லண்டன் சில்வர் ஸ்டோன் மோட்டார் கார் பந்தய களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் இன்று இந்திய நேரப்படி இரவு 9.45 மணியளவில் தொடங்கி வைத்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். அதேசமயம் நடிகர் அஜித் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ பந்தயத் தொடரின் 5-வது சுற்றில் பங்கேற்றார்.
இந்த சுற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய கார் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் பச்சை கொடி காட்டி தொடங்கி வைப்பார் என்று மிச்செலின் லீ மான்ஸ் கப் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதையொட்டி இன்று கார் பந்தய களத்துக்கு சென்ற முதல்வர் விஜய், அஜித்தை பார்த்ததும் ஓடி சென்று கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து கூறினார் .
தொடர்ந்து இருவரும் கார் பந்தயம் தொடர்பாக தீவிரமாக பேசிக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அனைவரும் ரேஸ் டிராக்கிற்கு சென்றனர். அங்கு பந்தயக் கார்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.
இதில் சர்வதேச பந்தய வீரராகக் களம் காணும் அஜித் LMP3 Pro/Am பிரிவில் ‘Ajith RedAnt by Virage’ அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட ‘Ligier’ பந்தயக் காரை இயக்குவதற்காக தயாராக காரில் அமர்ந்திருந்தார்.
அவர் அருகே சென்ற முதல்வர் விஜய், கை கொடுத்து மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கார் மீது அமர்ந்தவாறு போஸ் கொடுத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து இந்திய நேரப்படி 9.45 மணிக்கு, கொடியசைத்து கார்பந்தயத்தை தொடங்கி வைத்தார்.
அஜித்தின் கார் ரேஸை பார்ப்பதற்கு நடிகை திரிஷாவும் சில்வர் ஸ்டோன் பந்தய களத்துக்கு வந்திருந்தார். பால்கனியில் முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ரேஸை பார்த்துக் கொண்டிருந்தபோது, திரிஷா ஓடிவந்து விஜய் அருகில் நின்று சீறிப்பாயும் கார்களை பார்க்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
முன்னதாக சில்வர் ஸ்டோனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அஜித், “34 ஆண்டுகளாக திரையுலகில் எனது நண்பராக பயணித்த விஜய் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பிஸியான அட்டவணைக்கு மத்தியில் எங்களை ஊக்குவிப்பதற்காக இங்கு வந்திருக்கிறார். அவருக்கு நன்றி.
இதுபோன்ற பந்தயங்களை வருங்காலத்தில் சென்னை மற்றும் இந்தியாவில் நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடல்களை பார்வையிடவே அழைப்பு விடுக்கப்பட்டது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
