தமிழக அரசின் 2026ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன் வடிவிற்கு பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
2026ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன் வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அறிமுகம் செய்து முன்மொழிந்தார்.
அதில், “2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 14/2019), மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு வழிவகுக்கிறது. கூறப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (a) கூற்றின்படி, தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நூறு ஏக்கருக்கு குறையாத தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. கூறப்பட்ட சட்டத்தின் 46 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி, தனியார் பல்கலைக்கழகம் கலைக்கப்படும் செயல்முறையின் போது அதன் நிர்வாகச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, பல்கலைக்கழகத்தை நிறுவும் அமைப்பு குறைந்தது ஐம்பது கோடி ரூபாயில் நிலையான அறக்கட்டளை நிதியத்தை நிறுவுதல் வேண்டும்.
ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மீதான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில், அமைச்சரவையின் செயலாளரின் கீழ் முறையான ஒழுங்குமுறை நீக்கத்தை மேற்கொள்ள, இந்திய அரசு, அமைச்சரவைச் மற்றும் ஒழுங்குமுறை நீக்கத்திற்கான இரண்டாம் கட்டப் பணிக்குழுவை அமைத்துள்ளது. இணக்கங்களைக் குறைத்தல் ஒன்றை அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலத் தேவையை நீக்குவது குறித்தும், உயர்கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான குறைந்தபட்ச அறக்கட்டளை நிதித்தேவைகளை அகற்றுவது குறித்தும் மாநிலத் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டங்களின் தொடர்புடைய வகைமுறைகளைத் திருத்தம் செய்ய கூறப்பட்ட பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.
மேற்கண்ட பரிந்துரைகளை கவனமாக ஆய்வு செய்த பின்னர், பல்வேறு வசதிகளை அமைக்கத் தேவையான குறைந்தபட்ச நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு, 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ், (தமிழ்நாடு சட்டம் 14/2019) தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலத் தேவையை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் நிலப்பற்றாக்குறை இருப்பதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க குறைந்தபட்சம் பன்னிரண்டு ஏக்கர் நிலம் தேவை என அரசு முடிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியைத் தவிர, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க குறைந்தபட்சம் பதினெட்டு ஏக்கர் நிலம் தேவை என அரசு முடிவு செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளைத் தவிர மற்ற பகுதிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க குறைந்தபட்சம் இருபத்தைந்து ஏக்கர் நிலம் தேவை என அரசு முடிவு செய்துள்ளது. மேலும், செயல்முறையை எளிதாக்கும் வகையில், 2019 ஆம் ஆண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்கீழ் தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தேவையான நிலையான அறக்கட்டளை நிதியைக் குறைக்ககவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தை, மேற்கண்ட சட்டத்தின்கீழ் ஏற்கனவே மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும், 2018 ஆம் ஆண்டு சிவ நாடார் பல்கலைக்கழகச் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 41/2018) மற்றும் 2018 ஆம் ஆண்டு சாய் பல்கலைக்கழகச் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 42/2018) ஆகியவற்றின்கீழ் முறையே நிறுவப்பட்டுள்ள சிவ நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, மேற்கண்ட நோக்கங்களுக்காக, மேற்சொன்ன சட்டங்களின் தொடர்புடைய வகைமுறைகளைத் தகுந்தவாறு திருத்தம் செய்வதென அரசு முடிவுசெய்துள்ளது.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாமக உறுப்பினர் கணேஷ் குமார் பேசுகையில், “இந்த சட்ட முன் வடிவம் உயர் கல்வியை பொறுத்தவரை தனியார் மயமாக்குவதையும், வணிக மையமாக்குவதையும் ஊக்குவிக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி கருதும் காரணத்தால் ஆரம்ப நிலையிலேயே இதை நாங்கள் எதிர்க்கிறோம்.” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து பேசுகையில், இந்த சட்டம் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும். அந்த அடிப்படையில் அரசே ஏற்று நடத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி, ” சட்ட திருத்த முன் வடிவ குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது தனியாருக்கு சாதகமாக வரும் என்றே எண்ணுகிறோம். எனவே முழுமையாக அரசே ஏற்று நடத்துவதே பொருத்தமாக இருக்கும்” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
