தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் தவெக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்குகள் குறித்துப் பேசுவோம் என பெ.சண்முகம் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்தனர். அதேசமயம், முதல்வர் விஜய் தான் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 13) கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், “வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர் மறைவினால் தான் இடைத்தேர்தல் வரும். ஆனால், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று . தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 20 நாட்களுக்குள் கட்சி மாறி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததன் விளைவாகவே இது ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்ட நிலையில் இதனை எதிர்கொண்டாக வேண்டும் என்ற சூழலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறோம்.
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆளும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோதப் போக்குகள் குறித்துப் பேசுவோம். திமுக ஆட்சியில் கடுமையாக எதிர்க்கப்பட்டு நிறுத்திவைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் மசோதாவைத் தற்போதைய அரசு கடைசி நாளில் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “நஞ்சை நிலங்களைப் பிற பயன்பாட்டுக்கு மாற்றுவதில் ஊராட்சி மன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் அதிகாரத்தை நீக்கிவிட்டு, நகர்ப்புற நிர்வாக இயக்குநருக்கு அதிகாரம் வழங்கிச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். நிலம் தொடர்பான முழு விவரங்களும் வருவாய்த் துறைக்கே தெரியும் எனும் சூழலில், அத்துறைக்குத் தொடர்பில்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அரசியல் களத்தில் பொதுவெளியில் அமைச்சர்களும் தலைவர்களும் நாகரிகமற்ற முறையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது. இதற்குப் பொதுக்கூட்டங்களில் ஆரவாரம் செய்வதும் தமிழக அரசியலின் தரம் தாழ்ந்த நிலையைக் காட்டுகிறது. பெண்களை அவதூறாகப் பேசுவோர் மீது அந்தந்தக் கட்சிகளின் தலைமை கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் இதுபோன்ற தரக்குறைவான பேச்சை அனுமதிக்காது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. குற்றங்கள் நடக்காத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தவறிழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை பாய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அரசு கூறினாலும், எந்தெந்த நிறுவனங்கள், எத்தகைய உற்பத்தி, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்ற எந்த விவரமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. அந்நிய மூலதனத்தை மட்டுமே நம்பியிராமல் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும். அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் கோவையின் சிறுகுறு தொழில்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளன; அவற்றுக்கான கடன் உதவி, மானியம், வரிச் சலுகைகள் எதுவும் அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.
புதிய தலைமைச் செயலகம் குறித்துப் பேசுகையில், “தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நிலவுவதால் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் இதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பொருத்தமான இடமல்ல. 25 ஏக்கர் பரப்பளவில் இதனை அமைத்தால் அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைவிடச் சிறந்த மாற்று இடங்கள் சென்னை மாநகருக்குள் உள்ளன; குறிப்பாக, அரசு வசமுள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 160 ஏக்கர் நிலம் போன்ற இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேறு பொருத்தமான இடத்தைக் கண்டறிய வேண்டும்” என்றார்.
