

பொதுவாக அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பாலமாக அரசியல் கட்சிகள், முக்கியமாக ஆளும் கட்சிதான் பணியாற்ற வேண்டும். இயந்திரங்களில் உராய்வு ஏற்படாமல் தவிர்க்கும் லூப்ரிகேஷன் ஆயில் போன்றது கட்சி அமைப்பு. கட்சியினர் தரும் தகவல்களை வைத்துதான் அமைச்சர்கள் அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியும். தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சியமைப்பு ஏதோ விற்பனை முகவர்களை நியமிப்பது போலத்தான் நடந்துள்ளதே தவிர, கட்சி அணிகளை உருவாக்குவது போல நடக்கவில்லை.

பல்வேறு இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதே தவெக கட்சி நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பாளர்கள், அவர்களை வழி நட த்தும் இரண்டாம் நிலைத் தலைவர்கள் என்றெல்லாம் கட்சி கட்டமைப்பு உருவாகவில்லை. யார் யாரோ கட்சியில் இயங்குகிறார்கள். கட்சியில் பணிபுரியும் பெண்களே கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் தருகிறார்கள். தலைமை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நீதிமன்றத்திற்கு சென்ற பாலியல் துன்புறுத்தல் வழக்கை கட்ட பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கிறார்கள்.

விஜயின் நடிக பிம்பம் மட்டுமே கட்சியின் ஒரே முதலீடு, பிராண்ட். அதை இன்ஸ்டா ரீல்கள், வாட்ஸ் அப் மூலம்  மோசடி பொய் பிரசாரம் செய்கிறார்கள். இப்போது இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அந்த பொய் பிரசாரம் பெரும் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. யார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று ஊடகங்களில் பேசுபவர்கள் சிரித்து மழுப்புகிறார்கள். யார் செய்தால் என்ன, விஜய் அதனை கண்டித்து அறிக்கை விட வேண்டாமா என்று கேட்டால், அவருக்கு நாட்டில் செல்வாக்கு பெருகினால் அவர் ஏன் தடுக்க வேண்டும் என்று அவர் ஆதரவாளர்கள் வெட்கமின்றி கேட்கிறார்கள். அந்த மோசடி பிரசாரத்தினால் அவரை கருத்துக் கணிப்பில் 9% பேர் பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கிறார்கள் என்றால் தவெக கட்சியினர் புளகாகிதம் அடைகிறார்கள். விஜய் பிரதமாரக வேண்டும் என்று அமைச்சர்களே சட்டமன்றத்தில் பேசுகிறார்கள். இப்படி ஒரு வெட்கமற்ற அரசியல் மோசடி எங்காவது நடந்திருக்குமா என்று வியப்பாக இருக்கிறது.

கட்சியின் கருத்தியல்

தவெக கட்சியின் ஒரே அரசியல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான வெறுப்புப் பிரசாரம். எப்படியாவது திராவிட இயக்கத்தை, தி.மு.க-வை பலவீனப்படுத்தி அரசியல் களத்திலிருந்து அப்புறப் படுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையுமே விஜய், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்றவர்கள் பேசுவதில்லை. தப்பித் தவறி கூட பாஜக-வை எதிர்த்து ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அப்படியானால் என்ன பொருள்? பாஜக-வின் முகவர்களாக செயல்படுகிறார்கள் என்றுதானே கருத முடியும். பேச்சுக்கு பாஜக கொள்கைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுவிட்டு வெளியில் சமரசம் செய்துகொள்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், கிறிஸ்துவ மத அடையாளத்தை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். இது அவர்களுக்கு எதிராக இந்து மத அடையாளத்தை அனுமதிக்கும் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது. அதாவது பாஜக-வின் மதவாத அரசியல் உள்ளே நுழைய உடைப்பேற்படுத்தித் தருகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியை உள்ளிழுத்ததன் மூலம் இந்தியா கூட்டணியில் உடைப்பை ஏற்படுத்தி பாஜக-விற்கு உதவியுள்ளார்கள். காங்கிரஸும், விசிகவும் தி.மு.க-வுடன் இனி அணிசேர முடியாத நிலையை உருவாக்கியவுடன், அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்களின் குதிரை பேரத்தை முடித்து அந்த இரு கட்சிகளையும் புறக்கணிக்கும் திட்ட த்தில் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதற்காக 25 அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்களைக் கொண்ட குதிரைபேர அணியை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

இடைத்தேர்தல்களில் ஓடும் பேரக் குதிரைகள் 

இதுவரை முன்னோட்டமாக ஆறு அ.இ.அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிந்த கையோடு அவர்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளார்கள். இது குதிரை பேரமல்ல என்று தவெக சொன்னால் குழந்தை கூட நம்பாது. அப்படி அது குதிரை பேரமல்ல என்று நிரூபிக்க வேண்டுமானால் ஒரே ஒரு வாய்ப்பு தவெக-விற்கு இருந்தது. அது அவர்கள் வெற்றிபெற்ற அதே தொகுதிகளில் மீண்டும் தவெக வேட்பாளர்களாக நிறுத்தாமல் இருப்பது. ஆனால் அப்படி செய்தால் மேலும் வரிசையில் காத்திருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள் அல்லவா? அதனால் பேரக் குதிரைகளுக்கே மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒரு தொங்கு சட்டமன்றம் அமையாததால், இப்படியான குதிரை பேரங்கள் நடந்ததில்லை. தவெக-விற்குக் கூட காங்கிரஸ் 5, விசிக, சிபிஐ, சிபிஐஎம், ஐயுஎம்எல் தலா இரண்டு என்று ஆதரவு அளித்த தில் பெரும்பான்மை கிடைத்துவிட்டது. உண்மையிலேயே மதச்சார்பற்ற கொள்கை இருந்தால், பாஜக ஆட்சியை பாசிசம் என்று கருதினால், இவர்கள் யாரும் ஆதரவை விலகிக்கொள்ளப் போவதில்லை. ஆனால், தவெக உள்ளத்தில் நேர்மையில்லாததால் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. தவெக-தான் இனிமேல் அ.இ.அ.தி.மு.க என்று மீண்டும், மீண்டும் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். அதனால் தவெக-வின் முக்கிய நோக்கம் இப்போதுள்ள கூட்டணியை வலுப்படுத்துவதல்ல. அ.இ.அ.தி.மு.க-வை உட்செரிப்பதுதான்.

இப்போது நிறுத்தப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க-வில் வெற்றி பெற்று உடனே கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் தவெக உறுப்பினர்களாக மக்கள் தேர்வு செய்துவிட்டால் அது தயாராக இருக்கும் மற்ற அ,இ.அ.தி.மு.க-வினருக்கு காட்டப்பட்ட பச்சை விளக்காகிவிடும். மேலும் 20 பேராவது பதவி விலகி 25-30 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தி அ.இ.அ.தி.மு.க குதிரைகளை தவெக லாயத்திற்குக் கொண்டுவந்துவிட்டால் அதன் பிறகு சுதந்திரமாக பாஜக இட்ட பணிகளை செய்து முடிக்கலாம்.

தவெகதான் அடுத்த அ.இ.அ.தி.மு.க என்றால், பாஜக கூட்டணியில் அந்த இடம் தவெக-விற்குத்தானே? எடப்பாடியால் ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்ற முடியாத தி.மு.க-வை நடிக பிம்பத்தால் அகற்றிய, ஆளுமையுமில்லாத, கட்சியுமில்லாத, கொள்கையும் இல்லாத விஜயை தங்கள் அணிக்கு வரவேற்பதில் பாஜக-விற்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? அதனால்தான் பாஜக-வில் ஒரு தரப்பினர், உதாரணமாக தமிழிசை செளந்திரராஜன் , இப்போதே தவெக ஆதரவு கருத்துக்களை பேசி வருகிறார்கள்.

இந்த இரண்டு இடைத்தேர்தல் முடிவுகள்தான் இந்த குதிரைபேர பாதையை தடுத்து நிறுத்தவேண்டும். அது மட்டுமல்லாமல் தவெக என்ற அழிவு சக்தி உருவாக்கும் இருண்ட காலத்திற்குள் சென்று விடாமல் தமிழ்நாட்டை மீட்க வேண்டும். தாராபுரம், மதுராந்தகம் மக்கள் கையில் முக்கியமான தீர்ப்பு இருக்கிறது.   

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share