தமிழக வரலாற்றில் அநாகரிகமான டம்மி முதல்வர் – உதயநிதி விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Udhay

தவெக அரசின் வீழ்ச்சிக்கு இந்த இடைத்தேர்தலில் திமுக பெறும் வெற்றி ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “திராவிட முன்னேற்ற கழகம் இன்னும் இரண்டு நாட்களில் முப்பெரும் விழாவை கொண்டாட இருக்கிறோம். 76 ஆவது ஆண்டு நிறைவு செய்து 77வது ஆண்டில் அடி எடுத்து வைக்கப் போகிறது திமுக. இந்த 77 வருடங்களில் நமது இயக்கம் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும் பார்த்து உள்ளது. தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு என்றும் மக்களோடு நிற்கும் இயக்கம்தான் திமுக. இன்னும் சொல்லப்போனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்து நிற்கிறோம். ஆனால் இன்று ஒரு சிறப்பான எதிர்க்கட்சியாக மக்களோடு நிற்கக்கூடிய எதிர்க்கட்சியாக நாம் செயல்பட்டு வருகிறோம்.

ADVERTISEMENT

தமிழகத்தில் டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. இந்த ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறிக்கொண்டே வருகிறது. இதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்டால், இங்கிருக்கும் முதலமைச்சரால் பதில் சொல்ல இயலவில்லை.

பதில் சொல்ல முடியாததால், நமது தலைவர் மீதும் கழகத்தின் மீதும் இன்று ஒவ்வொரு நாளும் பல்வேறு அவதூறுகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழக வரலாற்றிலேயே இப்படி ஒரு அநாகரிகமான டம்மி முதலமைச்சரை நாம் அனைவரும் பார்த்ததே கிடையாது; வரலாற்றில் இதுதான் முதல் முறை. தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள்; கடந்த நான்கு மாதங்களில் ஏதாவது ஒரு திட்டத்தையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது.

ADVERTISEMENT

நாம் கொண்டு வந்த, நமது தலைவர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி இந்த அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. நாம் கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டி, அவர்கள் கொண்டுவருவது போல் பொய்யைப் பரப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல், அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த காரணத்தினால்தான் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு இந்த இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் இந்த உறுதி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இடைத்தேர்தலில் இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, டம்மி முதலமைச்சருக்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share