”வெளிநாட்டிலிருந்து வெறும் புகைப்படங்கள் தான் வருது” : முதல்வர் விஜய்யை விமர்சித்த ஈபிஎஸ்

Published On:

| By Kavi

வெறும் புகைப்படங்கள்தான் வருகின்றன என முதல்வர் லண்டன் சென்றதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சி அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 13) கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”இன்னைக்கு புதிதாக ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கம், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களை, தெருவிலே விளையாடிக் கொண்டிருக்கின்ற குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வது போல, இழுத்துக் கொண்டார்கள்.

அதனால் இரண்டு தொகுதிக்கு இப்போது தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இது எதனால் வந்தது? அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வெற்றி பெற்றவர்கள். அந்தத் தொகுதியிலே இருக்கின்ற நம்முடைய கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்களின் உழைப்பால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உழைப்பால் வெற்றி பெற்றார்கள்.

ADVERTISEMENT

ஆக, எந்தக் காரணமும் இன்றி தன்னலத்திற்காக, குதிரை பேரத்திற்கு விலைபோய், இன்றைக்கு ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில், நம்முடைய கழக வேட்பாளராக வெற்றிபெற்று வந்த அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வைத்து, ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொந்தக் காலில் நிற்கவில்லை, இரவல் காலில் நின்று கொண்டிருக்கிறார்கள். இன்றைக்குக் கூட்டணிக் கட்சியில் இருக்கின்றவர்கள் விலகிக் கொண்டால் அவர்களுடைய ஆட்சி கவிழ்ந்துவிடும்.

ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்துவிட்டன. மக்களுக்காக என்ன திட்டங்களைக் கொடுத்திருக்கின்றார்கள்? தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவே இல்லை. ரீல் விட்டே காலத்தைக் கழிக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் எந்தவொரு நன்மையும் செய்யவில்லை. புயல், வெள்ளம், வறட்சி வந்தபோது எதற்காவது குரல் கொடுத்தார்களா? அல்லது மக்களைப் போய் பார்த்தார்களா? எதுவுமே செய்யாமல் உழைப்பும் இல்லாமல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தான் இது. சிந்தித்துப் பாருங்கள்.

ADVERTISEMENT

அண்ணா திமுக 30 ஆண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி, பொன்விழா கண்ட கட்சி, நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கிய கட்சி. இந்த டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகச் சட்டபூர்வமாக இந்த மக்களுக்கு அந்த அதிகாரத்தைப் பெற்றுத் தந்த கட்சி அண்ணா திமுக.

எல்லா மாவட்ட விவசாயிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற அடிப்படையில், மத்திய அரசோடும் கர்நாடக அரசோடும் போராடி நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீரினை முழுமையாகப் பெற்றுத் தந்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

விவசாயிகளுக்கு எப்பொழுது பிரச்சனை ஏற்பட்டாலும் உடனுக்குடன் வந்து தீர்த்து வைத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை உடனுக்குடன் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து, விவசாயிகள் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் அவர்களின் வங்கி கணக்கிலேயே பணத்தை ஒதுக்கித் தந்த அரசு அண்ணா திமுக அரசு.

இன்றைக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுவிட்டார். பரவாயில்லை, வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து புதிய தொழில்களைத் தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால், பத்திரிகைகளில் புகைப்படங்கள் தான் வருகின்றன.

மின்சாரத் தடை அடிக்கடி ஏற்படுகிறது, மின்கட்டண உயர்வு. 2011-இல் அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற போது கடுமையான மின்வெட்டு இருந்தது. பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக அம்மா மாற்றிக் காட்டினார். மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. அண்ணா திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

இன்றைக்கு எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம். தேர்தல் நேரத்தில் குறு, சிறு விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் கொந்தளித்து ஆங்காங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம் இது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் சரியாகக் கொள்முதல் செய்யாமல், திறந்தவெளியில் கொட்டி வைத்திருப்பதால் மழையில் நனைந்து முளைத்து வீணாகிறது. இதை சட்டமன்றத்தில் நான் குறிப்பிட்டேன், உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எந்தப் பதிலும் இல்லை. விவசாயிகளைப் பற்றிப் பேசுகின்ற ஒரே கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். சட்டமன்றத்தில் விவசாயிகளின் கஷ்டங்களை, துன்பங்களை, வேதனைகளைப் புரிந்து குரல் கொடுப்பது அண்ணா திமுகதான். ஆனால் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. விவசாயிகளின் சாபத்தைத் தேடிக் கொண்டால் நிச்சயமாக வரும் தேர்தலில் அது எதிரொலிக்கும்” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share