முதல்வர் விஜய் லண்டனில் யார் யாரைச் சந்தித்தார், எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு வருகிறது என்பதை வந்தவுடன் அவர் அறிவிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பல இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் சபாநாயகராகப் பணியாற்றிய காலம் போய், இன்றைக்கு ஒரு மதம் சார்ந்த சபாநாயகரையும், ஒரு மதம் சார்ந்த அமைச்சர்களையும் சட்டமன்றத்தில் பார்க்க முடிகிறது. இதை நயினார் நாகேந்திரன் சொன்னால் எல்லாமே தவறாகப் பார்க்கிறார்கள்; இதனைப் பொதுமக்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். சட்டமன்றத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதை இன்று நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்; பலர் அதனை ரசிக்கின்றனர், ஆதரவு தருகின்றனர், ஆனால் நிறைய பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் பேசும்போது எம்.எல்.ஏ.க்கள் மாறி மாறி ஒருவர் குடும்பத்தைப் பற்றிப் பேசுவதும், ‘மாமாவிடம் போய் கேள், அப்பாவிடம் போய் கேள்’ என்று சொல்வதும், பைபிளில் உள்ள வசனங்களைச் சொல்வதும் ஏற்புடையதா என்பதை நாட்டு மக்கள் தான் சிந்திக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக முதல்வர் விஜய் லண்டனுக்கு சொந்த வேலையாகப் போய் உள்ளாரா? அவருடன் யாரெல்லாம் போய் இருக்கிறார்கள் என்பது தெரியாது; யாரெல்லாம் கூட்டிச் சென்றார்கள், அரசு செலவில் யாரெல்லாம் உடன் சென்றிருக்கிறார்கள் என்பதும் தெரியாது. உண்மையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகச் சென்றுள்ளாரா இல்லையா? இந்த மூன்று நான்கு நாட்களில் அவர் எத்தனை பேரை சந்திக்க முடியும் என்பதெல்லாம் கேள்விக்குறி; அதற்கெல்லாம் அவர் ஊர் திரும்பியவுடன் பதில் சொல்ல வேண்டும். சொந்த வேலையாகச் சென்றிருந்தால் நாம் ஒன்றும் சொல்ல முடியாது, ஆனால் அவர் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகப் போயிருக்கிறேன் என்று சொன்னால், யார் யாரைச் சந்தித்தார், எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு வருகிறது என்பதை வந்தவுடன் அவர் அறிவிக்க வேண்டும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நான்தான் தொழில்துறை அமைச்சராக இருந்தேன். அப்பொழுது மோட்டரோலா, நோக்கியா, ஃபாக்ஸ்கான், டெல், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் புரட்சித்தலைவி அம்மாவின் காலத்தில்தான் வந்தன. அப்போதெல்லாம் தொழில்துறை அமைச்சர்கள்தான் அதற்கான வேலைகளைச் செய்வார்கள். இப்போது மதிப்பிற்குரிய முதலமைச்சர் போவதாகச் சொல்கிறார்கள்; யாரைப் போய் பார்க்கப் போகிறார், என்ன செய்யப் போகிறார் என்பது அவர் திரும்பி வந்து சொன்னால்தான் தெரியும்” என்றார்.
முன்னதாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். அதேசமயம் நேற்று நடிகர் அஜித், சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ பந்தயத் தொடரின் 5-வது சுற்றில் பங்கேற்றார். அஜித்தின் கார் பந்தயத்தைப் பார்ப்பதற்கு நடிகை திரிஷாவும் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்திற்கு வந்திருந்தார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் லண்டனுக்கு சொந்த வேலையாகப் போய் உள்ளாரா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
